பாகம் 89
பிப்ருவரி 27, 1833ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஆரம்பகால சகோதரர்கள் தங்களுடைய கூட்டங்களில் புகையிலையை பயன்படுத்தியதின் விளைவாக அந்தக் காரியத்தைக்குறித்து தீர்க்கதரிசி சிந்திக்க நடத்தப்பட்டார்; அதன் விளைவாக அதைக் குறித்து கர்த்தரிடம் அவர் விசாரிக்க ஆரம்பித்தார். ஞான வார்த்தை என அறியப்பட்ட இந்த வெளிப்படுத்தல் அதன் விளைவாயிருந்தது.
1–9, திராட்சைரசம், மதுபானம், புகையிலை, மற்றும் போதை பானங்களின் உபயோகம் விலக்கப்படுகிறது; 10–17, மனுஷன் மற்றும் விலங்குகளின் உபயோகத்திற்காக தாவரங்கள், கனிகள், மாம்சம் மற்றும் தானியம் நியமிக்கப்பட்டிருக்கிறது; 18–21, ஞானவார்த்தையையும் சேர்த்து சுவிசேஷ நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிதல் உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
1 கர்த்லாந்தில் கூடியிருந்த ஆலோசனைக்குழுவின் பிரதான ஆசாரியர்கள், சபை மற்றும் சீயோனின் பரிசுத்தவான்களின் நலனுக்காக ஞானவார்த்தை.
2 வாழ்த்துதல் அனுப்பப்படும்படியாக; கட்டளையின்படியோ அல்லது கட்டாயத்தின்படியோ அல்ல, ஆனால் கடைசி நாட்களில் சகல பரிசுத்தவான்களின் உலகப்பிரகாரமான இரட்சிப்பில் ஒழுக்கத்தையும் தேவனின் சித்தத்தையும் காட்டி வெளிப்படுத்துதலாலும் ஞானவார்த்தையாலுமே.
3 பரிசுத்தவான்களாக இருக்கிற அல்லது பரிசுத்தவான்களாக அழைக்கப்பட முடிகிற பலவீனமான, சகல பரிசுத்தவான்களில் மிகப் பலவீனமானவரின் சக்திக்கு ஏற்றார்போல வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கைக்காகக் கொடுக்கப்பட்டது.
4 இதோ, உங்களுக்கு மெய்யாகவே கர்த்தர் சொல்லுகிறதாவது: கடைசி நாட்களில் சதி செய்கிற மனுஷர்களின் இருதயங்களிலிருக்கிற, இருக்கப்போகிற தீமைகள் மற்றும் திட்டங்களின் விளைவாக, வெளிப்படுத்துதலால் இந்த ஞானவார்த்தையை உங்களுக்குக் கொடுத்து நான் உங்களை எச்சரித்தேன், உங்களை முன் எச்சரிக்கிறேன்,
5 உங்களுக்கு மத்தியிலே இருக்கிற எந்த மனுஷனாவது திராட்சை ரசத்தையோ அல்லது மதுபானத்தையோ குடித்தால், இதோ, அது நல்லதல்ல, உங்கள் பிதாவின் பார்வையில் தகுந்ததல்ல, அவருக்கு முன்பாக உங்களுடைய திருவிருந்தை செலுத்த நீங்கள் ஒன்றுகூடுவது மட்டுமே நல்லது.
6 இதோ, இது திராட்சை ரசமாய், ஆம், உங்களுடைய சொந்த தயாரிப்பான, திராட்சைத் தோட்டத்தின் சுத்தமான திராட்சை ரசமாயிருக்க வேண்டும்.
7 மீண்டும், மதுபானங்கள் வயிற்றுக்கல்ல, ஆனால் உங்கள் சரீரங்களைக் கழுவுவதற்கே.
8 மீண்டும், புகையிலை சரீரத்திற்கோ, வயிற்றுக்கோ அல்ல, மனுஷர்களுக்கு நல்லதல்ல, ஆனால், காயங்களுக்காகவும், வியாதியுள்ள சகல கால்நடைகளுக்கும், சிந்தனையோடும், திறமையோடும் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு மூலிகை.
9 மீண்டும், சூடான பானங்கள் சரீரத்திற்கோ அல்லது வயிற்றுக்கோ அல்ல.
10 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எல்லா ஆரோக்கியமான பூண்டுகளையும் சரீரத்துக்காகவும், இயற்கைக்காகவும், மனுஷனின் பயனுக்காகவும் தேவன் நியமித்திருக்கிறார்,
11 ஒவ்வொரு பூண்டுவகையும் அதனதன் காலத்திலும், ஒவ்வொரு கனியும் அதனதன் காலத்திலும் வருகின்றன; இவைகள் அனைத்தும் யுக்தியோடும் நன்றியறிதலோடும் பயன்படுத்தப்படவேண்டும்.
12 ஆம், பிராணிகளின், மற்றும் ஆகாயத்துப் பறவைகளின் இறைச்சியையும்கூட நன்றியறிதலோடு மனுஷன் பயன்படுத்த கர்த்தராகிய நான் நியமனம் செய்தேன்; ஆயினும் அவைகள் குறைவாகப் பயன்படுத்தப்படவேண்டும்;
13 குளிர் காலம் அல்லது கடுங்குளிர், அல்லது பஞ்ச காலங்களில் மட்டுமேயன்றி அவைகள் பயன்படுத்தப்படாதிருப்பது எனக்குப் பிரியமாயிருக்கிறது.
14 சகல தானியமும் வாழ்வின் ஆதாரமாயிருக்க மனுஷன் மற்றும் பிராணிகளின் பயனுக்காக, நியமிக்கப்பட்டிருக்கிறது. மனுஷனுக்கு மாத்திரமல்ல, நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின்மேலே ஓடுகிற அல்லது ஊருகிற சகல காட்டு மிருகங்களுக்கும் ஆகும்.
15 பஞ்சம் மற்றும் பசி அதிகமான காலங்களில் மாத்திரம், மனுஷனின் பயனுக்காக இவைகளை தேவன் உண்டாக்கினார்.
16 மனுஷனின் ஆகாரத்திற்காக சகல தானியங்களும்; தரையிலோ அல்லது தரைக்கு மேலேயோ கனி தருகிற செடியின் கனியும்கூட நன்மையானவை,
17 ஆயினும், மனுஷனுக்கு கோதுமையும், மாட்டுக்கு சோளமும், குதிரைக்கு ஓட்ஸூம், பறவைகளுக்கும் பன்றிகளுக்கும், சகல நாட்டு மிருகங்களுக்கும் கம்பு தானியமும், வாற்கோதுமை சகல பயனுள்ள பிராணிகளுக்கும், இவையும் பிற தானியங்களும் பானங்களுக்கும்கூட.
18 இந்த சொல்லப்பட்டவைகளை கைக்கொள்ளவும், செய்யவும் நினைவில் வைக்கிற, கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற சகல பரிசுத்தவான்களும் அவர்களுடைய நாபிக்கு ஆரோக்கியமும் அவர்களுடைய எலும்புகளுக்கு ஊனும் பெறுவார்கள்;
19 ஞானத்தையும், அறிவின் பெரிதான பொக்கிஷங்களையும், மறைவான பொக்கிஷங்களையும் கூட காண்பார்கள்;
20 அவர்கள் ஓடுவார்கள், களைப்படையமாட்டார்கள், நடப்பார்கள், மயக்கமடையமாட்டார்கள்.
21 இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் போனதுபோல, சங்காரத்தூதன் அவர்களைக் கடந்து போவான், அவர்களை சங்கரிப்பதில்லை என்ற ஒரு வாக்குத்தத்தத்தை கர்த்தராகிய நான் அவர்களுக்கு கொடுக்கிறேன். ஆமென்.