வேதங்கள்
ஆல்மா 58


அதிகாரம் 58

ஏலமனும், கித்தும், தியோம்நரும் மேன்தி பட்டணத்தை ஒரு உபாயத்தைக்கொண்டு கைப்பற்றுதல் – லாமானியர் பின்வாங்குதல் – அம்மோன் ஜனத்தின் புத்திரர் தங்கள் சுதந்திரத்தையும் விசுவாசத்தையும் தற்காப்பதில் உறுதியாய் நிற்பதால் காக்கப்படுதல். ஏறக்குறைய கி.மு. 63–62.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, மேன்தி பட்டணத்தைக் கைப்பற்றுவது எங்களுடைய அடுத்த நோக்கமாயிருந்தது; ஆனால் இதோ, எங்களுடைய சிறு பட்டாளங்களைக் கொண்டு, அவர்களை பட்டணத்திற்கு வெளியே நடத்திக்கொண்டு வருவதற்கு எந்த வழியுமில்லாதிருந்தது. ஏனெனில் இதோ, நாங்கள் இச்சமயம்வரை செய்து வந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்; ஆதலால் அவர்களை அவர்களுடைய கொத்தளங்களிலிருந்து வெளியேற்றும்படி, எங்களால் அவர்களை வசப்படுத்த முடியவில்லை.

2 அவர்கள் எங்கள் படையைக் காட்டிலும் மிகவும் அதிகமானோராயிருந்ததினிமித்தம், அவர்களுடைய கொத்தளங்களுக்குப் போய் அவர்களைத் தாக்க நாங்கள் துணியவில்லை.

3 ஆம், நாங்கள் மறுபடியும் எங்கள் வசமாக்கிக் கொண்டிருந்த தேசத்தின் பகுதிகளைக் காக்கும்படியாக எங்களுடைய ஆட்களை நியமிப்பது அவசியமாயிற்று; ஆதலால் சாரகெம்லா தேசத்திலிருந்து அதிகப் பெலத்தையும், புதிய உணவுப்பொருட்களையும் பெறும்படியாக நாங்கள் காத்திருக்கவேண்டியது அவசியமாயிற்று.

4 அந்தப்படியே, எங்கள் ஜனங்களின் விவகாரங்களைக் குறித்து, எங்களுடைய தேசத்தின் விசாரணைக்காரனுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, அவனிடத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பினேன். அந்தப்படியே, நாங்கள் சாரகெம்லா தேசத்திலிருந்து உணவுப் பொருட்களையும் பெலத்தையும் பெறும்படிக்குக் காத்திருந்தோம்.

5 ஆனால் இதோ, இது எங்களுக்கு சிறிதளவே ஆதாயமாயிருந்தது; ஏனெனில் லாமானியரும் நாளுக்குநாள் அதிக பெலத்தையும், அதிக உணவுப்பொருட்களையும் பெற்று வந்தார்கள். இக்கால கட்டத்தில் எங்கள் சூழ்நிலை இவ்விதமாய் இருந்தது.

6 லாமானியர் சில நேரங்களில் எங்களுக்கு விரோதமாக தாக்கவந்து, எங்களை சூழ்ச்சியால் அழித்துப்போட தீர்மானித்தார்கள். இருப்பினும் அவர்களின் அரண்களினிமித்தமும், அவர்களின் கொத்தளங்களினிமித்தமும், அவர்களோடு யுத்தம்பண்ண எங்களால் போக முடியவில்லை.

7 அந்தப்படியே, இத்தகைய கடினமான சூழ்நிலையில் உணவுத்தேவையால், நாங்கள் அழிந்துபோகுமளவும் அநேக மாதங்களாகக் காத்திருந்தோம்.

8 ஆனால், அந்தப்படியே, எங்களுடைய உதவிக்காக வந்த இரண்டாயிரம் மனுஷ சேனை எங்களுக்காக பத்திரமாகக் கொண்டுவந்த உணவை நாங்கள் பெற்றுக்கொண்டோம்; எங்களையும், எங்கள் தேசத்தையும் எங்களுடைய விரோதிகளின் கைகளுக்குள் விழாமல் தற்காக்க, ஆம், எண்ணமுடியாத சத்துருவோடு போராட நாங்கள் பெற்ற உதவி அனைத்தும் இதுவே.

9 இப்பொழுது எங்களது இந்த இக்கட்டுக்களின் முகாந்தரத்தையோ, அல்லது எங்களுக்கு அவர்கள் ஏன் அதிக பெலத்தை அனுப்பவில்லை என்பதற்கான முகாந்தரத்தையோ, நாங்கள் அறியோம்; நாங்கள் தூக்கி எறியப்பட்டு, முழுவதுமாய் அழிக்கப்பட்டுப் போகும்படியாக, தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எவ்விதத்திலும் எங்கள் தேசத்தின் மேல் வந்துவிடுமோ, என்று நாங்கள் துக்கப்பட்டு பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டோம்.

10 ஆதலால், தேவன் எங்களை பெலப்படுத்தி, எங்களுடைய சத்துருக்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, ஆம், எங்களுடைய ஜனங்களின் ஆதரவுக்கென்று, நாங்கள் பெற்ற பட்டணங்களையும் எங்கள் தேசத்தையும், எங்கள் உடமைகளையும், நாங்கள் தக்க வைத்துக்கொள்ளும்படி, எங்களுக்கு பெலத்தை அருளும்படிக்கு, அவரிடத்தில் எங்கள் ஆத்துமாக்களை ஜெபத்திலே ஊற்றினோம்.

11 ஆம், அந்தப்படியே, நம்மை விடுவிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் தேவனாகிய கர்த்தர் எங்களை விசாரித்தார். ஆம், அதனால் அவர் எங்களுடைய ஆத்துமாக்களுக்கு சமாதானம் உரைத்து, பெரும் விசுவாசத்தை எங்களுக்கு அருளி, அவரில் எங்கள் விடுதலையை நம்பச் செய்தார்.

12 நாங்கள் பெற்ற எங்களுடைய சிறுசேனையினிமித்தம் நாங்கள் தைரியம்கொண்டு, எங்களுடைய சத்துருக்களை மேற்கொள்ளவும், எங்களுடைய தேசங்களையும், எங்களுடைய உடைமைகளையும், எங்களுடைய மனைவிகளையும், எங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய சுதந்திர நோக்கத்தையும் காக்கவும், உறுதியாய் தீர்மானித்திருந்தோம்.

13 அவ்விதம் மேன்தி பட்டணத்திலிருந்த லாமானியருக்கு விரோதமாக நாங்கள் எங்களுடைய முழுபெலத்தோடு போனோம். பட்டணத்திற்கு அருகே இருக்கும் வனாந்தர எல்லை அருகிலே எங்கள் கூடாரங்களைப் போட்டோம்.

14 அந்தப்படியே, மறுநாளில் பட்டணத்திற்கடுத்த வனாந்தரத்தின் எல்லைகளில் நாங்கள் இருப்பதை, லாமானியர் கண்டபோது, எங்களுடைய சேனையின் இலக்கத்தையும், பெலத்தையும் கண்டறியும்படிக்கு, அவர்கள் தங்கள் வேவுகாரரை எங்களைச் சுற்றியும் அனுப்பினார்கள்.

15 அந்தப்படியே, நாங்கள் எங்களுடைய இலக்கத்தின்படி பெலனற்றவர்களாயிருந்தோம் என்று அவர்கள் கண்டபோதும், அவர்கள் வந்து, எங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, எங்களைக் கொன்று போட்டாலொழிய, நாங்கள் அவர்களுடைய ஆதரவை அவர்களுக்குத் தடுப்போம் என்று பயந்தும், தங்களின் எண்ணிறைந்த சேனைகளோடு எங்களை எளிதாக அழித்துப்போடலாம் என்று எண்ணியும், அதனாலே எங்களுக்கு விரோதமாய் வந்து யுத்தம் பண்ண ஆயத்தம் செய்யலானார்கள்.

16 அவர்கள் எங்களுக்கு விரோதமாய் வர ஆயத்தப்பட்டிருப்பதை நாங்கள் கண்டபோது, இதோ, சில மனுஷரோடு கித், வனாந்தரத்தில் தன்னை ஒளித்துக் கொள்ளவும், தியோம்நரும், சில மனுஷரும், வனாந்தரத்திலே தங்களை ஒளித்துக் கொள்ளவும், கட்டளையிட்டேன்.

17 இப்பொழுதும் கித்தும், அவன் மனுஷரும் வலது புறத்திலும், மற்றவர்கள் இடது புறத்திலுமாய் இருந்தார்கள்; இதோ லாமானியர் வந்து யுத்தம் செய்யும் சமயத்திற்காக, நாங்கள் முதலில் எங்கள் கூடாரங்களைப் போட்டிருந்த அதே இடத்தில், என் படையில் மீதியானோருடன் நான் இருந்தேன்.

18 அந்தப்படியே, லாமானியர் தங்கள் எண்ணிறைந்த சேனையோடு எங்களுக்கு விரோதமாக வந்தார்கள். அவர்கள் வந்து எங்கள்மேல் தங்கள் பட்டயத்தோடு விழவிருந்தபோது என்னோடுகூட இருந்த மனுஷரை வனாந்தரத்தினுள் ஓடிப்போகும்படி கட்டளையிட்டேன்.

19 அந்தப்படியே, லாமானியர் எங்களை முந்திக்கொண்டு வெட்டிப் போடவேண்டுமென்று மிகவும் வாஞ்சித்ததினாலே, அவர்கள் எங்களை வேகமாய்ப் பின்தொடர்ந்தார்கள்; ஆதலால் அவர்கள் வனாந்தரத்தினுள்ளும் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; லாமானியரால் அவர்கள் கண்டுபிடிக்கப்படாதபடிக்கு, நாங்கள் கித் மற்றும் தியோம்நர் மத்தியிலே கடந்துபோனோம்.

20 அந்தப்படியே, லாமானியர்கள் கடந்துபோன பின்னர், அல்லது அந்த சேனை கடந்துபோன பின்னர், கித்தும் தியோம்நரும் தங்கள் மறைவிடங்களிலிருந்து எழுந்து, லாமானியர்களின் வேவுகாரர்களை பட்டணத்திற்கு அவர்கள் திரும்பிப்போகாதபடி தடுத்தார்கள்.

21 அந்தப்படியே, இவர்கள் அவர்களை தடுத்த பின்பு, பட்டணத்திற்கு ஓடிப்போய், பட்டணத்தைக் காக்கும்படி விடப்பட்டிருந்த, காவலாளிகளின்மேல் விழுந்து, அவர்களை அழித்துப் போட்டு, பட்டணத்தை வசப்படுத்திக் கொண்டார்கள்.

22 இப்பொழுதும் கொஞ்சம் காவல்காரரைத் தவிர, மற்ற தங்களின் முழுச் சேனையையும் லாமானியர் வனாந்தரத்திற்குள் கூட்டிச் சென்றதினிமித்தமே இது சம்பவித்தது.

23 அந்தப்படியே, கித்தும், தியோம்நரும், அவர்களுடைய கொத்தளங்களை இப்படியாக வசமாக்கிக் கொண்டார்கள். அந்தப்படியே, சாரகெம்லா தேசத்திற்கு நேராய், நாங்கள் வனாந்தரத்தினுள் அதிகம் பிரயாணம் பண்ணின பின்பு, எங்களுடைய மார்க்கத்தைத் தொடர்ந்தோம்.

24 சாரகெம்லா தேசத்திற்கு நேராய் அவர்கள் போய்க்கொண்டிருந்ததை லாமானியர் கண்டபோது, தங்களை அழிவிற்கு வழிநடத்துவதற்கு திட்டம் தீட்டப்பட்டதோவென்று, மிகவும் பயந்தார்கள்; ஆதலால் அவர்கள் மறுபடியுமாக வனாந்தரத்திற்குள், ஆம், தாங்கள் வந்த வழியிலேயே பின்வாங்கிச் சென்றார்கள்.

25 இதோ, இரவானபோதோ, நேபியர் தங்கள் அணிவகுப்பினிமித்தம் களைத்துப் போயிருப்பார்களென்றும், தாங்கள் அவர்களுடைய முழுச் சேனையையும் துரத்தியாகிவிட்டதென்றும், லாமானியரில் பிரதான சேர்வைக்காரர் நினைத்து, மேன்தி பட்டணத்தின்மேல் அக்கறைகொள்ளாமல், தங்கள் கூடாரங்களைப் போட்டார்கள்.

26 இப்பொழுது, அந்தப்படியே, இரவானபோது, என் மனுஷர் தூங்கக்கூடாதென்றும், வேறு வழியாய் மேன்தி தேசத்தை நோக்கி அணிவகுத்துப் போகவேண்டுமென்றும், நான் கட்டளையிட்டேன்.

27 நாங்கள் இரவிலே அணிவகுத்துப் போனதினாலே இதோ, மறுநாளில் மேன்தி பட்டணத்தை அவர்களுக்கு முன்பாக நாங்கள் சென்று அடையும் விதமாக, நாங்கள் லாமானியருக்கு தூரத்திலிருந்தோம்.

28 இப்படியாக அந்தப்படியே, இந்த உபாயத்தினால், இரத்தம் சிந்தாமலேயே மேன்தி பட்டணத்தை நாங்கள் வசப்படுத்திக் கொண்டோம்.

29 அந்தப்படியே, லாமானிய சேனைகள் பட்டணத்திற்கு அருகே வந்து சேர்ந்து, நாங்கள் அவர்களை சந்திக்க ஆயத்தமாயிருப்பதைக் கண்டபோது, அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, அவர்கள் வனாந்தரத்தினுள் ஓடிப்போகும் அளவுக்கு, பெரும் பயத்தினால் பீடிக்கப்பட்டார்கள்.

30 ஆம், மேலும் அந்தப்படியே, லாமானியர்களின் சேனைகள் தேசத்தின் எல்லாப் பகுதிகளையும் விட்டு ஓடிப்போனார்கள். ஆனால் இதோ, அவர்கள் தேசத்திலிருந்து அநேக ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

31 லாமானியரால் கைப்பற்றப்பட்ட அந்தப் பட்டணங்கள் யாவும், இச்சமயத்திலே எங்கள் வசத்திலுள்ளன; லாமானியரால் கைதிகளாய்ப் பிடிக்கப்பட்டு, கொண்டுசெல்லப்பட்டவர்களைத் தவிர, மற்ற யாவருமான, எங்களுடைய தகப்பன்மார்களும், எங்கள் ஸ்திரீகளும், எங்கள் பிள்ளைகளும் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.

32 ஆனால் இதோ, இவ்வளவு அநேக பட்டணங்களையும், பெரும் தேசப்பகுதிகளையும் காக்க, எங்களுடைய சேனைகள் சிறியதாயிருக்கின்றன.

33 ஆதலால் இதோ, எங்களுக்குச் சொந்தமாயிருந்த, அந்த பட்டணங்களையும் அந்த தேசங்களையும், நாங்கள் பெறுமளவிற்கு, இந்த தேசங்களின் மேல் எங்களுக்கு வெற்றியை அளித்த, நம் தேவனில் நாங்கள் நம்பிக்கையாயிருக்கிறோம்.

34 இப்பொழுதும் அரசாங்கம் எங்களுக்கு அதிக பெலத்தை அளிக்காதிருக்கிறதற்கான காரணத்தை நாங்கள் அறியோம்; எங்களோடு வந்து சேர்ந்த மனுஷரும் நாங்கள் ஏன் அதிக பெலத்தைப் பெறவில்லை என்பதற்கான காரணத்தை அறியார்.

35 இதோ, நீங்கள் ஜெயமற்றவர்களாயிருக்கிறீர்கள் என்பதையேயன்றி வேறொன்றையும் நாங்கள் அறியோம். நீங்கள் படைகளை தேசத்தின் அப்பகுதிக்கு கூட்டிச் சென்றீர்கள். அப்படியானால் நாங்கள் முறுமுறுக்க விரும்பவில்லை.

36 அப்படியில்லையெனில், இதோ, எங்கள் உதவிக்கென்று அவர்கள் அதிக மனுஷரை அனுப்பாததால், அரசாட்சியில் சில பிரிவினைகள் இருக்குமோ என்று அஞ்சுகிறோம்; ஏனெனில் அவர்கள் அனுப்பியதைக் காட்டிலும், அதிகமானோர் அங்கே இருக்கிறார்கள், என்று நாங்கள் அறிவோம்.

37 ஆனால் இதோ, இது அவசியமற்றது, தேவன் எங்களுடைய சேனையின் பெலவீனத்திலும் எங்களை விடுவிப்பார் என்றும், ஆம், எங்களுடைய சத்துருக்களின் கைகளுக்கும் எங்களைத் தப்புவிப்பார் என்றும், நம்புகிறோம்.

38 இதோ, இது, இருபத்தி ஒன்பதாம் வருஷத்தின் பிற்பகுதி, நாங்கள் எங்களுடைய தேசங்களை வசப்படுத்திக் கொண்டோம்; லாமானியரோ நேபி தேசத்திற்குப் பறந்தோடினார்கள்.

39 நான் இவ்வளவாகப் புகழ்ந்துரைத்த அம்மோன் ஜனங்களுடைய அந்த குமாரர்கள், என்னோடு கூட மேன்தி பட்டணத்திலிருக்கிறார்கள்; கர்த்தர் அவர்களுக்கு ஆதரவளித்து, ஆம், ஒரு ஆத்துமாவாகிலும் கொல்லப்பட்டுப்போகாதபடி, அவர்கள் பட்டயத்தினால் வீழ்ந்து போவதிலிருந்து காத்தார்.

40 ஆனால் இதோ, அவர்கள் அநேக காயங்களைப் பெற்றார்கள்; எனினும் தேவன் தங்களை சுதந்தரவாளிகளாக மாற்றின சுதந்திரத்தில் அவர்கள் உறுதியாய் நிற்கிறார்கள்; அவர்கள் ஒவ்வொரு நாளும் தேவனாகிய தங்கள் கர்த்தரை நினைவுகூர கவனமாயிருக்கிறார்கள்; ஆம், அவர்கள் அவருடைய சட்டங்களையும், அவருடைய நியாயத்தீர்ப்புகளையும் அவருடைய கட்டளைகளையும் தொடர்ந்து கைக்கொள்கிறார்கள்; வரப்போகிறதைக் குறித்த தீர்க்கதரிசனங்களில் அவர்கள் கொண்டிருக்கிற விசுவாசம் உறுதியாயிருக்கிறது.

41 இப்பொழுதும், என் பிரியமான சகோதரனாகிய மரோனியே, நம்மை மீட்டுக்கொண்டு, நம்மை சுயாதீனராய் மாற்றின, நம் தேவனாகிய கர்த்தர், உன்னைத் தம்முடைய பிரசன்னத்தில் தொடர்ந்து வைத்திருப்பாராக; ஆம், லாமானியர் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்ட, நமக்கு ஆதரவாயிருந்த சகலவற்றின் அதிகாரத்தையும், யாவையும் பெறுவதில் நீ ஜெயமடையும்படிக்கு அவர் இந்த ஜனங்களுக்கு தயைபுரிவாராக. இப்பொழுது, இதோ, நான் என் நிருபத்தை முடிக்கிறேன். நானே ஆல்மாவின் குமாரனாகிய ஏலமன்.