ஏப்ரல் 6, 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தல் சபை ஆரம்பிக்கப்படும்போது, தீர்மானிக்கப்பட்ட தேதியில், பீட்டர் விட்மர் மூத்தவர் வீட்டில் கொடுக்கப்பட்டது. முன்னதாக ஞானஸ்நானம் பெற்ற ஆறுபேர் பங்கேற்றனர். ஏகோபித்த வாக்குகள் மூலம் இந்த மனுஷர்கள், சபையை அமைப்பதற்கான தங்கள் வாஞ்சையையும் தீர்மானத்தையும் தேவனின் கட்டளையின்படி தெரிவித்தனர். (பாகம் 20 பார்க்கவும்). சபையின் தலைமை தாங்கும் அலுவலர்களாக ஜோசப் ஸ்மித் இளையவரையும், ஆலிவர் கௌட்ரியையும் ஏற்றுக்கொள்ளவும், ஆதரிக்கவும் அவர்கள் மேலும் வாக்களித்தார்கள். பின்னர் கைகள் வைக்கப்பட்டதுடன் சபையின் ஒரு மூப்பராக ஜோசப் ஆலிவரை நியமித்தார், அப்படியே ஜோசப்பை ஆலிவர் நியமித்தார். திருவிருந்தை நிர்வகித்த பின்பு, பரிசுத்த ஆவியை அருளுவதற்காகவும், சபையின் அங்கத்தினராக ஒவ்வொருவரையும் திடப்படுத்தவும் ஜோசப்பும் ஆலிவரும், பங்கேற்ற ஒவ்வொருவர் மீதும் தனித்தனியே கைகளை வைத்தார்கள்.