வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 36


பாகம் 36

டிசம்பர் 9, 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில் எட்வர்ட் பாட்ரிட்ஜூக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். (பாகம் 35ன் தலைப்பைப் பார்க்கவும்). எட்வர்ட் பாட்ரிட்ஜ், “தெய்வ பக்திக்கு ஒரு மாதிரியாகவும், கர்த்தரின் மகத்தான மனுஷர்களில் ஒருவராகவும் இருந்தார்” என ஜோசப் ஸ்மித்தின் வரலாறு உரைக்கிறது.

1–3, சிட்னி ரிக்டன் கையால் எட்வர்ட் பாட்ரிட்ஜ் மேல் கர்த்தர் தனது கைகளை வைக்கிறார்; 4–8, சுவிசேஷத்தையும் ஆசாரியத்துவத்தையும் பெற்றுக்கொள்கிற ஒவ்வொரு மனுஷனும், போய் பிரசங்கிக்க அழைக்கப்படவிருக்கிறான்.

1 இஸ்ரவேலின் வல்லவரான கர்த்தராகிய தேவன் இப்படியாகச் சொல்லுகிறார்: இதோ, எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட், நீ ஆசீர்வதிக்கப்படுகிறாய், உனது பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன, ஒரு எக்காளச் சத்தத்தைப் போல எனது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நீ அழைக்கப்பட்டிருக்கிறாய் என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

2 எனது ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனின் கையால் நான் எனது கையை உன்மேல் வைப்பேன், பரிசுத்த ஆவியான எனது ஆவியை, ராஜ்யத்தின் சமாதானமான காரியங்களை உனக்குப் போதிக்கிற தேற்றரவாளனை நீ பெறுவாய்;

3 அதை ஒரு சத்தமான குரலில் நீ சொல்லி அறிவிப்பாயாக: ஓசன்னா, உன்னதமான தேவனின் நாமம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக.

4 இப்பொழுது சகல மனுஷர்களையும் குறித்த இந்த அழைப்பையும் கட்டளையையும் நான் உனக்குக் கொடுக்கிறேன்,

5 இந்த அழைப்பையும் கட்டளையையும் ஏற்றுக்கொண்டு எனது ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுக்கும் ஜோசப் ஸ்மித் இளையவனுக்கும் முன்பாக வருகிற அநேகரும் நியமிக்கப்பட்டு, தேசங்களுக்கு மத்தியில் நித்திய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பப்படுவார்கள்,

6 மனந்திரும்புதலுக்காக கூக்குரலிட்டுச் சொல்லுங்கள்: இந்த அடங்காத சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள், மாம்சத்தால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தை வெறுத்து, அக்கினியைவிட்டு வெளியே வாருங்கள்.

7 நான் பேசியபடி ஒரே எண்ணத்தோடு அதை ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொரு மனுஷனும் நியமிக்கப்பட்டு அனுப்பப்படலாம் என்ற இந்த கட்டளை எனது சபையின் மூப்பர்களுக்குக் கொடுக்கப்படும்.

8 தேவகுமாரனாகிய நானே இயேசு கிறிஸ்து; ஆகவே, உங்கள் அரைக் கச்சையை கட்டிக்கொள்ளுங்கள், திடீரென நான் என்னுடைய ஆலயத்திற்கு வருவேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.