2010–2019
இரட்சகரின் தொடுதல்
அக்டோபர் 2019 பொது மாநாடு


இரட்சகரின் தொடுதல்

நாம் அவரிடம் வரும்போது, நம்மைக் குணமாக்க அல்லது எந்த சூழ்நிலையையும் சந்திக்க நமக்கு பெலன் கொடுத்து, தேவன் நம்மை மீட்க வருவார்,

தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பேரின்ப ஆசீர்வாதங்களையும் பிற சுவிசேஷ கொள்கைகளையும் போதித்த பிறகு, இரட்சகர் மலை மீதிலிருந்து இறங்கினார். அவர் நடக்கும்போது, குஷ்டரோகியான ஒரு சுகமில்லா மனிதன் அவரை அணுகினான். தன் உபத்திரவத்திலிருந்து நிவாரணம் தேடி, கிறிஸ்துவுக்கு முன்பாக அவன் முழங்கால் படியிட்டபோது, அவன் பயபக்தியும் மரியாதையும் தெரிவித்தான். அவனது வேண்டுகோள் எளிமையானது, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்.”

இரட்சகர் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு சொன்னார், “எனக்குச் சித்தமுண்டு, சொஸ்தமாகு.”1

நமது இரட்சகர் எப்போதும் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என நாம் கற்கிறோம். சில ஆசீர்வாதங்கள் உடனே வருகின்றன, மற்றவை வெகுநாட்கள் எடுக்கின்றன, சில இந்த வாழ்க்கைக்குப் பிறகு வரலாம், ஆனால் ஆசீர்வாதங்கள் சரியான நேரத்தில் வரும்.

அந்த குஷ்டரோகி போல, அவரது சித்தத்தை ஏற்று, அவர் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என அறிந்து, இந்த வாழ்க்கையில் நாம் ஆறுதலும் பெலனும் பெறலாம். எந்த சவாலையும் சந்திக்கவும், எந்த விதமான சோதனைகளையும் மேற்கொள்ளவும் நமது கஷ்டமான சூழ்நிலைகளை புரிந்துகொள்ளவும், தாங்கவும் நாம் பெலன் பெறுவோம். நிச்சயமாக அவரது வாழ்வின் மிக நெருக்கடியான தருணத்தில், அவர் தன் பிதாவிடம், “உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது” என சொன்னபோது, இரட்சகரின் தாங்கும் பெலன் ஆழமானது.2

குஷ்டரோகி போலியாகவோ, அதிகாரமான முறையிலோ வேண்டுதல் செய்யவில்லை. தாழ்மையான மனநிலையுடன் உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன், ஆனால் இரட்சகரின் சித்தமே செய்யப்படும் என்ற உண்மையான வாஞ்சையை, அவனது வார்த்தைகள் தெரிவிக்கின்றன. நாம் கிறிஸ்துவண்டை வரவேண்டிய மனநிலையின் ஒரு உதாரணம் இது. இரட்சகரின் வாஞ்சை இப்போதைக்கும் எப்போதைக்கும், நமது பூலோக மற்றும் நித்திய ஜீவனுக்கு சிறந்ததாக இருக்கும் என்ற நிச்சயத்துடன் நாம் கிறிஸ்துவிடத்தில் வர வேண்டும். அவர் நாம் அறியாத நித்திய பார்வை கொண்டிருக்கிறார். அவரது சித்தம் போல நமது சித்தமும் பிதாவின் சித்தத்தால் விழுங்கப்பட்டு விடும் என்ற உண்மையான வாஞ்சையுடன் நாம் கிறிஸ்துவண்டை வர வேண்டும்.3 இது நம்மை நித்திய ஜீவனுக்கு ஆயத்தப்படுத்தும்.

இரட்சகரிடத்தில் வந்த குஷ்டரோகியை பாரப்படுத்திய சரீர, உணர்வுபூர்வ பாடுகளை கற்பனை செய்வது மிகவும் கடினம். குஷ்டம் சிதைவும் ஊனமும் ஏற்படுத்தி, நரம்புகளையும் தோலையும் பாதிக்கிறது. கூடுதலாக, பெரிய சமூக இழிவுக்கும் வழிநடத்துகிறது. குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அன்பானவர்களை விட்டுவிட்டு, சமூகத்திலிருந்து தனிமைப் பட்டு வாழ்கின்றனர். குஷ்டரோகிகள் சரீர பிரகாரமாயும், ஆவிக்குரிய விதமாகவும், சுத்தமற்றவர்கள் என கருதப்பட்டார்கள். இக்காரணத்துக்காகவே, அவர்கள் நடக்கும்போது, சுத்தமற்றவர்கள் என சொல்லிக் கொண்டு, கிழிந்த துணி உடுத்த வேண்டும் என மோசேயின் நியாயப்பிரமாணம் கூறியது.4 சுகமில்லாமல், அலட்சியப்படுத்தப்பட்டு, குஷ்டரோகிகள் கைவிடப்பட்ட வீடுகளிலும் கல்லறைகளிலும் வாழ்ந்தனர்.5 இரட்சகரை அணுகிய குஷ்டரோகி, நொறுங்கியிருந்தான் என கற்பனை செய்வது கடினம்.

நமது சொந்த செயல்கள் அல்லது பிறரால், நம்மால் முடிந்த அல்லது நம்மால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளினிமித்தம் சிலசமயங்களில் ஒரு விதமாக அல்லது வேறுவிதமாக நாமும் நொறுக்கப்பட்டதாக உணரலாம். அப்படிப்பட்ட தருணங்களில் நமது சித்தத்தை அவரது கரங்களில் நாம் விடலாம்.

சில ஆண்டுகளுக்கு முன், என் சிறந்த பாதியாகிய, மிகச்சிறந்த பாகமாகிய, மனைவி சுல்மா, எங்கள் பிள்ளைகள் ஒருவரது திருமணத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு கஷ்டமான செய்தி பெற்றாள். அவளது எச்சில் சுரப்பியில் கட்டி இருந்தது, அது வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அவளது முகம் வீங்கியது, ஒரு நுட்பமான அறுவை சிகிச்சை அவள் உடனே செய்துகொள்ள வேண்டும். அவளது மனதில் பல எண்ணங்கள் ஓடின, அவளது இருதயம் கனத்தது. அந்த கட்டி தீராததா? அவளது சரீரம் எப்படி குணமடையும்? அவளது முகம் முடமாகுமா? வலி எவ்வளவு அதிகமாயிருக்கும்? அவளது முகத்தில் நிரந்தர வடு இருக்குமா? கட்டி எடுத்த பிறகும் திரும்ப வருமா? அவளால் எங்கள் மகன் திருமணத்திற்கு வர முடியுமா? அவள் அறுவைச் சிகிச்சை அறையில் படுத்திருந்தபோது அவள் நொறுங்கிப்போனதாக உணர்ந்தாள்.

அந்த மிக முக்கிய தருணத்தில், அவள் தன் பிதாவின் சித்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆவி அவளுக்கு முணுமுணுத்தது. அவள் பின்னர் தன் நம்பிக்கையை தேவனில் வைக்க முடிவு செய்தாள். முடிவு எதுவாயிருந்தாலும் அவரது சித்தமே அவளுக்கு சிறந்தது என பலமாக உணர்ந்தாள். சீக்கிரத்தில் அறுவைச் சிகிச்சை மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

பின்னர் கவிதையாக தன் நாட்குறிப்பில் எழுதினாள், “மருத்துவரின் மேஜையில் நான் உம் முன்னால் பணிந்தேன், உம் சித்தத்துக்கு அடிபணிந்து, நான் தூங்கினேன். உம்மிடத்திலிருந்து கேடானது எதுவும் வரமுடியாது என அறிந்து நான் உம்மை நம்பலாம் என அறிவேன்.”

தன் சித்தத்தை பிதாவின் சித்தத்துக்கு அர்ப்பணிப்பதிலிருந்து பெலனும் ஆறுதலும் கண்டாள். அன்று தேவன் அவளை மிகவும் ஆசீர்வதித்தார்.

நமது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவண்டை வர நமது விசுவாசத்தைப் பிரயோகித்து, நாம் நம்பக்கூடிய தேவனைைக் காணலாம். என் ஒரு பிள்ளை காபிரியேல் ஒருமுறை எழுதியபடி,

தீர்க்கதரிசி சொன்னபடி, தேவனின் முகம் சூரியனை விட பிரகாசமானது.

அவரது சிகை பனியைவிட வெண்மையானது.

அவரது குரல் ஆற்றின் வேகம் போல கர்ஜிக்கிறது.

அவருக்கடுத்தபடி மனுஷன் ஒன்றுமில்லை. …

நான் ஒன்றுமில்லை என உணர்ந்து நசுக்கப்படுகிறேன்.

அப்போதுதான் நான் நம்பக்கூடிய தேவனிடம் என் வழியில் தடவிக்கொண்டே செல்கிறேன்.

அப்போதுதான் நான் நம்பக்கூடிய தேவனை நான் காண்கிறேன்.6

நாம் நம்பக்கூடிய ஒரு தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் நமது நம்பிக்கையை பெலப்படுத்துகிறார். அவர் நம்மை நேசிப்பதாலும், எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு சிறந்ததை கொடுக்க விரும்புவதாலும் நாம் அவரை நம்ப முடியும்.

நம்பிக்கையின் வல்லமையினிமித்தம் குஷ்டரோகி முன்னால் வந்தான். உலகம் அவனுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை, ஆறுதல் கூட. அவ்விதமாக, இரட்சகரின் எளிய தொடுதல் அவனது முழு ஆத்துமாவுக்கும் சீராட்டாக உணரப்பட்டிருக்க வேண்டும். இரட்சகர் தொட்டபோது, குஷ்டரோகி பெற்ற நன்றியுணர்வின் ஆழமான உணர்வுகளை, விசேஷமாக அவன், “எனக்குச் சித்தமுண்டு சொஸ்தமாகு” என்ற வார்த்தைகளை கேட்டதை, நாம் கற்பனை மட்டுமேசெய்ய முடியும்.

அக்கதை சொல்கிறது, “உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சொஸ்தமானான்.”7

இரட்சகரின் அன்பான குணமாக்கும் கரத்தின் தொடுதலை நாமும் உணர முடியும். நாம் சுத்தமாக அவர் விரும்புகிறார் என அறியும்போது எவ்வளவு மகிழ்ச்சியும், நம்பிக்கையும், நன்றியுணர்வும் நமது ஆத்துமாக்களுக்கு வருகிறது. நாம் அவரிடத்தில் வரும்போது, நம்மைக் குணமாக்கவோ, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள பெலனை நமக்குக் கொடுக்கவோ தேவன் நம்மை மீட்க வருவார்.

எவ்விதத்திலும், நமது சித்தத்தையல்ல, அவரது சித்தத்தை ஏற்பது, நமது சூழ்நிலைகளை புரிய நமக்கு உதவும். தேவனிடமிருந்து தீமை ஒன்றும் வரமுடியாது. நமக்கு எது சிறந்தது என அவர் அறிவார். ஒருவேளை நமது பாரங்களை உடனே அவர் நீக்க மாட்டார். ஆல்மாவுக்கும் அவனது ஜனத்துக்கும் செய்ததுபோல, அந்த பாரங்களை அவர் இலகுவாக்க முடியும். 8 முடிவாக, உடன்படிக்கைகளினிமித்தம் பாரங்கள் விலக்கப்படும்,9 இந்த வாழ்க்கையில் அல்லது பரிசுத்தமான உயிர்த்தெழுதலில்.

அவரது சித்தம் செய்யப்படும் என்ற உண்மையான வாஞ்சை, நமது மீட்பரின் தெய்வீக தன்மை பற்றிய புரிதலுடன், குஷ்டரோகி சுத்தப்படுத்தப்பட்ட மாதிரியான விசுவாசத்தை நாம் விருத்தி செய்வது நமக்கு உதவும். இயேசு கிறிஸ்து அன்பின் தேவன், நம்பிக்கையின் தேவன், குணமாக்குதலின் தேவன், நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிற, நாம் சுத்தமாக உதவுகிற தேவன். நாம் மீறுதலில் விழும்போது, நம்மை மீட்க முன்வந்தபோது, பூமிக்கு வருவதற்கு முன்பே அதைத்தான் அவர் விரும்பினார். பாவத்துக்காக விலைகொடுத்து வியாகுலம் அடைந்தபோது, மனிதன் நினைக்க முடியாத வலியை அவர் பெற்றபோது, அதைத்தான் அவர் கெத்சமனேயில் விரும்பினார். பிதாவுக்கு முன்பு, நமக்காக அவர் பரிந்து பேசும்போது, அதையே அவர் விரும்புகிறார்.10 அதனால்தான் அவரது குரல் இன்னும் எதிரொலிக்கிறது, “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”11

அதைச் செய்ய அவருக்கு திறமை இருப்பதால், அவர் நம்மை குணமாக்கி, தூக்கிவிட முடியும். நமக்கு எல்லாவற்றிலும் உதவும்படிக்கும், நம்மைக் குணமாக்கும்படிக்கும், நம்மைத் தூக்கி விடும்படிக்கும், உதவ முடியும்படிக்கு, அவரது உள்ளிந்திரியங்கள் நிரப்பப்படும்படிக்கு, சரீர மற்றும் ஆவியின் வேதனைகளை அவர் தம்மீது எடுத்துக் கொண்டார்.12 அபிநாதியால் குறிப்பிடப்பட்டபடி, ஏசாயாவின் வார்த்தைகள் இதை அழகாகவும் உருக்கமாகவும் கூறுகிறது.

“அவர் மெய்யாகவே நம் சஞ்சலங்களை ஏற்றுக்கொண்டு, நமது துக்கங்களைச் சுமந்தார். …

“… அவர் நம்முடைய நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார். நமது பாவத்தின் சிட்சை அவர் மீதிருந்தது. அவருடைய காயத் தழும்புகளினாலே நாம் குணமாகிறோம்.”13

இதே கொள்கை அந்தப் பாடலில் கற்பிக்கப்படுகிறது,

“நாசரேத்தின் தச்சரே,

நொறுக்கப்பட்ட இந்த இருதயத்தை சீராக்கும்.

மரணத்துக்கு நெருக்கமாக உடைக்கப்பட்டிருக்கிற இந்த வாழ்க்கை,

தச்சரே உம்மால் ஒட்ட முடியுமா?”

அவரது தயவுள்ள தயாராக இருக்கும் கையால்,

அவரது வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறது.

எங்கள் வாழ்க்கை அவை இருக்கும்வரை,

புதிய சிருஷ்டி—“எல்லாம் புதிது.”

“நொறுங்குண்ட இருதயம்,

வாஞ்சை, ஆசை, நம்பிக்கை, விசுவாசம்

ஒரு பூரண பாகமாக சேர்த்திடும்.

நாசரேத்தின் தச்சரே!”14

நீங்கள் எந்த விதத்திலும் சுத்தமற்றவர்கள் என உணர்ந்தால், நொறுக்கப்பட்டதாக உணர்ந்தால், நீங்கள் சுத்தமாக்கப்பட முடியும், இணைக்கப்பட முடியும் என தயவுசெய்து அறியுங்கள், ஏனெனில் அவர் உங்களை நேசிக்கிறார். அவரிடத்திலிருந்து மோசமானதெதுவும் வராது என நம்புங்கள்.

அவர் “எல்லாவற்றுக்கும் கீழிறங்கியதால்,” 15 நமது வாழ்க்கையில் உடைந்தவை ஒட்டப்படலாம் என்பதை சாத்தியமாக்குகிறார், அப்படியாக நாம் தேவனோடு ஒப்புரவாகலாம். பூமியிலுள்ளவைகளும் பரலோகத்திலுள்ளவைகளும், “அவரது சிலுவையின் இரத்தத்தின் மூலம் சமாதானம்” செய்யப்பட்டு, அவரது மூலம் எல்லாம் ஒப்புரவாக்கப்படுகின்றன. 16

தேவையான படிகளை வைத்து நாம் கிறிஸ்துவண்டை வருவோமாக. நாம் அப்படி செய்யும்போது, “கர்த்தாவே, உமக்குச் சித்தமானால், உம்மால் என்னைச் சுத்தமாக்க முடியும்,” என சொல்லும்படி நமது மனநிலை இருப்பதாக. நாம் அப்படிச் செய்தால், “எனக்குச் சித்தமுண்டு சொஸ்தமாகு,” என்கிற அவரது குரலின் எதிரொலியோடு, நாம் போதகரின் குணமாக்கும் தொடுதலை பெறலாம்.

இரட்சகர் நாம் நம்பக்கூடிய தேவன். அவரே கிறிஸ்து, அபிஷேகிக்கப்பட்டவர், பரிசுத்த மேசியா, அவர் பற்றி இயேசு கிறிஸ்துவாகிய அவரது பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்