வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 51


பாகம் 51

மே 20, 1831ல் ஒஹாயோவின் தாம்சனில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த சமயத்தில் கிழக்கு மாநிலங்களிலிருந்து குடிபெயரும் பரிசுத்தவான்கள் ஒஹாயோவிற்கு வந்தடைய ஆரம்பித்தார்கள், அவர்களின் குடியேற்றத்திற்கான நிச்சயமான ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாயிருந்தது. இந்த பொறுப்பு, குறிப்பாக ஆயரின் அலுவலுக்கு உரியதாயிருந்ததால், இந்த காரியத்தைக் குறித்த அறிவுரையை ஆயர் எட்வர்ட் பாட்ரிட்ஜ் நாடினார், மேலும் தீர்க்கதரிசி கர்த்தரிடம் விசாரித்தார்.

1–8, உக்கிராணத்துவங்களையும் சொத்துக்களையும் ஒழுங்குபடுத்த எட்வர்ட் பாட்ரிட்ஜ் நியமிக்கப்பட்டார்; 9–12, பரிசுத்தவான்கள் நேர்மையாக கையாண்டு அதைப் போலவே பெறவும் வேண்டும்; 13–15, அவர்கள் ஆயரின் பண்டசாலையைப் பெற்று, கர்த்தரின் பிரமாணத்தின்படி சொத்துக்களை ஒழுங்குபடுத்தவும் வேண்டும்; 16–20, ஒஹாயோ கூடிச் சேர தற்காலிகமான ஒரு இடமாயிருக்கிறது.

1 எனக்குச் செவிகொடுங்கள் என உங்கள் கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜிடம் நான் பேசி, அவனுக்கு வழிகாட்டுதல்களைக் கொடுப்பேன்; ஏனெனில் இந்த ஜனங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது எனும் வழிகாட்டுதல்களை அவன் பெறவேண்டியதாயிருக்கிறது.

2 ஏனெனில் எனது பிரமாணங்களின்படி அவர்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது; இல்லையெனில் அவர்கள் அறுப்புண்டுபோவார்கள்.

3 ஆகவே, எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ், நான் பிரியமாயிருக்கிற, அவன் தெரிந்து கொண்டவர்களும், அவனது குடும்பத்தின்படியும், அவனது சூழ்நிலைகளின்படியும் அவனது தேவைகள் மற்றும் அவசியங்களின்படியும் இந்த ஜனங்களுக்கு அவர்களின் பங்கை ஒவ்வொரு மனுஷனுக்கும் சமமாக ஒதுக்கக்கடவர்கள்.

4 ஒரு மனுஷனுக்கு அவனது பங்கை எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ் ஒதுக்கும்போது, அவன் மீறுதல் செய்யும்வரைக்கும், மேலும் சபையின் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின்படி சபையின் குரலால் தகுதியுள்ளவன் என கருதப்படாதவரைக்கும் அவனது பங்கை அவனடையும் விதமாக அவன் அதை வைத்திருப்பதற்காக, இந்த உரிமையையும் சபையின் இந்த சுதந்தரத்தையும்கூட அவன் வைத்திருக்கும்படிக்கு அவனுக்கு எழுத்து மூலமாக கொடுப்பானாக.

5 அவன் மீறினாலும், சபைக்குச் சொந்தமாயிருக்க தகுதியுடையவனாகக் கருதப்படாவிட்டாலும், எனது சபையின் சிறுமைப்பட்டோருக்கும் எளிமையானவர்களுக்கும் அவன் ஆயரிடம் பிரதிஷ்டைபண்ணப்பட்ட அந்த பகுதியை உரிமைகோர அவனுக்கு அதிகாரமில்லாதிருக்கும். அதனால் அந்த வரத்தை அவன் வைத்திருக்கமாட்டான், ஆனால் அவனுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த பகுதியை மட்டும் உரிமை கோரலாம்.

6 அப்படியாக சகல காரியங்களும் தேசத்தின் சட்டத்தின்படி நிச்சயப்படுத்தப்படும்.

7 இந்த ஜனங்களுக்கு சொந்தமாயிருக்கிறவை இந்த ஜனங்களுக்கு ஒதுக்கப்படுவதாக.

8 இந்த ஜனங்களுக்காக வைக்கப்பட்ட பணத்தை, இந்த ஜனங்களின் தேவைகளின்படி ஆகாரமளிக்கவும் வஸ்திரமளிக்கவும் எடுக்க, இந்த ஜனங்களுக்காக ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவானாக.

9 ஒவ்வொரு மனுஷனும் நேர்மையாக செயல்படக்கடவானாக, நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைப்போல நீங்கள் ஒன்றாயிருக்கும்படியாக, இந்த ஜனங்களுக்கு மத்தியில் ஒன்று போலிருங்கள், ஒன்றுபோல் பெறுங்கள்.

10 இந்த ஜனங்களுக்கு சொந்தமானவை மற்றொரு சபைக்கு எடுத்துக்கொடுக்கப்படாதிருப்பதாக.

11 ஆகவே, இந்த சபையின் பணத்தை மற்றொரு சபை பெறுவதாயிருந்தால், அவர்கள் ஒப்புக்கொள்வதன்படி அவர்கள் மீண்டும் இந்த சபைக்கு செலுத்தக்கடவர்கள்;

12 இது ஆயர் அல்லது சபையின் குரலால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாக, செயல்படுத்தப்படவேண்டும்.

13 மீண்டும், இந்த சபைக்கு ஒரு பண்டசாலையை ஆயர் ஏற்படுத்துவாராக; இந்த ஜனங்களின் தேவைகளுக்கு அவசியமானதைவிட அதிகமான பணமும் மாம்சமுமான சகல பொருட்களும் ஆயரின் பாதுகாப்பிலிருப்பதாக.

14 இந்த விவகாரத்தைச் செயல்படுத்துவதில் அவன் நியமிக்கப்பட்டிருப்பதால், அவனது தேவைகளுக்கும் அவனது குடும்பத்தின் தேவைகளுக்குமாக அவன் பாதுகாத்து வைக்கக்கடவன்.

15 அப்படியாக எனது நியாயப்பிரமாணங்களின்படி இந்த ஜனங்கள் தங்களை ஒழுங்குபடுத்த நான் ஒரு சிலாக்கியத்தை கொடுக்கிறேன்.

16 கர்த்தராகிய நான் மற்றபடி அவர்களுக்கு வழங்கி அவர்கள் இங்கிருந்து போக கட்டளையிடும்வரை நான் ஒரு சிறிய காலத்திற்கு இந்த நிலத்தை அவர்களுக்கு கொடுக்கிறேன்.

17 நாழிகையும் நாளும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை, ஆகவே, இந்த நிலத்தில் அநேக வருஷங்களாக அவர்கள் உழைக்கட்டும், இது அவர்களின் நன்மைக்கேதுவானதாக மாறும்.

18 இதோ, மற்ற இடங்களிலும், சகல சபைகளிலும் எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜூக்கு இது ஒரு எடுத்துக்காட்டாயிருக்கும்.

19 உண்மையுள்ள, நீதியுள்ள மற்றும் ஞானமுள்ள உக்கிராணக்காரனாக காணப்படுகிறவன், அவனுடைய கர்த்தரின் சந்தோஷத்திற்குள் பிரவேசித்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வான்.

20 மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீ நினைத்திராத நாழிகையிலே சீக்கிரத்திலே வருகிற இயேசு கிறிஸ்து நானே. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.