பாகம் 102
பிப்ருவரி 17, 1834ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் அமைப்பின் முதல் பிரதான ஆலோசனைக் குழுவின் தீர்மானங்கள். முதல் தீர்மானங்கள் மூப்பர்கள் ஆலிவர் கௌட்ரியாலும் ஆர்சன் ஹைடாலும் பதிவு செய்யப்பட்டன. பின்வந்த நாளில் தீர்மானங்களை தீர்க்கதரிசி சரிபார்த்து அடுத்த நாளில் சரிபார்க்கப்பட்ட தீர்மானங்கள் சபையின் “பிரதான ஆலோசனைக் குழுவின் ஒரு அமைப்பாகவும் சட்டமாகவும்” பிரதான ஆலோசனைக் குழுவால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் வெளியீட்டிற்காக இந்த பாகம் ஆயத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது, பன்னிரு அப்போஸ்தலர் ஆலோசனை குழுமத்துக்கு சம்பந்தமான வசனங்கள் 30லிருந்து 32வரை, 1835ல் ஜோசப் ஸ்மித்தின் வழிநடத்துதலின் கீழ் சேர்க்கப்பட்டன.
1–8, சபையில் எழுகிற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பிரதான ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது; 9–18, வழக்குகளை கேட்க விதிமுறைகள் கொடுக்கப்பட்டன; 19–23, ஆலோசனைக் குழுவின் தலைவர் தீர்மானத்தைக் கொடுக்கிறார்; 24–34, மேல் முறையீடு தொடர்பான விதிமுறைகள் அமைக்கப்படுகின்றன.
1 இந்த நாளில் வெளிப்படுத்தலால் இருபத்து நான்கு பிரதான ஆசாரியர்கள் கொண்ட ஒரு பொது ஆலோசனைக் குழு, ஜோசப் ஸ்மித், இளையவர் வீட்டில் கூடி, பன்னிரண்டு பிரதான ஆசாரியர்களும், தேவைக்கேற்றார்போல ஒன்று அல்லது மூன்று தலைவர்கள் அடங்கியிருக்கிற கிறிஸ்துவின் சபையின் ஆலோசனைக் குழுவை அமைக்க முற்பட்டது.
2 சபையாலோ அல்லது ஆயரின் ஆலோசனைக் குழுவாலோ வழக்காடுபவர்களின் திருப்திக்கு ஏற்ப, தீர்க்கப்பட முடியாத சபையில் எழுகிற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளிப்படுத்தலால் பிரதான ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது.
3 ஆலோசனைக் குழுவின் குரலால் ஜோசப் ஸ்மித், இளையவரும், சிட்னி ரிக்டனும், பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூம் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்; பிரதான ஆசாரியர்களான ஜோசப் ஸ்மித், மூத்தவர், ஜான் ஸ்மித், ஜோசப் கோ, ஜான் ஜான்சன், மார்டின் ஹாரிஸ், ஜான் எஸ்.கார்ட்டர், ஜேரட் கார்ட்டர், ஆலிவர் கௌட்ரி, சாமுவேல் ஹெச். ஸ்மித், ஆர்சன் ஹைட், சில்வெஸ்டர் ஸ்மித், மற்றும் லூக் ஜான்சன், சபைக்காக ஒரு நிரந்தர ஆலோசனைக் குழுவாயிருக்க ஆலோசனைக் குழுவின் ஏகோபித்த குரலால் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்.
4 அவர்களுடைய நியமிப்புகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா எனவும், மேலும் பரலோகத்தின் நியாயப்பிரமாணத்தின்படி அந்த அலுவலில் அவர்கள் செயல்படுவார்களா என்றும் மேலே குறிப்பிடப்பட்ட ஆலோசகர்கள் பின்னர் கேட்கப்பட்டார்கள். அதற்கு அவர்கள் நியமிப்புகளை ஏற்றுக்கொண்டோம் எனவும், தங்களுடைய அலுவலை தங்கள்மேல் அருளப்பட்ட தேவனின் கிருபையின்படி நிறைவேற்றுவோம் எனவும் பதிலுரைத்தனர்.
5 மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசகர்களை நியமிப்பதில் சபையின் நாமத்திலும் சபைக்காகவும் வாக்களித்த ஆலோசகர்கள் அடங்கிய எண்ணிக்கை பின்வருவனபோல நாற்பத்தி மூன்றுபேர்: ஒன்பது பிரதான ஆசாரியர்கள், பதினேழு மூப்பர்கள், நான்கு ஆசாரியர்கள் மற்றும் பதிமூன்று அங்கத்தினர்கள்.
6 வாக்களிக்கப்பட்டதாவது: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு ஆலோசகர்களில்லாமல், அல்லது முறைப்படி நியமிக்கப்பட்ட அவர்களுக்குப்பின் வருவோர் அங்கிருக்காமல், செயல்பட பிரதான ஆலோசனை குழுவிற்கு அதிகாரமில்லை.
7 வராத ஆலோசகர்களின் இடத்தில் செயல்பட தகுதியுள்ளவர்களாகவும் திறமையுள்ளவர்களாகவும் அவர்கள் கருதுகிற பிற பிரதான ஆசாரியர்களை நியமிக்க இந்த ஏழுபேருக்கு அதிகாரமுண்டு.
8 வாக்களிக்கப்பட்டதாவது: மரணத்தாலோ, மீறுதலுக்காக அலுவலிலிருந்து நீக்கப்பட்டதாலோ, அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசகர்களில் யாராவது ஒருவரால் இந்த சபையின் ஆளுகையின் எல்லைகளிலிருந்து நீக்கப்பட்டதாலோ, காலியிடம் ஏற்படும்போது, தலைவர் அல்லது தலைவர்களால் நியமிக்கப்படுவதால் நிரப்பப்பட்டு, சபையின் பெயரில் செயல்பட அந்த நோக்கத்திற்காக கூட்டப்பட்டிருக்கிற பிரதான ஆசாரியர்களின் பொது ஆலோசனைக் குழுவின் குரலால் அனுமதிக்கப்படும்.
9 சபையின் தலைவரும், ஆலோசனைக் குழுவின் தலைவருமானவர் வெளிப்படுத்தலால் நியமிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புக்கு சபையின் குரலால் அங்கீகரிக்கப்படுகிறார்.
10 சபையின் ஆலோசனைக் குழுவுக்கு அவர் தலைமை தாங்கவேண்டுமென்பது அவருடைய அலுவலின் கண்ணியத்தின்படியிருக்கிறது, அவர் நியமிக்கப்பட்டபடியே நியமிக்கப்பட்ட இரண்டு பிற தலைவர்களால் உதவப்படுதல் அவருடைய சிலாக்கியமாயிருக்கிறது.
11 அவருக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட ஒருவர் அல்லது இருவருமே இல்லாத பட்சத்தில் ஒரு உதவியாளர் இல்லாமல் ஆலோசனைக் குழுவுக்கு தலைமை தாங்க அவருக்கு அதிகாரமுண்டு, ஒருவேளை அவரே இல்லாத பட்சத்தில், பிற தலைவர்களில் ஒருவர் அல்லது இருவருமே தலைமை தாங்க அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்.
12 நடந்து கொண்டிருக்கிற மாதிரியின்படி கிறிஸ்துவின் சபையின் ஒரு பிரதான ஆலோசனைக்குழு வழக்கமாக ஸ்தாபிக்கப்படும் போதெல்லாம், எண்ணிக்கைக்காக சீட்டுப்போட்டு, அதனால் எண் ஒன்றிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து எண் பன்னிரண்டுவரை, பன்னிருவரில் யார் முதலில் பேசவேண்டுமென்று, உறுதிசெய்வது பன்னிரண்டு ஆலோசகர்களின் கடமையாயிருக்கிறது.
13 எந்த வழக்கின் பேரிலும் செயல்பட இந்த ஆலோசனைக்குழு கூடும்போதெல்லாம், அது கடினமானதா இல்லையா என, பன்னிரண்டு ஆலோசகர்கள் அதை கருத்தில் கொள்வார்கள்; அது அப்படியில்லையென்றால், மேலே எழுதப்பட்டுள்ள முறையின்படி அதுபற்றி ஆலோசகர்களில் இரண்டுபேர் மட்டுமே பேசவேண்டும்.
14 ஆனால், கஷ்டமாயிருப்பதாக எண்ணப்பட்டால், நான்குபேர் நியமிக்கப்படலாம், இன்னும் அதிகக் கஷ்டமாயிருந்தால் ஆறுபேர்; ஆனால் எந்த வழக்கிலும் பேசுவதற்கு ஆறுபேருக்கு மேலே நியமிக்கப்படக் கூடாது.
15 குற்றம் சாட்டப்பட்டவர், எல்லா வழக்கிலும், அவமானத்தை அல்லது அநீதியை தடுக்க ஆலோசனைக் குழுவின் பாதிப்பேர் அதுபற்றி தீர்மானிக்க, உரிமை பெற்றிருக்கின்றனர்.
16 ஆலோசனைக் குழுவிற்கு முன்பாக பேச நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் வழக்கை சமர்ப்பிக்க வேண்டும்; ஆலோசனைக் குழுவிற்கு முன்பாக உண்மையானபடி சாட்சி விசாரிக்கப்பட்ட பின்பு ஒவ்வொரு மனுஷனும் நியாயமாகவும், நீதியின்படியும் பேசவேண்டும்.
17 2, 4, 6, 8, 10 மற்றும் 12 இரட்டைப்படை எண்களை எடுக்கும் ஆலோசகர்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக நின்று அவமானத்தையும் அநீதியையும் தடுப்பவர்கள்.
18 எல்லா வழக்குகளிலும், சாட்சியங்கள் கேட்கப்பட்டபின்பு, வழக்கைப்பற்றிப் பேச நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் தங்களுடைய குறிப்புகளை முடித்ததும், ஆலோசனைக் குழுவிற்கு முன்பாக குற்றம் சாட்டுபவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் தங்களுக்காக பேசுவதற்கு ஒரு சிலாக்கியமுண்டு.
19 சாட்சியங்கள் கேட்கப்பட்டு, ஆலோசகர்கள், குற்றம் சாட்டுபவர், குற்றம் சாட்டப்பட்டவர் பேசிய பின்பு, வழக்கைப்பற்றி அவருடைய புரிந்துகொள்ளுதலின்படி தலைவர் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார், அதை தங்களுடைய வாக்குகள் மூலம் உறுதிப்படுத்த பன்னிரு ஆலோசகர்களை அழைப்பார்.
20 ஆனால் பேசாத, பிற ஆலோசகர்கள், அல்லது அவர்களில் யாராவது ஒருவர் சாட்சியங்களையும் விண்ணப்பங்களையும் பாரபட்சமின்றி கேட்டபின்பு, தலைவரின் தீர்ப்பில் ஒரு தவறைக் கண்டுபிடித்தால், அதை அவர்கள் வெளியரங்கப்படுத்த வேண்டும், வழக்கு மறுவிசாரணைக்கு வரும்.
21 ஒரு கவனமான மறுவிசாரணைக்குப் பின்பு வழக்கின்மீது ஏதாவது கூடுதலான தகவல் கொடுக்கப்பட்டால், அதன்படி தீர்ப்பு மாற்றப்படும்.
22 ஆனால் ஒருவேளை கூடுதலான தகவல் கொடுக்கப்படவில்லையெனில், அதை தீர்மானிக்க ஆலோசனைக் குழுவிலுள்ள அதிக எண்ணிக்கையிலுள்ளோர் அதிகாரம் பெற்றிருப்பதால் முதல் தீர்மானம் உறுதிப்படும்.
23 கோட்பாடு அல்லது கொள்கையைப்பற்றிய பிரச்சினை இருந்தால் வழக்கைப்பற்றி ஆலோசனைக்குழுவின் மனங்களைத் தெளிவுபடுத்த போதுமானவை எழுதப்படவில்லையெனில், தலைவர் கர்த்தரை விசாரித்து, வெளிப்படுத்தலினால் அவரின் சிந்தையை அறியலாம்.
24 பிரதான ஆசாரியர்கள் வெளியிலிருக்கும்போது கட்சிக்காரர்களோ அல்லது அவர்களில் ஒருவரோ அதை வேண்டிக்கொள்ளும்போது, நடப்பின்படி பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு ஆலோசனைக் குழுவை அழைக்கவும் அமைக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
25 அத்தகைய ஆலோசனைக் குழுவுக்கு தற்காலிகமாக தலைமை தாங்க தங்களில் ஒருவரை நியமிக்க, சொல்லப்பட்ட பிரதான ஆசாரியர்களின் ஆலோசனைக் குழுவுக்கு அதிகாரமுண்டு.
26 அவர்களுடைய தீர்ப்பு இணைக்கப்பட்டு, சாட்சியின் முழுமையான அறிக்கையுடன், அவர்களுடைய நடவடிக்கைகளின் பிரதியை, சபையின் பிரதான தலைமையின் பிரதான ஆலோசனைக்குழு இருக்குமிடத்திற்கு உடனடியாக அனுப்புவது சொல்லப்பட்ட ஆலோசனைக் குழுவின் கடமை.
27 சொல்லப்பட்ட ஆலோசனைக் குழுவின் தீர்ப்பைப்பற்றி கட்சிக்காரர்கள் அல்லது அவர்களில் ஒரு சாரார் திருப்தியில்லாதிருந்தால், சபையின் பிரதான தலைமையின் பிரதான ஆலோசனைக் குழுவுக்கு அவர்கள் மேல்முறையீடு செய்து, எந்த தீர்ப்பும் வழங்கப்படாததைப் போன்று, எழுதப்பட்ட முந்தைய மாதிரியின்படி அங்கே நடத்தப்பட்ட வழக்கை மறுவிசாரணை செய்யலாம்.
28 சபைக் காரியங்களின் மிகக் கஷ்டமான வழக்குகளுக்கு மட்டுமே, வெளியிலிருக்கிற இந்த பிரதான ஆசாரியர்களின் ஆலோசனைக்குழு அழைக்கப்படவேண்டும்; எந்த பொதுவான அல்லது சாதாரண வழக்குகளுக்கும் இத்தகைய ஆலோசனைக்குழுவை அழைப்பது தேவையில்லாதிருக்கிறது.
29 இத்தகைய ஆலோசனைக் குழுவை அழைப்பது அவசியமானதா இல்லையா எனச் சொல்லுவதற்கு, பயணத்திலிருக்கிற அல்லது வெளியில் இருக்கிற பிரதான ஆசாரியர்களுக்கு அதிகாரமுண்டு.
30 அவர்களின் தீர்மானங்களில், பிரதான ஆலோசனைக் குழுவிற்கும் அல்லது வெளியில் பிரயாணத்திலிருக்கிற பிரதான ஆசாரியர்களுக்கும் பன்னிரு அப்போஸ்தலர்களை உள்ளடக்கிய பிரயாணத்திலிருக்கிற பிரதான ஆலோசனைக் குழுவிற்கும் ஒரு வித்தியாசமிருக்கிறது,
31 முந்தையவர்களின் தீர்ப்பிலிருந்து ஒரு மேல் முறையீடு இருக்கலாம்; ஆனால் பிந்தயவர்களின் தீர்ப்பிலிருந்து இருக்கமுடியாது.
32 மீறுதலாயிருந்தால் சபையின் பொது அதிகாரிகளால் கேள்வி கேட்கப்பட பிந்தயவர்கள் அழைக்கப்படலாம்.
33 தீர்மானிக்கப்பட்டது: மேல் முறையீடையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சாட்சிகளையும், அறிக்கைகளையும் ஆராய்ந்தபிறகு, மேல் முறையீடு செய்யப்படுகிற அத்தகைய எந்த வழக்காவது ஒரு மறுவிசாரணைக்கு நியாயமாக தகுதியானதா என தீர்மானிக்க சபையின் பிரதான தலைமையின் இருக்கையிலுள்ள தலைவருக்கு அல்லது தலைவர்களுக்கு அதிகாரமுண்டு.
34 முதலில் யார் பேசுவதென்பதை உறுதிசெய்ய பன்னிரு ஆலோசகர்களும் பின்னர் சீட்டுப் போட்டார்கள் அல்லது வாக்கெடுத்தார்கள், பின்வருவது அதன் முடிவு. பெயர்கள்:1.ஆலிவர் கௌட்ரி; 2.ஜோசப் கோ; 3.சாமுவேல் ஹெச். ஸ்மித்; 4.லூக் ஜான்சன்; 5.ஜான் எஸ். கார்ட்டர்; 6.சில்வெஸ்டர் ஸ்மித்; 7.ஜான் ஜான்சன்; 8.ஆர்சன் ஹைட்; 9.ஜேரட் கார்ட்டர்; 10.ஜோசப் ஸ்மித், மூத்தவர்; 11.ஜான் ஸ்மித்; 12.மார்டின் ஹாரிஸ்.ஜெபத்திற்குப்பின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
ஆலிவர் கௌட்ரி,
ஆர்சன் ஹைட்,
எழுத்தர்கள்