வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 31


பாகம் 31

செப்டம்பர் 1830ல் தாமஸ் பி.மார்ஷூக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சபையின் மாநாட்டைத் தொடர்ந்து உடனடியாக நடந்த சம்பவம் (பாகம் 30ன் தலைப்பைப் பார்க்கவும்). மாதத்தின் ஆரம்பத்தில் தாமஸ் பி. மார்ஷ் ஞானஸ்நானம் பெற்று, இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்படுவதற்கு முன் சபையில் ஒரு மூப்பராக நியமிக்கப்பட்டார்.

1–6, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தாமஸ் பி. மார்ஷ் அழைக்கப்பட்டு, அவரது குடும்ப நல்வாழ்வுக்கு உறுதியளிக்கப்பட்டது; 7–13, பொறுமையாயிருக்கவும், எப்போதும் ஜெபிக்கவும், தேற்றரவாளனைப் பின்பற்றும்படியும் அவர் ஆலோசனையளிக்கப்பட்டார்.

1 எனது குமாரனாகிய தாமஸ், எனது பணியில் உனது விசுவாசத்தினித்தம் நீ பாக்கியவானாயிருப்பாய்.

2 இதோ, உனது குடும்பத்தினிமித்தம் உனக்கு அநேக உபத்திரவங்களிருந்தன; ஆயினும், உன்னையும் உன் குடும்பத்தையும், ஆம், உன் சிறு பிள்ளைகளையும் நான் ஆசீர்வதிப்பேன்; அவர்கள் நம்பி சத்தியத்தை அறிந்துகொண்டு எனது சபையில் உன்னோடு அவர்கள் ஒன்றாக இருக்கப்போகிற நாள் வருகிறது.

3 உனது இருதயத்தை உயர்த்தி களிகூரு, ஏனெனில் உனது ஊழியத்தின் நேரம் வந்தது; உனது நாவுகள் கட்டவிழ்க்கப்படும், இந்த சந்ததிக்கு மிகுந்த சந்தோஷத்தின் நற்செய்தியை நீ அறிவிப்பாய்.

4 எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நீ அறிவிப்பாயாக. இந்த சமயத்திலிருந்து, ஆம், சுட்டெரிக்கப்பட ஏற்கனவே விளைந்திருக்கிற வயல்வெளியில் அறுக்க நீ பிரசங்கிக்க ஆரம்பிப்பாயாக.

5 ஆகவே, உன் முழு ஆத்துமாவோடு உன் அரிவாளை நீட்டு, உனது பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன, நீ உன் முதுகின்மேல் அரிக்கட்டுகளைச் சுமப்பாய், ஏனெனில் வேலையாள் அவனது கூலிக்கு பாத்திரனாயிருக்கிறான். ஆகவே, உனது குடும்பம் ஜீவித்திருக்கும்.

6 இதோ, கொஞ்சக்காலம் மாத்திரம் அவர்களை விட்டுப்போய், எனது வார்த்தையை அறிவி, அவர்களுக்காக ஒரு இடத்தை நான் ஆயத்தப்படுத்துவேன் என மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

7 ஆம், ஜனங்களின் இருதயங்களை நான் திறப்பேன், அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்வார்கள். உனது கையால் ஒரு சபையை நான் அமைப்பேன்;

8 அவர்கள் கூட்டிச்சேர்க்கப்படும்போது அவர்களை நீ பெலப்படுத்தி, காலத்திற்கு எதிராக அவர்களை ஆயத்தப்படுத்து.

9 உபத்திரவங்களில் பொறுமையாயிரு, தூஷிப்பவர்களுக்கு எதிராக தூஷிக்காதே. சாந்தத்தில் உன் வீட்டை ஆளுகை செய், உறுதியுள்ளவனாயிரு.

10 இதோ, சபைக்கு நீ ஒரு வைத்தியனாயிருப்பாய், ஆனால் உலகத்தாருக்கல்ல, ஏனெனில் அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

11 நான் சித்தமாயிருக்கிற இடமெல்லாம் உன் வழியில் போ, நீ என்ன செய்யவேண்டுமென்றும், நீ எங்கே போகவேண்டுமென்றும் தேற்றரவாளனால் உனக்குக் கொடுக்கப்படும்.

12 சோதனைக்குட்படாதபடிக்கும் உன் பலனை இழந்து போகாதிருக்கவும் எப்போதும் ஜெபம்பண்ணு.

13 முடிவுபரியந்தம் உண்மையுள்ளவனாயிரு, இதோ, நான் உன்னுடனேகூட இருக்கிறேன். இந்த வார்த்தைகள் மனுஷனுடையதோ, மனுஷர்களுடையதோ அல்ல, ஆனால் பிதாவின் சித்தத்தால் உனது மீட்பரும் இயேசு கிறிஸ்துவுமான என்னிடமிருந்து வந்தவை. ஆமென்.