அதிகாரம் 60
அரசாங்கம் சேனைகளை உதாசீனம் செய்ததைக் குறித்து மரோனி பகோரனிடம் முறையிடுதல் – நீதிமான்கள் கொல்லப்பட கர்த்தர் அனுமதித்தல் – நேபியர் தங்களின் எல்லா வல்லமையையும், திறனையும் பயன்படுத்தி, தங்களையே தங்கள் விரோதிகளிடமிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் – தன் சேனைகளுக்கு ஆதரவு அனுப்பப்படாவிட்டால், அரசாங்கத்திற்கு விரோதமாய் போராடப் போவதாக மரோனி பயமுறுத்தல். ஏறக்குறைய கி.மு. 62.
1 அந்தப்படியே, அவன் தேசத்தின் விசாரணைக்காரனாயிருந்த பகோரனுக்கு மறுபடியும் எழுதினான். அவன் எழுதிய வார்த்தைகளாவன: இதோ, சாரகெம்லா பட்டணத்திலிருக்கும் அத்தேசத்தின் மீதான பிரதான நியாயாதிபதியும், விசாரணைக்காரனுமாகிய பகோரனுக்கும், இந்த யுத்தத்தின் வர்த்தமானங்களை விசாரித்து கவனிக்கும்படி இம்மக்களால் தெரிந்து கொள்ளப்பட்ட யாவருக்கும், எனது நிருபத்தை அனுப்புகிறேன்.
2 ஏனெனில் இதோ, நான் கண்டிப்பான விதமாக சிலவற்றை அவர்களுக்குச் சொல்லவுள்ளேன்; ஏனெனில் இதோ, நீங்கள் மனுஷரை ஏகமாய்க்கூடச் செய்து, அவர்களைப் பட்டயங்களாலும், உடைவாள்களாலும் எல்லாவிதமான யுத்தக் கருவிகளாலும் ஆயுதந்தரிப்பித்து, லாமானியர் நம் தேசத்தின் எப்பகுதிகளில் வந்தாலும், அவர்களுக்கு விரோதமாக அனுப்புவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள், என்பதை நீங்கள் அறிவீர்கள்.
3 இப்பொழுதும், இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், நானும், என் மனுஷரும், ஏலமனும், அவன் மனுஷரும் மிகவும் பெரும் பாடுகளை அனுபவித்தோம்; ஆம், பசி, தாகம், களைப்பு மற்றும் எல்லாவிதமான சகல உபத்திரவங்களையும் சகித்திருக்கிறோம்.
4 ஆனால் இதோ, இவைகளை மட்டுமே நாங்கள் அனுபவித்திருந்தால், நாங்கள் முணுமுணுக்கவோ, முறையிடவோ மாட்டோம்.
5 ஆனால், இதோ, நம் ஜனங்களுக்குள்ளே பெரும் சங்காரம் உண்டாயிற்று; ஆம், ஆயிரக்கணக்கானோர் பட்டயத்தினால் வீழ்ந்து போனார்கள், நம்முடைய சேனைகளுக்கு நீங்கள் போதுமான பெலத்தையும் உதவியையும் அளித்திருப்பீர்களானால், அது வேறுவிதமாய் இருந்திருக்கும். ஆம், எங்களை நீங்கள் உதாசீனம் செய்தது மிகவும் பெரிதாயிருந்தது.
6 இப்பொழுதும் இதோ, இந்த மிகப்பெரும் உதாசீனத்தின் காரணத்தை நாங்கள் அறிய வாஞ்சிக்கிறோம். ஆம், உங்களது அக்கறையற்ற நிலையின் காரணத்தை அறிய வாஞ்சிக்கிறோம்.
7 உங்களைச் சுற்றியும் உங்களுடைய விரோதிகள் மரணக்கிரியைப் பரப்பிக்கொண்டு, ஆம், உங்கள் சகோதரரில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று கொண்டிருக்கும்போது, உங்களுடைய சிங்காசனங்களில் மெய்மறந்த நிலையில் உட்கார்ந்திருக்க, உங்களால் நினைக்கமுடிமோ?
8 ஆம், பாதுகாப்பிற்காக அவர்கள் உங்களை சார்ந்திருந்தார்கள். ஆம், அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களைப் பெலப்படுத்தும்படியாக சேனைகளை அனுப்பியும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பட்டயத்தினால் வீழ்வதைத் தடுக்கவுமே, உன்னை அவர்கள் இப்பதவியிலே அமர்த்தினார்கள்.
9 ஆனால் இதோ, இது மாத்திரம் அல்ல, நீங்கள் உங்கள் உணவுப்பொருட்களை அவர்களுக்கு நிறுத்தி வைத்தீர்கள். இந்த ஜனத்தின் நலனில் தாங்கள் கொண்டிருந்த வாஞ்சையினால் அநேகர் யுத்தம்பண்ணி, இரத்தம் சிந்தி தங்கள் ஜீவன்களை விட்டார்கள்; ஆம், அவர்களிடம் நீங்கள் காட்டிய மிகவும் பெரிய உதாசீனத்தினிமித்தம், அவர்கள் பசியால் அழிந்துபோக இருக்கும் சமயத்திலும், இக்காரியத்தைச் செய்தார்கள்.
10 இப்பொழுதும், எனக்குப் பிரியமான சகோதரரே, ஏனெனில் நீங்கள் பிரியப்படத்தக்கவர்களாயிருக்கவேண்டும்; ஆம், நீங்கள் இந்த ஜனத்தின் நலனுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் அதிகக் கருத்தாய் நீங்கள் உங்களை தீவிரப்படுத்தியிருக்கவேண்டும்; ஆனால் இதோ, நீங்கள் அவர்களை உதாசீனப்படுத்தினதினிமித்தம், ஆயிரக்கணக்கானோரின் இரத்தப்பழி உங்கள் சிரசுகளின் மேல் சுமரும். ஆம், அவர்களுடைய எல்லா மன்றாடல்களும், அவர்களுடைய சகல பாடுகளும் தேவனுக்குத் தெரியும்.
11 இதோ, நீங்கள் உங்கள் சிங்காசனங்களில் உட்கார்ந்துகொண்டு, தேவனுடைய மிகுந்த நன்மையினிமித்தம், நீங்கள் ஒன்றும் செய்யாமலேயே, அவர் உங்களை விடுவிப்பார் என்றும், நீங்கள் எண்ணமுடியுமோ? இதோ, நீங்கள் இப்படி எண்ணியிருந்தீர்களானால், வீணிலே இதை நீங்கள் யோசித்திருக்கிறீர்கள்.
12 உங்கள் சகோதரரில் மிகவும் அநேகர் கொல்லப்பட்டது, அவர்களின் துன்மார்க்கத்தினால் என்று எண்ணுகிறீர்களா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் இப்படி எண்ணியிருந்தால், வீணாகத்தான் எண்ணியிருக்கிறீர்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அங்கே அநேகர் பட்டயத்தினால் வீழ்ந்து போனார்கள்; இதோ, இது உங்களது ஆக்கினைக்காகவே.
13 ஏனெனில் கர்த்தர் தம்முடைய நியாயமும், நியாயத்தீர்ப்பும், துன்மார்க்கர் மீது வரும்பொருட்டு நீதிமான்கள் கொல்லப்பட அனுமதிக்கிறார். ஆதலால் நீதிமான்கள் கொல்லப்பட்டுப்போனதாலே அவர்கள் தொலைந்து போனார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். ஆனால் இதோ, அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறார்கள்.
14 இப்பொழுதும் இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவர்களுடைய மிகுந்த சோம்பேறித்தனத்தினிமித்தமும், ஆம், நம்முடைய அரசாங்கத்தின் சோம்பேறித்தனத்தினிமித்தமும், கொல்லப்பட்டுப்போன தங்களின் சகோதரர்களின் மீது இருந்த தங்களது மிகுந்த பெரும் உதாசீனத்தினிமித்தமும், இந்த ஜனங்களின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருமே, என்று நான் மிகவும் பயப்படுகிறேன்.
15 முதலில் எங்கள் தலைமையில் துவங்கிய துன்மார்க்கம் இல்லாதிருந்திருக்குமானால், எங்களுடைய சத்துருக்கள் எங்கள் மேல் வல்லமைகொள்ளாதபடி, நாங்கள் அவர்களை மேற்கொண்டிருப்போம்.
16 ஆம், நமக்குள்ளே யுத்தம் உண்டாகாமல் இருந்திருந்தால், ஆம், நமக்குள்ளே மிகுந்த இரத்தம் சிந்துதலை ஏற்படுத்தின, இந்த ராஜ மனுஷர் இல்லாதிருந்தால், ஆம், நமக்குள் நாமே போராடிக் கொண்டிருந்த சமயத்தில், நாம் இதுவரை செய்து வந்ததைப்போல, நம் பெலத்தை ஒன்றுகூடச் செய்திருப்போமேயானால், ஆம், நம்மேல் தாங்கள் பெற்றிருந்த வல்லமையையும் அதிகாரத்தையும் ராஜ மனுஷர் வாஞ்சிக்காமல் இருந்திருப்பார்களெனில், அவர்கள் எங்களுக்கு விரோதமாய் தங்கள் பட்டயங்களை எடுத்து, அதினிமித்தம் எங்களுக்குள் மிகுந்த இரத்தம் சிந்துதலை உண்டாக்கினதைச் செய்யாமல், அதற்குப் பதிலாக நம்முடைய சுதந்திர நோக்கத்திற்கு விசுவாசமுள்ளவர்களாயிருந்து, எங்களுடனே ஒன்று சேர்ந்து நம்முடைய சத்துருக்களுக்கு விரோதமாய்ப் போயிருந்திருப்பார்கள்; ஆம், நாம் கர்த்தருடைய பெலத்தில் அவர்களுக்கு விரோதமாய்ப் போயிருந்தால், நம்முடைய விரோதிகளைச் சிதறடித்திருப்போம். ஏனெனில் அவருடைய வார்த்தை நிறைவேறும்படியாய் அது நடந்தேறியிருக்கும்.
17 ஆனால் இதோ, இப்போதும் லாமானியர் நம் தேசங்களை வசப்படுத்திக்கொண்டு நம்மேல் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பட்டயத்தினால் நம் ஜனங்களை, ஆம், நம் ஸ்திரீகளையும், நம் பிள்ளைகளையும் கொன்றும், அவர்களைக் கைதிகளாய்க் கொண்டு சென்றும், சகலவித உபத்திரவங்களையும் அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள், இது வல்லமைக்காகவும், அதிகாரத்திற்காகவும், முயற்சித்துக் கொண்டிருக்கிறவர்களாகிய, ராஜ மனுஷரின் மிகுந்த துன்மார்க்கத்தினிமித்தமே நடந்தது.
18 ஆனால், இக்காரியத்தைக் குறித்து நான் ஏன் அதிகமாய்ச் சொல்லவேண்டும்? ஏனெனில் நீயே அதிகாரத்தை எதற்கு நாடுகிறாய் என நாங்கள் அறியவில்லை. நீங்களும் கூட, உங்கள் நாட்டுக்கு சதிகாரர்கள், என்பதையேயன்றி வேறொன்றும் நாங்கள் அறியோம்.
19 அல்லது நீங்கள் நம் தேசத்தின் நடுவில் இருப்பதினாலும், சுற்றிலும் பாதுகாக்கப்படுகிறதினாலும், எங்களை உதாசீனம் செய்து, எங்களுக்கு உணவையும், எங்கள் சேனைகளைப் பெலப்படுத்த மனுஷரையும் அனுப்பாமல் விட்டீர்களோ?
20 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளை மறந்து விட்டீர்களோ? ஆம், நம்முடைய பிதாக்களின் சிறையிருப்பை மறந்துவிட்டீர்களோ? நாம் அநேகந்தரம் நம்முடைய சத்துருக்களின் கைகளுக்கு தப்புவிக்கப்பட்டதை மறந்து போனீர்களோ?
21 அல்லது நாம் நம்முடைய சிங்காசனங்களில் உட்கார்ந்து கொண்டு, கர்த்தர் நமக்கு அளித்தவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதும், அவர் நம்மை விடுவிப்பார், என்று எண்ணுகிறீர்களா?
22 ஆம், தேசத்தின் சுற்றுப்புறங்களிலான எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டயத்தினால் வீழ்ந்து, ஆம், காயப்பட்டு இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும்போது, உங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கானோரும், ஆம், பதினாயிரக்கணக்கானோரும் சோம்பலாய் உட்கார்ந்திருக்க, நீங்கள் சோம்பலாய் அமர்ந்திருப்பீர்களா?
23 நீங்கள் இக்காரியங்களைக் கண்டு சும்மா உட்கார்ந்திருக்கையில், தேவன் உங்களை குற்றமற்றவர்களாக நோக்குவார் என்று எண்ணுகிறீர்களா? இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படியல்ல. முதலில் பாத்திரத்தின் உட்பகுதியை சுத்தம் பண்ணுங்கள், பின்பு வெளிப்புறம் சுத்தம் பண்ணப்பட வேண்டும், என்று தேவன் சொன்னதை நீங்கள் நினைவுகூர வேண்டுமென்று விரும்புகிறேன்.
24 இப்பொழுதும், தான் மீண்டும் கைப்பற்றின நம் தேசத்தின் அப்பகுதிகளை ஏலமன் பாதுகாக்கவும், இப்பகுதியிலுள்ள நம் பூமியின் மீதியானதையும் மீட்டுக்கொள்ளவும், நீங்கள் செய்ததிலிருந்து மனந்திரும்பி, எழும்பி செயல்படத் தொடங்கி, எங்களுக்கும் அவனுக்கும் ஆகாரத்தையும் மனுஷரையும் அனுப்புங்கள். இதோ, நம்முடைய பெரிய அரசாங்கத் தலைமையை ஆம், நம்முடைய பாத்திரத்தின் உட்புறத்தை முதலாவது சுத்தம் பண்ணாமல், லாமானியரோடு நாம் போர் புரிவது அவசியமற்றது.
25 நீங்கள் என் நிருபத்தின்படி செய்யாமலும், வெளியே வந்து எனக்கு சுதந்திரத்தின் உண்மையான உற்சாகத்தைக் காண்பிக்காமலும், எங்கள் சேனையைப் பெலப்படுத்தி, திடப்படுத்த முற்படாமலும், அவர்களின் ஆதரவுக்கென்று உணவை வழங்காமலும் இருப்பீர்களானால், இதோ நமது தேசத்தின் இப்பகுதியைப் பாதுகாக்கும்படி, என் சுதந்திர மனுஷரில் ஒரு பகுதியினரை விட்டுச் செல்வேன், வேறெந்த வல்லமையும் அவர்களுக்கு விரோதமாக செயல்படக்கூடாதபடி, தேவனுடைய ஆசீர்வாதங்களையும் பெலத்தையும் அவர்கள் மேல் விட்டுச் செல்வேன்.
26 இது அவர்களின் மிகுந்த விசுவாசம், மற்றும் தங்கள் உபத்திரவங்களில் அவர்கள் காத்த பொறுமையினிமித்தமுமே.
27 நான் உன்னிடத்தில் வருவேன். உங்களுக்குள்ளே எவருக்கேனும் சுதந்திர வாஞ்சை இருக்குமேயானால், ஆம், சுதந்திரத்தின் ஒரு பொறியாகிலும் மீதமாய் இருக்குமேயானால், இதோ நான் வல்லமையையும் அதிகாரத்தையும் பறிக்க வாஞ்சிப்போர், நிர்மூலமாகும் வரையிலும் உங்களுக்குள் கலகத்தைத் தூண்டுவேன்.
28 ஆம், இதோ, நான் உன் பெலத்திற்கோ, அல்லது உன் அதிகாரத்திற்கோ பயப்படுவதில்லை, ஆனால் என் தேவனுக்கே பயப்படுகிறேன்; அவருடைய கட்டளைகளின்படியே என் தேசத்தைக் காக்க எனது பட்டயத்தை உயர்த்துகிறேன். உங்களுடைய அக்கிரமத்தினிமித்தமே நாங்கள் மிகப்பெரிய இழப்பை அனுபவித்தோம்.
29 இதோ, இதுவே நேரம். ஆம், நேரம் சமீபமாயிருக்கிறது, நீங்கள் உங்கள் தேசத்தையும், உங்கள் சிறுபிள்ளைகளையும், தற்காக்க உங்களைத்தானே செயல்படுத்தாவிடில் நியாயத்தின் பட்டயம் உங்கள் மேல் தொங்குகிறது; ஆம், அது உங்கள் மேல் விழுந்து, நீங்கள் முற்றிலுமாய்ச் சங்காரமாகும்படி உங்களைச் சந்திக்கும்.
30 இதோ, உங்களிடத்திலிருந்து உதவிக்காகக் காத்திருக்கிறேன்; நாங்கள் நிவாரணமடைய எங்களுக்கு நீங்கள் உதவி செய்யவில்லையெனில், இதோ, நான் சாரகெம்லா தேசம் மட்டும் உங்களிடத்தில் வந்து, நீங்கள் இனியும் எங்களது சுதந்திர நோக்கிலே இந்த ஜனங்களின் முன்னேற்றத்தைத் தடுக்க வல்லமை கொள்ளாதபடி, உங்களைப் பட்டயத்தினால் வெட்டிப் போடுவேன்.
31 ஏனெனில் இதோ, நீங்கள் ஜீவித்து, தமது நீதியுள்ள ஜனத்தை அழித்துப் போடும்படியாய், உங்கள் அக்கிரமங்களிலே நிலைத்திருக்கும்படி கர்த்தர் அனுமதிப்பதில்லை.
32 இதோ, லாமானியர்களுடைய தகப்பன்மார்களின் பாரம்பரியமே அவர்களின் வெறுப்பைத் தூண்டச் செய்து, ஆம், அது நம்மிலிருந்து பிரிந்து போனவர்களினாலே இரட்டிக்கப்பட்டு, உங்களுடைய துன்மார்க்கம், புகழ்ச்சியின் பிரியத்திலும், உலகத்தினுடைய வீணானவைகளிலும் இருக்கிறபோது, கர்த்தர் உங்களைத் தப்புவித்து, லாமானியருக்கு விரோதமாய் நியாயம் விசாரிக்க வருவார், என்று நீங்கள் எண்ண முடியுமா?
33 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை மீறுகிறீர்கள் என்றும், அவைகளை உங்கள் கால்களால் மிதித்துப் போடுகிறீர்கள் என்றும், நீங்கள் அறிவீர்கள். இதோ, கர்த்தர் என்னை நோக்கி: நீங்கள் நியமித்திருக்கிற உங்கள் விசாரணைக்காரர் தங்கள் பாவங்களிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் மனந்திரும்பாவிடில், அவர்களுக்கு விரோதமாக நீங்கள் யுத்தத்திற்குப் போவீர்களாக, என்கிறார்.
34 இப்பொழுதும் இதோ, மரோனியாகிய நான், என் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நான் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையினால் நெருக்கப்படுகிறேன்; ஆதலால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எனக்கும், ஏலமனுக்கும், உங்களது ஆகாரத்தையும், உங்கள் மனுஷரையும், சீக்கிரமாய் அனுப்ப வேண்டுமென விரும்புகிறேன்.
35 இதோ, இதை நீங்கள் செய்யவில்லையெனில், நான் தீவிரமாய் உங்களிடத்தில் வருவேன்; ஏனெனில் இதோ, நாங்கள் பசியால் அழிந்துபோக தேவன் எங்களை அனுமதியார்; ஆதலால் அவசியப்பட்டால் பட்டயத்தினால் கூட, உங்கள் உணவை அவர் எங்களுக்குக் கொடுப்பார். இப்பொழுது நீங்கள் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றப் பார்த்துக் கொள்ளுங்கள்.
36 இதோ, நானே உங்களின் பிரதான சேனாதிபதியாகிய மரோனி. நான் அதிகாரத்தை அல்ல, ஆனால் அதைத் தாழ்த்தவே நாடுகிறேன். நான் உலகத்தின் கனத்தை நாடாமல், என் தேவனுடைய மகிமைக்காவும், என் தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், நலனுக்காகவும் நாடுகிறேன். இந்தப்படியே நான் என் நிருபத்தை முடிக்கிறேன்.