அதிகாரம் 54
அம்மோரோனும், மரோனியும், கைதிகளை பரிமாற்றம் செய்யும் விஷயமாய் பேச்சு வார்த்தை நடத்துதல் – லாமானியர் திரும்பிப்போகவும், தங்களின் கொலைக்கேதுவான தாக்குதல்களைக் கைவிடவும் வேண்டுமென்று மரோனி கோருதல் – நேபியர் தங்களின் யுத்தக் கருவிகளை ஒப்படைத்துவிட்டு, லாமானியருக்குக் கீழ்ப்பட்டவர்களாயிருக்கும்படி அம்மோரோன் கோருதல். ஏறக்குறைய கி.மு. 63.
1 இப்பொழுதும், அந்தப்படியே, நியாயாதிபதிகளின் இருபத்தி ஒன்பதாவது வருஷத்தின் துவக்கத்திலே, தான் கைதிகளை பரிமாற்றம் செய்ய விரும்புவதாக அம்மோரோன், மரோனியிடம், செய்தி அனுப்பினான்.
2 அந்தப்படியே, இந்த வேண்டுகோளினிமித்தம் மரோனி மிகவும் களிகூர்ந்தான். ஏனெனில், லாமானிய கைதிகளின் ஆதரவுக்கென்று கொடுக்கப்பட்ட ஆகாரத்தை தன் சொந்த ஜனத்தின் ஆதரவுக்கென்று கொடுக்க அவன் விரும்பினான்; அவன் தன் சொந்த ஜனம் தன் சேனையைப் பெலப்படுத்த வாஞ்சித்தான்.
3 இப்பொழுது லாமானியர் அநேக ஸ்திரீகளையும், சிறுபிள்ளைகளையும் பிடித்துப் போயிருந்தார்கள். ஆனால் மரோனியின் எல்லா கைதிகளிலும் அல்லது மரோனி பிடித்திருந்த எல்லா கைதிகளுக்குள்ளும் ஒரு ஸ்திரீயாகிலும், சிறுபிள்ளையாகிலும் இருக்கவில்லை. ஆதலால் மரோனி தான் லாமானியரிடமிருந்து எவ்வளவு நேபியக் கைதிகளைப் பெறமுடியுமோ, அவ்வளவு பெறுவதற்கு ஒரு உபாயத்தை தீர்மானித்தான்.
4 ஆதலால், தனக்கு ஒரு நிருபத்தைக் கொடுக்க வந்த, அம்மோரோனின் பணிவிடைக்காரனிடமே, மரோனி ஒரு நிருபத்தை எழுதிக் கொடுத்தனுப்பினான். இப்பொழுது அவன் அம்மோரோனுக்கு எழுதிய வார்த்தைகளாவன:
5 இதோ, அம்மோரோனே, என் ஜனங்களுக்கு விரோதமாய் நீ நடத்தின அந்த யுத்தத்தைக் குறித்து, அல்லது குறிப்பாக உன் சகோதரன் அவர்களுக்கு விரோதமாய் நடத்தினதைப்பற்றியும், அவன் மரணத்திற்குப் பின்பும் அதைத் தொடர நீ இன்னும் உறுதியாயிருக்கிற சிலவற்றையும் குறித்து உனக்கு எழுதியுள்ளேன்.
6 இதோ, தேவனுடைய நியாயத்தைக் குறித்தும், நீ மனந்திரும்பி, நேபியின் தேசமாகிய உன் சுதந்திர பூமிக்குள்ளே அல்லது உன் சொந்த தேசங்களுக்குள்ளே உன் சேனையைப் பின்வாங்கிக் கொள்ளாவிடில், உன் மீது தொங்கிக்கொண்டிருக்கிற அவருடைய சர்வ வல்ல உக்கிரத்தின் பட்டயத்தைக் குறித்தும், சிலவற்றை நான் உனக்குச் சொல்லுவேன்.
7 ஆம், அவைகளுக்குச் செவிகொடுக்க உன்னால் கூடுமானால், இக்காரியங்களை உனக்கு நான் சொல்லுவேன்; ஆம், நீ மனந்திரும்பி உன் கொலைக்கேதுவான திட்டங்களிலிருந்து நீங்கி, உன் சொந்த பூமிகளுக்கு உன் சேனைகளோடு கூட திரும்பாவிடில், உன்னையும் உனது சகோதரனையும் போன்ற, கொலைபாதகரை ஏற்றுக்கொள்ள காத்திருக்கும், அந்த பயங்கரமான நரகத்தைக் குறித்து நான் உனக்குச் சொல்லுவேன்.
8 ஆனால் நீங்கள் ஒரு முறை இக்காரியங்களை நிராகரித்து, கர்த்தருடைய ஜனங்களுக்கு விரோதமாய்ப் போராடியிருப்பதால், நீங்கள் மறுபடியும் அப்படிச் செய்வீர்கள், என்று எதிர்பார்க்கிறேன்.
9 இப்பொழுதும் இதோ, நாங்கள் உங்களை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறோம்; ஆம், நீங்கள் உங்கள் நோக்கங்களை விலக்காவிடில், இதோ, நீ மறுதலித்த அந்த தேவனுடைய கோபம் உன்னை முற்றிலும் நிர்மூலமாக்கும் வரைக்குமாய் அதை உன்மேல் விழப்பண்ணுவாய்.
10 ஆனால், நீ பின்வாங்காமல் இருந்தால், கர்த்தர் ஜீவிப்பதால், எங்கள் சேனைகள் உங்கள் மேல் வந்து, நீங்கள் சீக்கிரமாய் மரணத்தினால் சந்திக்கப்படுவீர்கள். ஏனெனில் நாங்கள் எங்கள் பட்டணங்களையும் எங்கள் தேசங்களையும் கைப்பற்றி, ஆம், எங்கள் மார்க்கத்தையும், எங்கள் தேவனுடைய நோக்கத்தையும் காத்துக் கொள்வோம்.
11 ஆனால் இதோ, நான் இக்காரியங்களைக் குறித்து வீணாய் உன்னிடத்தில் பேசுகிறேன், என்று தோன்றுகிறது; அல்லது நீ பாதாளத்தின் பிள்ளையோ என்று எனக்குத் தோன்றுகிறது; ஆதலால் ஒரு கைதிக்குப் பதிலாக, நீ ஒரு புருஷனையும் அவன் மனைவியையும், அவன் பிள்ளைகளையும் ஒப்படைப்பாய் என்ற நிபந்தனைகளில்லாமல், நான் கைதிகளை பரிமாற்றம் செய்யமாட்டேன், நீ இதைச் செய்வாயானால் நான் பரிமாற்றம் செய்வேன், என்று உனக்குச் சொல்லி என் நிருபத்தை முடிக்கிறேன்.
12 இதோ, நீ இதைச் செய்யவில்லையெனில், நான் உனக்கு விரோதமாய் என் சேனைகளோடு வருவேன்; ஆம், என் ஸ்திரீகளையும், என் பிள்ளைகளையும் கூட போர்க்கவசம் தரிக்கச் செய்து, உனக்கு விரோதமாய் வருவேன். எங்கள் முதற் சுதந்திர பூமியாகிய உன் சொந்த தேசத்திற்குள்ளாகவே உன்னைப் பின் தொடர்ந்து வருவேன்; ஆம், அது இரத்தத்திற்கு இரத்தமாகவும், ஜீவனுக்கு ஜீவனுமாகவுமிருக்கும்; நீங்கள் பூமியின் பரப்பின் மேலிருந்து அழிந்து போகுமட்டும் உங்களோடு போர் தொடுப்பேன்.
13 இதோ, நானும் என் ஜனமும் கோபமாயிருக்கிறோம்; நீங்கள் எங்களைக் கொலை செய்ய வகை தேடினீர்கள். நாங்களோ எங்களைத் தற்காத்துக் கொள்ளவே நாடினோம். ஆனால் இதோ, நீங்கள் எங்களை இன்னமும் அழிக்க வகை தேடினால், நாங்கள் உங்களை அழிக்க நாடுவோம். ஆம், எங்களுடைய முதற் சுதந்திர பூமியாகிய, எங்கள் தேசத்தை நாடுவோம்.
14 இப்பொழுது நான் என் நிருபத்தை முடிக்கிறேன். நானே மரோனி; நான் நேபியர் ஜனத்தின் தலைவன்.
15 இப்பொழுது, அந்தப்படியே, அம்மோரோன் இந்த நிருபத்தைப் பெற்றபோது, அவன் கோபப்பட்டான்; அவன் மற்றொரு நிருபத்தை மரோனிக்கு எழுதினான். அவன் எழுதின வார்த்தைகளாவன:
16 இதோ, லாமானியரின் ராஜாவாகிய அம்மோரோன் நானே; நீ கொன்றுபோட்ட அமலேக்கியாவின் சகோதரன் நான். இதோ, நான் அவனுடைய இரத்தப் பழியை உன் மேல் சரிக்கட்டுவேன். ஆம், நான் உன்னுடைய பயமுறுத்தல்களுக்கு பயப்படாததால், என் சேனைகளோடு உனக்கு எதிராக வருவேன்.
17 ஏனெனில் இதோ, உன் தகப்பன்மார்கள் தங்களின் சகோதரர்களுக்கு மோசம் பண்ணினார்கள், சட்டப்படி அரசாட்சி அவர்களுக்கு சொந்தமாயிருக்க, அதின் உரிமையை அவர்களிடமிருந்து களவாடுமளவும் அவர்களை மோசம் பண்ணினார்கள்.
18 இப்பொழுதும் இதோ, உங்கள் போர் ஆயுதங்களைக் கீழே போட்டு, அரசாட்சி நியாயமாக யாருக்கு உரிமையாயிருக்கிறதோ, அவர்களால் ஆளப்பட கீழ்ப்பட்டிருப்பீர்களெனில், அப்பொழுது நான் என் ஜனம் தங்களின் ஆயுதங்களை கீழே போடப்பண்ணுவேன்; அவர்கள் இனி ஒருபோதும் யுத்தம் பண்ணுவதில்லை.
19 இதோ, நீங்கள் எனக்கும் என் ஜனத்திற்கும் விரோதமாய் அநேக பயமுறுத்தல்களைக் கொடுத்தீர்கள்; ஆனால், இதோ, நாங்கள் உன் பயமுறுத்தல்களுக்குப் பயப்படுவதில்லை.
20 இருப்பினும் நான் என் யுத்த மனுஷருக்காக உணவைச் சேமிக்கும்படி, உன் வேண்டுகோளின்படியே கைதிகளை பரிமாற்றம் செய்ய சந்தோஷமாய் அனுமதிப்பேன்; நேபியர்களை எங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தவோ, அல்லது அவர்களை நித்திய நிர்மூலமாக்கவோ, முடிவற்ற ஒரு யுத்தத்தை நடத்துவோம்.
21 நாங்கள் மறுதலித்தோம், என்று நீ சொன்ன அந்த தேவனைக் குறித்துச் சொல்லவேண்டுமெனில், இதோ, அப்படி இருப்பவரை நாங்கள் அறியோம். நீங்களும் அறியீர்கள். ஆனாலும் அப்படி இருப்பவர் உண்டெனில், அவர் எங்களையும் உங்களைப்போல் சிருஷ்டித்திருப்பார், என நாங்கள் அறியவில்லை.
22 பிசாசு மற்றும் நரகம் என்று ஒன்று இருக்குமெனில், இதோ, உன்னால் கொலை செய்யப்பட்ட என் சகோதரன் அப்படிப்பட்ட இடத்திற்குப் போயிருப்பான் என்று, நீ யூகிக்கிற அவ்விடத்திற்கு, அவனோடு கூட நீயும் வாசமாயிருக்க அவர் உன்னையும் அனுப்பாமல் இருப்பாரோ? ஆனால் இதோ, இக்காரியங்கள் அவசியமற்றவை.
23 நான் அம்மோரோன், நான் உன் தகப்பன்மார்களால் கட்டாயப்படுத்தப்பட்டு, எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்டவனாகிய சோரமின் சந்ததி.
24 இதோ, இப்பொழுது நான் வைராக்கியமுள்ள லாமானியன்; இதோ, அவர்களுக்குச் செய்யப்பட்ட தவறுகளைச் சரிக்கட்டவும், அரசாட்சிக்கு அவர்களின் உரிமைகளைக் கைப்பற்றி காக்கவுமே, இந்த யுத்தம் நடத்தப்பட்டிருக்கிறது. நான் மரோனிக்கு எனது நிருபத்தை முடிக்கிறேன்.