2010–2019
நமது வாக்குறுதிகளின்படியும் உடன்படிக்கைகளின்படியும் நிற்றல்
அக்டோபர் 2019 பொது மாநாடு


நமது வாக்குறுதிகளின்படியும் உடன்படிக்கைகளின்படியும் நிற்றல்

மிகுந்த உத்தமத்துடன், உங்கள் வார்த்தை உங்கள் ஒப்பந்த பத்திரம் என்பதை அறிந்துகொண்டு கர்த்தருடனும் பிறருடனும் நீங்கள் செய்த வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் கருத்தில்கொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.

சகோதர சகோதரிகளே, இந்த கூட்டத்தை நாம் நிறைவுசெய்யும்போது, இன்று கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சத்தியங்கள் பற்றிய சாட்சியை நமது இருதயங்களில் நாம் வைத்துக்கொள்வோமா. நாம் அவருடைய வேலைக்காரர்கள், அவர் நமது இரட்சகர் என கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நமது வாக்களிப்பை பெலப்படுத்த ஒன்றுகூடியுள்ள இந்த பரிசுத்த நேரத்தைப் பெற நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் செய்து கைக்கொள்வதன் முக்கியத்துவம் என் மனதில் பாரமாயிருக்கிறது. உங்கள் வார்த்தையைக் காத்துக்கொள்ளுவதும், நம்பப்படுபவராயிருப்பதும், நீங்கள் செய்வீர்கள் என்று சொன்னதைச் செய்வதும், உங்களுடைய பரிசுத்த உடன்படிக்கைகளைக் கனம்பண்ண முயற்சிப்பதும், உத்தமமாயிருப்பதும், உங்களுக்கு எவ்வளவு முக்கியமாயிருக்கிறது? கர்த்தருக்கும் மற்றவர்களுக்கும் நமது வாக்குறுதிகளில் உண்மையுள்ளவர்களாய் வாழுவதால் பரலோகத்திலுள்ள நமது பிதாவிடம் திரும்ப உடன்படிக்கை பாதையில் நாம் நடக்கிறோம், நம்முடைய வாழ்வில் அவருடைய அன்பை நாம் உணருகிறோம்.

வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் செய்து அவைகளைக் கைக்கொள்ளும்போது, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமது மகத்தான உதாரணபுருஷராக இருக்கிறார். பிதாவின் சித்தத்தின்படி செய்வதாக வாக்களித்து அவர் பூமிக்கு வந்தார். சொல்லிலும் செயலிலும் சுவிசேஷக் கொள்கைகளை அவர் போதித்தார். நாம் மீண்டும் ஜீவிப்பதற்காக நமது பாவங்களுக்காக அவர் பாவநிவர்த்தி செய்தார். அவருடைய ஒவ்வொரு வாக்குறுதியையும் அவர் கனம்பண்ணியிருக்கிறார்.

நம் ஒவ்வொருவரைப்பற்றியும் இதைப்போல சொல்லமுடியுமா? நாம் சிறிது ஏமாற்றினால், சிறிது சறுக்கினால் அல்லது நமது ஒப்புக்கொடுத்தல்களை பின்பற்றாமலிருந்தால், அபாயங்கள் எவை? நமது உடன்படிக்கைகளிலிருந்து நாம் விலகிச் சென்றால் என்ன நடக்கும்? நமது எடுத்துக்காட்டின் ஒளியில் மற்றவர்கள் கிறிஸ்துவண்டை வருவார்களா? உங்கள் வார்த்தை உங்களுடைய பத்திரமா? வாக்குறுதிகளைக் காத்துக்கொள்ளுவது ஒரு பழக்கமல்ல, இயேசு கிறிஸ்துவின் சீஷராயிருப்பதன் இயல்பு.

அநித்திய வாழ்க்கையில் நமது பலவீனங்கள் மீது எப்போதும் கவனத்துடன், கர்த்தர் வாக்களித்தார், “திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள், ஏனெனில் கர்த்தராகிய நான் உங்களுடனேயே கூட இருக்கிறேன், உங்களுக்கு பக்கத்திலே நிற்பேன்.”1 மறுஉறுதி, ஆறுதல், அல்லது அதிக ஆவிக்குரிய உள்ளுணர்வு அல்லது பெலன் தேவையாயிருக்கும்போது அவருடைய பிரசன்னத்தை நான் உணர்ந்திருக்கிறேன், அவருடைய தெய்வீக தோழமைக்காக நான் மிகவும் தாழ்ச்சியடைந்து, நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

கர்த்தர் சொன்னார், “தன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு, என்னிடத்தில் வந்து, என்னுடைய நாமத்தில் அழைத்து, என்னுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற ஒவ்வொரு ஆத்துமாவும், என்னுடைய முகத்தைக் கண்டு நானே என்றறியும்”.2 ஒருவேளை இதுவே அவருடைய இறுதியான வாக்குறுதி.

என்னுடைய வார்த்தையைக் காத்துக்கொளுவதின் முக்கியத்துவத்தை என்னுடைய வாலிபத்தில் நான் கற்றேன். அத்தகைய ஒரு எடுத்துக்காட்டு, சாரண உறுதிமொழியை ஒப்புவிக்க நான் நிமிர்ந்து நின்றபோது. அமெரிக்காவின் சாரண சிறுவர் அமைப்போடு நமது தொடர்பு, இப்போது நிறைவுபெற்றாலும், எனக்கும் சபைக்கும் ஒரு முக்கியமான பாரம்பரியமாக இருக்கும். சாரண அமைப்புக்கும், சாரண தலைவர்களாக கருத்தாய் பணியாற்றிய ஏராளமான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அம்மாக்களுக்கும்—உண்மையான பாராட்டு அவர்களுக்குத்தான்—சாரணியத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் நாங்கள் சொல்கிறோம், “உங்களுக்கு நன்றி.”

இந்தக் கூட்டத்தில் நமக்கன்பான தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனும் மூப்பர் க்வெண்டின் எல். குக்கும் இளைஞர்கள்மேல் நமது கவனத்தை மறுபரிசீலனை செய்யும், அனுசரிப்புகளை அறிவித்து, வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்துடன் நமது அமைப்புக்களை சேர்த்திருக்கின்றனர். கூடுதலாக, புதிய பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை திட்டத்தை முழு சபைக்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் தலைவர் நெல்சனும் தலைவர் எம். ரசல் பல்லார்டும் விளக்கினர். நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துகிற இது ஒரு உலகளாவிய முயற்சி. பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் இந்த புதிய திசையில் ஒன்றுபட்டிருக்கின்றனர், இந்த வழியின் ஒவ்வொரு அடியிலும் கர்த்தர் நம்மை வழிநடத்தியிருக்கிறாரென தனிப்பட்ட முறையில் நான் சாட்சியளிக்கிறேன். சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல், சேவை மற்றும் நடவடிக்கைகள், தனிப்பட்ட முன்னேற்றங்கள் மூலமாக வீட்டிலும் சபையிலும் அவர்கள் இருவர்மீதும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட கவனத்தை அனுபவிப்பதில் சபையின் பிள்ளைகளுக்காகவும் இளைஞர்களுக்காவும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வரப்போகிற ஆண்டு 2020க்காக இளைஞர்களின் தலைப்பான “போ, செய்” என்ற நேபியின் உன்னதமான வாக்குறுதியைப் பேசுகிறது. அவன் எழுதினான், “நேபியாகிய நான் என் தகப்பனை நோக்கி, நான் போய் கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களைச் செய்வேன், ஏனெனில் மனுபுத்திரருக்கு தாம் கட்டளையிட்ட காரியத்தைச் செய்து முடிக்கக்கூடிய ஒரு வழியை ஆயத்தப்படுத்தினாலொழிய, கர்த்தர் எந்தக் கட்டளைகளையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”3 நீண்ட காலத்திற்கு முன்பு சொல்லப்பட்டாலும், சபையில் நாம் இன்று அந்த வாக்குறுதியில் நிற்கிறோம்.

உலகத்தின் வழிகளிலிருந்து உயரே எழும்புவது, தனிப்பட்ட வெளிப்படுத்தலைப் பெறுவது, செயல்படுவது, நம்பிக்கையுடன் நீதியாகவும் வருங்காலத்தின்மீது நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் நீதியாக வாழுதல், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் கைக்கொள்ளுதல், அதனால் உலகத்தின் இரட்சகரான அவருக்காக நமது அன்பை அதிகரித்தல் என்பதே, “போ, செய்” என்பதன் அர்த்தம்.

ஒரு உடன்படிக்கை என்பது நமக்கும் கர்த்தருக்கும் இடையில் செய்யப்படுகிற இருவழி வாக்குறுதி. சபையின் அங்கத்தினர்களாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எடுத்துக்கொள்ளவும், அவர் வாழ்ந்ததைப்போல வாழவும் ஞானஸ்நானத்தில் நாம் உடன்படிக்கை செய்கிறோம். மார்மன் தண்ணீர்களில் ஞானஸ்நானம் பெற்றவர்களைப்போல அவருடைய ஜனங்களாக மாறவும், “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, லகுவாக்க மனமுடையவர்களாகவும், துயரப்படுவோரோடு கூட துயரப்படவும், ஆறுதலற்று நிற்போருக்கு ஆறுதலளிக்கவும், சதா காலங்களிலும் எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனுக்கு சாட்சிகளாய் நிற்போம்” எனவும் நாம் உடன்படிக்கை செய்கிறோம்.4 சபையில் ஒருவருக்கொருவர் செய்கிற நமது ஊழியம், அந்த வாக்குறுதிகளை கனம்பண்ணும் நமது ஒப்புக்கொடுத்தலை பிரதிபலிக்கிறது.

நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, அவருடைய நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்ளவும், மேம்பட கூடுதலான வாக்குறுதிகளைக் கொடுக்கவுமான அந்த உடன்படிக்கையை நாம் புதுப்பிக்கிறோம். நமது அன்றாட பெரிய மற்றும் சிறிய சிந்தனைகளும் செயல்களும் அவரிடத்திலிருக்கிற நமது ஒப்புக்கொடுத்தலை பிரதிபலிக்கின்றன. “நீங்கள் என்னை எப்பொழுதும் நினைவுகூர்ந்தால், உங்களுடனேகூட இருக்கும்படி என் ஆவியைப் பெறுவீர்கள்”5 என்பது பதிலுக்கு அவருடை பரிசுத்த வாக்குறுதி.

நமது வாக்குறுதிகளின்படியும் உடன்படிக்கைகளின்படியும் நாம் நிற்கிறோமா அல்லது சிலநேரங்களில் அவை அரைமனதுடனான ஒப்புக்கொடுத்தல்களா, சாதாரணமாக செய்யப்பட்டு பினனர் எளிதாக மீறப்படுகிறதா? என்பது இன்று என்னுடைய கேள்வி. “நான் உங்களுக்காக ஜெபிப்பேன்,” என ஒருவரிடம் சொல்லும்போது அதை நாம் செய்கிறோமா? “உதவுவதற்கு நான் அங்கிருப்பேன்,” என நாம் பொறுப்பேற்கும்போது அதை நாம் செய்கிறோமா? ஒரு கடனை செலுத்த நாம் பொறுப்பேற்கும்போது, நாம் செலுத்துகிறோமா? ஒரு புதிய அழைப்பில் ஒரு சக அங்கத்தினரை ஆதரிக்க, அதாவது ஆதரவுகொடுக்க நமது கரங்களை நாம் உயர்த்தும்போது, நாம் ஆதரிக்கிறோமா?

என்னுடைய வாலிபத்தில் ஒரு மாலை நேரத்தில் என்னுடைய தாயின் படுக்கையருகில் என்னுடன் அவர் அமர்ந்து, ஞானவார்த்தைபடி வாழ்வதன் முக்கியத்துவத்தைக் குறித்து மிக ஆர்வமுடன் பேசினார். அவர் சொன்னார்,“ஆவிக்குரியவை மற்றும் உணர்திறனின் இழப்பு ஞானவார்த்தையைப் பின்பற்றாததிலிருந்து வருகிறதென மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து பலஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நான் அறிவேன்.” அவர் என் கண்களை நேராய் பார்த்தார், அவருடைய வார்த்தைகள் என் இருதயத்தில் ஊடுருவதாக நான் உணர்ந்தேன். “நீ எப்போதும் ஞானவார்த்தையின்படி வாழுவாய் என இன்று எனக்கு வாக்களி ரோனி, (அவர் என்னை ரோனி என அழைப்பார்).” நான் பயபக்தியுடன் அவருக்கு அந்த வாக்குறுதியைக் கொடுத்தேன், இத்தனை ஆண்டுகளும் அதை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய வாலிபத்திலும் பின்னர் வந்த ஆண்டுகளிலும் போதைப்பொருட்கள் சுதந்தரமாக புழங்குகிற வியாபார வட்டங்களில் நானிருந்தபோதும் அந்த ஒப்புக்கொடுத்தல் எனக்கு நன்றாக வேலை செய்தது. தேவனுடைய நியாயபிரமாணங்களைப் பின்பற்றவும் அதை ஒருபோதும் மறுபரிசீலனை செய்யாதிருக்கவும் முன்கூட்டியே ஒரு தீர்மானத்தை நான் எடுத்தேன். கர்த்தர் சொன்னார், “நான் சொல்வதை நீங்கள் செய்யும்போது கர்த்தராகிய நான் கட்டப்பட்டிருக்கிறேன்; ஆனால் நான் சொல்வதை நீங்கள் செய்யாதபோது உங்களுக்கு வாக்குத்தத்தம் இல்லை.”6 ஞானவார்த்தைபடி வாழுபவர்களுக்கு அவர் என்ன சொல்லுகிறார்? ஆரோக்கியம், பெலன்,ஞானம், அறிவு என்ற வாக்குறுதிகள் நமக்கிருக்கும், தூதர்கள் நம்மை பாதுகாப்பார்கள்.7

சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் மகள்களில் ஒருத்தியின் முத்திரித்தலுக்காக சகோதரி ராஸ்பாண்டும் நானும் சால்ட் லேக் சிட்டி ஆலயத்திலிருந்தோம். சடங்கில் பங்கேற்பதற்கு இன்னமும் போதுமான வயதை எட்டாத ஒரு இளம் மகளுடன் ஆலயத்திற்கு வெளியே நாங்கள் நின்றுகொண்டிருந்தபோது தேவனின் பரிசுத்த ஆலயத்தில் முத்திரிக்கப்படுவதன் முக்கியத்துவத்தைப்பற்றி நாங்கள் பேசினோம். பல ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார் எனக்குப் போதித்ததைப்போல எங்கள் மகளுக்கு நாங்கள் சொன்னோம், நீ பாதுகாப்பாக ஆலயத்தில் முத்திரிக்கப்பட நாங்கள் விரும்புகிறோம், உன்னுடைய நித்திய துணையை நீ கண்டுபிடிக்கும்போது, ஆலயத்தில் அவனோடு முத்திரிக்கப்பட ஒரு நாளை நீ ஒதுக்கவேண்டுமென எங்களுக்கு வாக்களிக்க நாங்கள் விரும்புகிறோம்.” அவள் எங்களுக்கு வாக்குக் கொடுத்தாள்.

படம்
மூப்பர் ராஸ்பாண்டின் மகளும் அவளது கணவரும்

எங்களுடைய பேச்சும் அவளுடைய வாக்குறுதியும் அவளைப் பாதுகாத்ததாகவும், “எது மிக முக்கியமானதென்பதை” அவளுக்கு நினைவூட்டியதாகவும் பின்னர் அவள் கூறினாள். பின்னர், ஆலயத்தில் அவளுடைய கணவரோடு அவள் முத்திரிக்கப்பட்டபோது அவள் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்தாள்.

தலைவர் நெல்சன் போதித்தார்: “நாம் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து அந்த உடன்படிக்கைகளை துல்லியமாக கைக்கொள்ளும்போது, நமது வாழ்க்கையில் இரட்சகரின் வல்லமையை நாம் அதிகரிப்போம். நமது உடன்படிக்கைகள் அவரிடத்தில் நம்மை இணைக்கிறது, தெய்வீக வல்லமையை நமக்குக் கொடுக்கிறது.”8

நாம் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகளைக் கடைப்பிடிக்கும்போது, கர்த்தருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நாம் அதிகமாக கைக்கொள்கிறோம். கர்த்தருடைய வார்த்தைகளை நினைவுகூருங்கள், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்.”9

வேதத்திலுள்ள வாக்குறுதிகளின் எடுத்துக்காட்டுகளை என்னுடன் சிந்தியுங்கள். மார்மன் புஸ்தகத்தில், அம்மோனும் மோசியாவின் குமாரர்களும் “தேவ வார்த்தையைப் பிரசிங்கிக்க”10 ஒப்புக்கொடுத்தனர். லாமானியர்களின் சேனைகளால் அம்மோன் சிறைபிடிக்கப்பட்டபோது, அவன் லாமானிய லாமோனி இராஜாவிற்கு முன்பு கொண்டுவரப்பட்டான். “நான் உந்தன் ஊழியக்காரனாயிருப்பேன்”11 என இராஜாவிடத்தில் அவன் உறுதியளித்தான். திருடர்கள் இராஜாவின் ஆடுகளைத் திருட வந்தபோது, அம்மோன் அவர்களுடைய கைகளை வெட்டினான். இராஜா மிகவும் ஆச்சரியப்பட்டு, அம்மோனின் சுவிசேஷச் செய்தியைக் கேட்டு அவன்மனமாறினான்.

பழைய ஏற்பாட்டில் ரூத் அவளுடைய மாமியாருக்கு வாக்களித்தாள், “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்.”12 அவளுடைய வார்த்தைக்கு அவள் உண்மையாய் வாழ்ந்தாள். புதிய ஏற்பாட்டில் ஒரு உவமையில், காயமடைந்த பயணியை சத்திரக்காரன் பராமரித்தால் “அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காக செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன்”13 என நல்ல சமாரியன் வாக்களித்தான். நேபியுடனும் அவனுடைய சகோதரர்களுடனும் வனாந்தரத்திற்குள் செல்ல, மார்மன் புஸ்தகத்தில் சோரம் வாக்களித்தான். “சோரம் எங்களிடம் ஆணையிட்டுச் சொல்லியபொழுது அவனைக்குறித்த எங்களுடைய பயம் நீங்கியது”14 என நேபி நினைவுகூர்ந்தான்.

“பிள்ளைகளுடைய இருதயங்கள் தங்கள் தகப்பன்மார்களிடத்திற்குத் திரும்பும்”15 என விவரிக்கப்பட்டதைப்போல, “தகப்பன்களுக்குக் கொடுக்கப்பட்ட” பழங்காலத்து வாக்குறுதி என்னவானது? பூமிக்கு முந்தைய வாழ்க்கையில் தேவனின் திட்டத்தை நாம் தேர்ந்தெடுத்தபோது திரையின் இருபுறமும் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க உதவ நாம் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தோம். “கர்த்தருடன் ஒரு கூட்டுஒப்பந்தத்திற்குள் நாம் சென்றோம்” என சில ஆண்டுகளுக்கு முன்பு மூப்பர் ஜான் எ. விட்ஸோ விளக்கினார். “திட்டத்தை நிறைவேற்றுதல், பின்னர் பிதாவின் வேலை மட்டுமல்ல, இரட்சகரின் வேலை மட்டுமல்ல, ஆனால் நமது வேலையும் ஆனது.”16

“கூட்டிச்சேர்த்தல், இன்று பூமியில் நடந்துகொண்டிருக்கிற மிகமுக்கியமான காரியம்” என உலகமுழுவதிலும் பயணித்திருக்கிற தலைவர் நெல்சன் சொன்னார். “{கூட்டிச்சேர்த்தலை பற்றி நாம் பேசும்போது இந்த அடிப்படை சத்தியத்தை நாம் சாதாரணமாக சொல்கிறோம், திரையின் இரு பக்கங்களிலுமுள்ள நமது பரலோக பிதாவின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் செய்தியைக் கேட்க தகுதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.”17

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலனாக, ஒரு அழைப்புடனும் வாக்குறுதியுடனும் நான் நிறைவுசெய்கிறேன். முதலாவது, அழைப்பு: மிகுந்த உத்தமத்துடன், உங்கள் வார்த்தை உங்கள் ஒப்பந்த பத்திரம் என்பதை அறிந்துகொண்டு கர்த்தருடனும், மற்றவர்களுடனும் நீங்கள் செய்த வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் கருத்தில்கொள்ள நான் உங்களை அழைக்கிறேன். இரண்டாவதாக, நீங்கள் இதைச் செய்யும்போது, உங்கள் வார்த்தைகளை கர்த்தர் நிலைநாட்டுவார், உங்கள் வாழ்க்கையை, உங்கள் குடும்பங்களை, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை கட்டிஎழுப்ப சலிப்படையாத விடாமுயற்சியுடன் நீங்கள் முயற்சி செய்யும்போது உங்கள் செயல்களை அவர் அனுமதிப்பார் என நான் வாக்களிக்கிறேன். அவர் உங்களுடனேகூட இருப்பார், எனக்கன்பான சகோதர சகோதரிகளே, “கர்த்தராகிய தேவன் இதைப் பேசியிருப்பதாலே, முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்யும்படி, பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட தன்னம்பிக்கையோடு எதிர்நோக்க உங்களால் முடியும்.”18

இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், வாக்களிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்