பாகம் 98
ஆகஸ்டு 6, 1833ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மிசௌரியில் பரிசுத்தவான்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலைத் தொடர்ந்து இந்த வெளிப்படுத்தல் வந்தது. மிசௌரியில் அதிகரித்த சபை அங்கத்தினர்களின் குடியேற்றம், பரிசுத்தவான்களின் எண்ணிக்கையாலும், அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்காலும், கலாச்சார மற்றும் மத வேறுபாடுகளால் பயமுறுத்தப்படுவதாக எண்ணிய பிற குடியேறியவர்களை தொந்தரவு செய்தது. ஜூலை 1833ல் ஒரு கும்பல் சபை சொத்துக்களை அழித்து, இரண்டு சபை அங்கத்தினர்களை தாராலும் இறகுகளாலும் பூசி ஜாக்சன் மாகாணத்தை பரிசுத்தவான்கள் விட்டுப்போகுமாறு கட்டாயப்படுத்தினார்கள். மிசௌரியிலுள்ள பிரச்சினைகளின் சில செய்திகள் சந்தேகத்திற்கிடமின்றி கர்த்லாந்திலுள்ள (தொள்ளாயிரம் மைல்களுக்கப்பால்) தீர்க்கதரிசியிடம் போய்ச் சேர்ந்தாலும்கூட இந்த தேதியில் சூழ்நிலையின் தீவிரம் வெளிப்படுத்தல் மூலமாகவே அவருக்குத் தெரியவந்தது.
1–3, அவர்களுடைய நன்மைக்காகவே பரிசுத்தவான்களுக்கு துன்புறுத்தல்களிருக்கும்; 4–8, தேசத்தின் சட்ட அமைப்புகளை ஏற்றுக்கொண்டவர்களாக பரிசுத்தவான்கள் இருக்கவேண்டும்; 9–10, மதச்சார்பில்லாத அரசாங்கத்திற்கு நேர்மையான, புத்திசாலியான, நல்ல மனுஷர்கள் ஆதரிக்கப்படவேண்டும்; 11–15, கர்த்தருக்காக தங்களுடைய ஜீவனைக் கொடுக்கிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்; 16–18, யுத்தத்தை துறந்து சமாதானத்தை அறிவியுங்கள்; 19–22, கர்த்லாந்திலுள்ள பரிசுத்தவான்கள் கடிந்துரைக்கப்பட்டு மனந்திரும்ப கட்டளையிடப்பட்டார்கள்; 23–32, அவருடைய ஜனங்களின்மேல் சுமத்தப்பட்ட துன்புறுத்தல்களையும் உபத்திரவங்களையும் ஆளுகை செய்கிற அவருடைய நியாயப்பிரமாணங்களை கர்த்தர் வெளிப்படுத்துகிறார்; 33–38, கர்த்தர் அதைக் கட்டளையிடும்போது மட்டுமே யுத்தம் நியாயமாக்கப்படும்; 39–48, பரிசுத்தவான்கள் தங்களுடைய சத்துருக்களை மன்னிக்கவேண்டும், அவர்கள் மனந்திரும்பினால் கர்த்தருடைய பழிதீர்த்தலுக்கும் தப்புவார்கள்.
1 என்னுடைய சிநேகிதரே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பயப்படாதிருங்கள், உங்களுடைய இருதயங்கள் ஆறுதலடைவதாக; ஆம், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், அனைத்திலும் நன்றி செலுத்துங்கள்;
2 கர்த்தருக்காக பொறுமையாய் காத்திருந்ததால் உங்களுடைய ஜெபங்கள் ஓய்வுநாளின் கர்த்தரின் செவிகளில் எட்டியது, இந்த முத்திரையோடும் சாட்சியோடும் பதிக்கப்பட்டது, அவைகள் கொடுக்கப்படுமென கர்த்தர் ஆணையிட்டு கட்டளையிட்டார்.
3 ஆகவே, அவைகள் நிறைவேற்றப்படுமென்ற ஒரு மாறாத உடன்படிக்கையுடன் இந்த வாக்குத்தத்தத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார்; உங்களுடைய நன்மைக்காகவும் என்னுடைய நாமத்தின் மகிமைக்காகவும் நீங்கள் உபத்திரவப்பட்டவைகளில் சகல காரியங்களும் இணைந்து நடக்கும் என கர்த்தர் சொல்லுகிறார்.
4 இப்பொழுது, தேசத்தின் சட்டங்களைக்குறித்து மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட சகல காரியங்களையும் என்னுடைய ஜனங்கள் செய்து, கைக்கொள்ளவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.
5 மனுக்குலம் முழுவதற்கும் சொந்தமான உரிமைகளையும், சிலாக்கியங்களையும் பாதுகாப்பதில், சுதந்தரத்தின் அந்த கொள்கையை ஆதரிப்பதில் அரசியலமைப்பாயிருக்கிற தேசத்தின் சட்டம், எனக்கு முன்பாக நியாயமாயிருக்கிறது.
6 ஆகவே, தேசத்தின்அரசியலமைப்பாயிருக்கிற அந்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் உங்களையும், என்னுடைய சபையின் உங்களுடைய சகோதரர்களையும் கர்த்தராகிய நான் நியாயப்படுத்துவேன்;
7 மனுஷனின் சட்டத்திற்கு சம்பந்தப்பட்டவரை இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பவை தீமையினால் உண்டாயிருக்கும்.
8 தேவனாகிய கர்த்தராகிய நான் உங்களை விடுதலையாக்குகிறேன், ஆகவே நீங்கள் உண்மையாகவே விடுதலையடைந்திருக்கிறீர்கள். சட்டமும் உங்களை விடுதலையாக்குகிறது.
9 ஆயினும், துன்மார்க்கர் ஆளுகை செய்யும்போது ஜனங்கள் துக்கிப்பார்கள்.
10 ஆகவே, நேர்மையான மனுஷர்களும், புத்திசாலியான மனுஷர்களும் கருத்தாய் தேடப்படவேண்டும், நல்ல மனுஷர்களையும் புத்திசாலியான மனுஷர்களையும் நீங்கள் ஆதரிக்கவேண்டும், இல்லையெனில் இதைவிடக் குறைவானவை தீமையினால் உண்டாயிருக்கும்.
11 தேவனுடைய வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் நீங்கள் பிழைத்திருக்கும்படியாக சகல தீமையானவைகளையும் நீங்கள் விட்டுவிட்டு சகல நன்மையான காரியங்களையும் பற்றிக்கொள்ளவேண்டும் என்ற ஒரு கட்டளையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன்.
12 ஏனெனில் உண்மையுள்ளவர்களுக்கு கட்டளையின்மேல் கட்டளையும் பிரமாணத்தின்மேல் பிரமாணத்தையும் அவர் கொடுப்பார்; நான் உங்களை சோதித்து இதனுடன் நிரூபிப்பேன்.
13 எனக்காக, என்னுடைய நாமத்தின் நிமித்தமாக தன்னுடைய ஜீவனைக் கொடுக்கிறவன், மீண்டும் நித்திய ஜீவனைக் கண்டடைவான்.
14 ஆகவே, உங்களுடைய சத்துருக்களுக்கு பயப்படாதிருங்கள், ஏனெனில் என்னுடைய இருதயத்திலே நான் கட்டளையிட்டதால், நீங்கள் தகுதியாயிருப்பதைக் காணும்படியாக மரண பரியந்தம் என்னுடைய உடன்படிக்கையில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்களா என சகல காரியங்களிலும் நான் உங்களை சோதித்துப் பார்ப்பேன் என கர்த்தர் சொல்லுகிறார்.
15 ஏனெனில் என்னுடைய உடன்படிக்கையில் நீங்கள் நிலைத்திராவிட்டால் எனக்கு நீங்கள் தகுதியானவர்களல்ல.
16 ஆகவே, யுத்தத்தை துறந்து சமாதானத்தை அறிவித்து, பிள்ளைகளின் இருதயங்களை தங்களின் பிதாக்களிடத்திற்கும், பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும் திருப்ப கருத்தாய் நாடுங்கள்;
17 மீண்டும், பூமி முழுவதையும் நான் ஒரு சங்காரத்தால் அடிக்காதபடிக்கும் சகல மாம்சமும் எனக்கு முன்பாக நிர்மூலமாக்கப்படாதபடிக்கும், யூதர்களின் இருதயங்களை தீர்க்கதரிசிகளிடத்திலும், தீர்க்கதரிசிகளின் இருதயங்களை யூதர்களிடத்திலும் திருப்புங்கள்.
18 உங்களுடைய இருதயங்கள் கலங்காதிருப்பதாக; ஏனெனில் என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை நான் ஆயத்தம் பண்ணியிருக்கிறேன்; என்னுடைய பிதாவும் நானுமிருக்குமிடத்திலே நீங்களுமிருப்பீர்கள்.
19 இதோ, கர்த்லாந்திலுள்ள சபையிலுள்ள அநேகரிடம் கர்த்தராகிய நான் பிரியமாயிருக்கவில்லை;
20 ஏனெனில் அவர்கள் தங்களுடைய பாவங்களையும், தங்களுடைய பொல்லாங்கான வழிகளையும், தங்களுடைய இருதயங்களின் கர்வங்களையும், தங்களுடைய இச்சைகளையும், தங்களுடைய சகல அருவருப்பான காரியங்களையும் விட்டுவிடவில்லை, மற்றும் நான் அவர்களுக்குக் கொடுத்த ஞானமான வார்த்தைகளையும் நித்திய ஜீவனையும் கைக்கொள்ளவில்லை.
21 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் மனந்திரும்பாமல் நான் அவர்களுக்குக் கூறிய சகல காரியங்களையும் கைக்கொள்ளாதிருந்தால் கர்த்தராகிய நான் அவர்களை கண்டித்து நான் பட்டியலிட்டவைகளைச் செய்வேன்.
22 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்கு கட்டளையிட்டவற்றை நீங்கள் கைக்கொண்டால், உங்களிடமிருந்து சகல கோபத்தையும் ஆக்கினையையும் கர்த்தராகிய நான் திரும்ப எடுத்துப் போடுவேன். பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொள்ளாது.
23 இப்பொழுது, உங்களுடைய குடும்பங்களைக் குறித்து நான் உங்களோடு பேசுகிறேன், மனுஷர்கள் உங்களை அல்லது உங்களுடைய குடும்பங்களை ஒருமுறை அடித்தால், நீங்கள் பொறுமையாய் தாங்கிக் கொள்ளுங்கள், அவர்களுக்கெதிராக பதிலடி கொடுக்காதிருங்கள், பழிதீர்க்க நாடாதிருங்கள், நீங்கள் பலனடைவீர்கள்;
24 ஆனால் நீங்கள் அதைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளாதிருந்தால், நியாயமான அளவில் உங்களுக்கு அளக்கப்படுவதைப்போல அது உங்கள்மீது சுமத்தப்படும்.
25 மீண்டும், உங்களுடைய சத்துரு இரண்டாவது முறையாக உங்களை அடித்தால் உங்களுடைய சத்துருவுக்கு எதிராக பதிலடி கொடுக்காதிருங்கள், பொறுமையாய் தாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பலன் நூறத்தனையாயிருக்கும்.
26 மீண்டும், அவன் மூன்றாவது முறையாக உங்களை அடித்தால், பொறுமையாய் தாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பலன் இரட்டிப்பாகி நான்கு மடங்காயிருக்கும்;
27 அவன் மனந்திரும்பாவிட்டால் இந்த மூன்று சாட்சிகளும் உங்களுடைய சத்துருவுக்கு எதிராக நிற்கும், மறக்கப்படுவதில்லை.
28 இப்பொழுது மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்கு அவன் கொண்டு வரப்படாதிருக்கும்படி என்னுடைய பழிதீர்த்தலிலிருந்து அந்த சத்துரு தப்பித்தால், பின்னர் உங்களிடத்திலும், உங்கள் குடும்பத்தாரிடத்திலும், மூன்றாவது நான்காவது தலைமுறையாக உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளிடத்திலும் ஒருபோதும் வராதிருக்க என்னுடைய நாமத்தில் அவனை நீங்கள் எச்சரிக்கப்பாருங்கள்.
29 பின்னர், அவன் உங்களிடத்திலோ, அல்லது உங்கள் பிள்ளைகளிடத்திலோ, அல்லது மூன்றாவது நான்காவது தலைமுறையாக உங்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளிடத்திலோ அவன் வந்தால், உங்களுடைய சத்துருக்களை உங்களுடைய கைகளில் நான் ஒப்புக் கொடுப்பேன்;
30 பின்னர் அவனை நீங்கள் தப்புவித்தால் உங்களுடைய நீதியினிமித்தம் உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும், மூன்றாவது நான்காவது தலைமுறையாக உங்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் பலனுண்டாயிருக்கும்.
31 ஆயினும், உங்களுடைய சத்துருக்கள் உங்களுடைய கைகளிலிருக்கிறார்கள்; அவனுடைய கிரியைக்குத்தக்கதாய் அவனுக்கு நீங்கள் பதில் செய்தால் நீங்கள் நீதிமான்களாக்கப்படுகிறீர்கள்; உங்களுடைய ஜீவனை அவன் நாடி, உங்களுடைய ஜீவன் அவனால் ஆபத்திலிருந்தால், உங்களுடைய சத்துரு உங்களுடைய கைகளிலிருப்பான், நீங்கள் நீதிமான்களாக்கப்படுகிறீர்கள்.
32 இதோ, இந்த நியாயப்பிரமாணத்தையே என்னுடைய ஊழியக்காரனாகிய நேபிக்கும், உங்களுடைய பிதாக்களான யோசேப்புக்கும், யாக்கோபுவுக்கும், ஈசாக்குக்கும், ஆபிரகாமுக்கும், என்னுடைய பூர்வகால சகல தீர்க்கதரிசிகளுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் நான் கொடுத்தேன்.
33 மீண்டும், கர்த்தராகிய நான் அவர்களுக்கு கட்டளையிடாதவரை அவர்கள் எந்த ஜாதிகளுக்கும், இனத்தார்களுக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணக்கூடாது என்ற இந்த நியாயப்பிரமாணத்தையே என்னுடைய பூர்வகாலத்தவர்களுக்கு நான் கொடுத்தேன்.
34 எந்த ஜாதிகளும், பாஷைக்காரரும், ஜனங்களும் அவர்களுக்கு எதிராக யுத்தம்பண்ண அறிவித்தால், அந்த ஜனங்களுக்கு, ஜாதிகளுக்கு, பாஷைக்காரருக்கு அவர்கள் முதலாவதாக சமாதானத்தின் கொடியை ஏற்ற வேண்டும்;
35 அந்த ஜனங்கள் சமாதானத்தை, இரண்டாவது, மூன்றாவது முறையாக ஏற்றுக்கொள்ளவில்லையெனில், இந்த சாட்சிகளை கர்த்தருக்கு முன்பாக அவர்கள் கொண்டுவரவேண்டும்;
36 பின்னர் கர்த்தராகிய நான் அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுப்பேன், ஜாதிகளுக்கும், பாஷைக்காரருக்கும், அல்லது ஜனங்களுக்கும் எதிராக யுத்தம்பண்ண போவதில் அவர்களை நியாயப்படுத்துவேன்.
37 அவர்களின் சத்துருக்களின் மேல் அவர்கள் மூன்றாவது, நான்காவது தலைமுறை மட்டும் பழிதீர்க்கும் வரை அவர்களுடைய யுத்தங்களையும், அவர்களுடைய பிள்ளைகளின் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளின் யுத்தங்களையும், கர்த்தராகிய நான் பண்ணுவேன்.
38 இதோ, எனக்கு முன்பாக நியாயமாயிருக்கும்படியாக இது சகல ஜனங்களுக்கும் ஒரு மாதிரியாயிருக்கிறது என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
39 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பின்னர் முதல் முறையாக உங்களுடைய சத்துரு மனந்திரும்பி உங்களுடைய மன்னிப்பிற்காக உங்களிடத்தில் வந்து வேண்டிக்கொண்டால் அவனை நீங்கள் மன்னிப்பீர்களாக, உங்களுடைய சத்துருவுக்கு எதிராக ஒரு சாட்சியாக ஒருபோதும் வைத்திராதிருங்கள்,
40 அப்படியே இரண்டாவது மூன்றாவது முறையும், உங்களுக்கு எதிராக அவன் மீறுதல் செய்தால் உங்களுடைய சத்துரு குற்றத்திற்காக மனந்திரும்பும்போதெல்லாம் ஏழு எழுபதுமுறை அவனை நீங்கள் மன்னிப்பீர்களாக.
41 அவன் உங்களுக்கு விரோதமாக குற்றஞ்செய்து முதல் முறையாக மனந்திரும்பாவிட்டால் ஆயினும் நீங்கள் அவனை மன்னிப்பீர்களாக.
42 இரண்டாவது முறையாக உங்களுக்கு விரோதமாக அவன் குற்றஞ்செய்து மனந்திரும்பாவிட்டால், ஆயினும் நீங்கள் அவனை மன்னிப்பீர்களாக.
43 மூன்றாம் முறையாக உங்களுக்கு விரோதமாக அவன் குற்றஞ்செய்து மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அவனை மன்னிப்பீர்களாக.
44 ஆனால் நான்காம் முறையாக உங்களுக்கு விரோதமாக அவன் குற்றஞ்செய்தால் நீங்கள் அவனை மன்னிக்காதிருப்பீர்களாக, ஆனால் இந்த சாட்சிகளை கர்த்தருக்கு முன்பாக கொண்டு வருவீர்களாக; அவன் மனந்திரும்பும்வரை அவை மறக்கப்படுவதில்லை, உங்களுக்கு எதிராக அவன் குற்றம் செய்த சகல காரியங்களிலும் நான்கு மடங்காக உங்களின் பலனிருக்கும்.
45 அவன் இதைச் செய்தால், உங்களுடைய முழு இருதயத்தோடும் அவனை நீங்கள் மன்னிப்பீர்களாக; அவன் இதைச் செய்யாவிட்டால் உங்களுடைய சத்துருவை,
46 அவனுடைய பிள்ளைகளிடத்திலும், என்னை வெறுக்கிற அவனுடைய பிள்ளைகளின் பிள்ளைகளான அவர்கள் அனைவரிடத்திலும் மூன்றாவது நான்காவது தலைமுறையாக கர்த்தராகிய நான் நூறு மடங்காக பழிவாங்குவேன்.
47 ஆனால் பிள்ளைகள் மனந்திரும்பினால், அல்லது பிள்ளைகளின் பிள்ளைகள், தங்களுடைய முழு இருதயங்களோடும், தங்களுடைய முழு மனதோடும், ஊக்கத்தோடும், பெலத்தோடும் தங்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்கு திரும்பினால், அவர்கள் குற்றம் செய்ததில், அல்லது அவர்களுடைய பிதாக்கள், அல்லது அவர்களுடைய பிதாக்களின் பிதாக்கள் குற்றம் செய்ததில் அவர்களுடைய சகல குற்றங்களுக்காக நாலத்தனையாக திரும்பக்கொடுத்தால், பின்னர் உங்களுடைய ஆக்கினை அகன்றுபோகும்;
48 பழிவாங்குதல் ஒருபோதும் அவர்கள்மேல் வராது என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார், அவர்களுக்கு எதிராக கர்த்தருக்கு முன்பாக அவர்களுடைய மீறுதல்கள் இனிமேலும் சாட்சியாக ஒருபோதும் கொண்டுவரப்படமாட்டாது. ஆமென்.