வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75


பாகம் 75

ஜனுவரி 25, 1832ல் ஒஹாயோவின் ஆம்ஹெர்ஸ்டில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த பாகம் அதே நாளில் கொடுக்கப்பட்ட இரண்டு தனித்தனியான வெளிப்படுதல்களை அடக்கியிருக்கிறது (முதல் வெளிப்படுத்தல் வசனம் 1முதல் 22வரையும் இரண்டாவது வசனம் 23முதல் 36வரையும்). ஒரு மாநாட்டில் பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவராக ஜோசப் ஸ்மித் ஆதரிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்ட சந்தர்ப்பமாய் இது இருந்தது. சில மூப்பர்கள் உடனடியான தங்களுடைய கடமைகளைப்பற்றிய அதிக விவரத்தை அறிந்துகொள்ள விரும்பினார்கள். இந்த வெளிப்படுத்தல் தொடர்ந்தது.

1–5, சுவிசேஷத்தை பிரசங்கித்த உண்மையுள்ள மூப்பர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்; 6–12, சகல காரியங்களையும் போதிக்கிற தேற்றரவாளனைப் பெற ஜெபிக்கவும்; 13–22, தங்களுடைய செய்தியை மறுத்தவர்களின் நியாயத்தீர்ப்பில் மூப்பர்கள் அமருவார்கள்; 23–36, ஊழியக்காரர்களின் குடும்பங்கள் சபையிலிருந்து உதவிபெற வேண்டும்.

1 என்னுடைய ஆவியின் குரலால் பேசுகிற, அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிற, உங்கள் கர்த்தரும் உங்கள் தேவனுமாயிருக்கிற நான் மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,

2 என்னுடைய சுவிசேஷத்தை பிரகடனப்படுத்த போகவும், என்னுடைய திராட்சைத் தோட்டத்தை கிளை நறுக்கவும் பெயர்களைக் கொடுத்தவர்களே, கேளுங்கள்.

3 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் போகவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது, தங்காதீர்கள், சோம்பேறியாய் இருக்காதீர்கள், ஆனால் உங்கள் பெலத்தோடு பிரயாசப்படுங்கள்.

4 ஆனால், ஒரு எக்காளச் சத்தத்துடன் உங்களுடைய குரலை உயர்த்தி, நான் உங்களுக்குக் கொடுத்த வெளிப்படுத்தல்கள் மற்றும் கட்டளைகளின்படி சத்தியத்தை அறிவித்துக்கொண்டு உங்களுடைய ஊக்கத்தோடு பணிபுரிவதே எனது சித்தமாகும்.

5 இப்படியாக, நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால், அநேக அரிக்கட்டுக்களை நீங்கள் சுமப்பீர்கள், மகிமையினாலும், கனத்தினாலும், அழியாமையினாலும் நித்திய ஜீவனாலும் முடிசூட்டப்படுவீர்கள்.

6 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் இ. மெக்லெலின், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், கிழக்கு தேசங்களுக்குப் போகும்படியாக அவனுக்கு நான் கொடுத்த கட்டளையை நான் திரும்பப் பெறுகிறேன்;

7 நான் அவனுக்கு ஒரு புதிய பொறுப்பையும் ஒரு புதிய கட்டளையையும் கொடுக்கிறேன், அதில் கர்த்தராகிய நான் அவனுடைய இருதயத்தின் முறுமுறுப்புகளுக்காக அவனைக் கடிந்துகொள்கிறேன்;

8 அவன் பாவஞ்செய்தான், ஆயினும் நான் அவனை மன்னித்து மீண்டும் அவனுக்குச் சொல்லுகிறேன், நீ தெற்கு தேசங்களுக்குப் போ.

9 என்னுடைய ஊழியக்காரனாகிய லூக் ஜான்சன் அவனோடு போய், அவர்களுக்கு நான் கட்டளையிட்ட காரியங்களை அறிவிப்பார்களாக,

10 அவர்களுக்குத் தேவையான சகல காரியங்களையும் அவர்களுக்குப் போதிக்கிற தேற்றரவாளனுக்காக கர்த்தரின் நாமத்தில் அழைத்து,

11 அவர்கள் துவளாதிருக்க எப்போதும் ஜெபித்துக் கொண்டிருப்பார்களாக; அவர்கள் இதைச் செய்கிற அளவில் முடிவுபரியந்தம் அவர்களோடு நானிருப்பேன்.

12 இதோ, உங்களைக் குறித்து உங்களுடைய தேவனாகிய கர்த்தரின் சித்தம் இதுவே. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

13 மீண்டும், மெய்யாகவே கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் ஹைடும் என்னுடைய ஊழியக்காரனாகிய சாமுவேல் ஹெச். ஸ்மித்தும் கிழக்கு தேசங்களுக்கு தங்களுடைய பயணத்தை மேற்கொண்டு, நான் அவர்களுக்கு கட்டளையிட்ட காரியங்களை அறிவிப்பார்களாக; அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கிற அளவில், முடிவுபரியந்தம் நான் அவர்களோடிருப்பேன்.

14 மீண்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் ஜான்சனுக்கும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் பிராட்டுக்கும் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், அவர்களும் கிழக்கு தேசங்களுக்கு தங்களுடைய பயணத்தை மேற்கொள்ளவேண்டும், இதோ, ஆம், முடிவுபரியந்தம் நான் அவர்களோடுமிருப்பேன்.

15 மீண்டும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஆசா டோட்ஸூக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய கால்வ்ஸ் வில்சனுக்கும் நான் சொல்லுகிறேன், அவர்களும் மேற்கு தேசங்களுக்கு தங்களுடைய பயணத்தை மேற்கொண்டு, அவர்களுக்கு நான் கட்டளையிட்டபடி என்னுடைய சுவிசேஷத்தை அறிவிப்பார்களாக.

16 உண்மையாயிருப்பவன் சகல காரியங்களையும் மேற்கொள்ளுவான், கடைசி நாளில் உயர்த்தப்படுவான்.

17 மீண்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய மேஜர் என். ஆஷ்லி, மற்றும் என்னுடைய ஊழியக்காரனாகிய பர் ரிக்ஸுக்கும் நான் சொல்லுகிறேன், தெற்கு தேசங்களுக்கு அவர்கள் தங்களுடைய பயணத்தை மேற்கொள்வார்களாக.

18 ஆம், வீடுவீடாகவும், கிராமம் கிராமமாகவும் பட்டணம் விட்டு பட்டணத்துக்கும் போய் நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் தங்களுடைய பயணத்தை மேற்கொள்வார்களாக.

19 நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்து, உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்த வீட்டில் உங்கள் ஆசீர்வாதத்தை விட்டுச் செல்லுங்கள்.

20 நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்து உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதிருக்கிறார்களோ, அந்த வீட்டிலிருந்து சீக்கிரமாய் புறப்பட்டுப்போங்கள், அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசை உதறிப்போடுங்கள்.

21 களிப்பினாலும் மகிழ்ச்சியினாலும் நீங்கள் நிரப்பப்படுவீர்கள்; நியாயத்தீர்ப்பின் நாளில் அந்த வீட்டிற்கு நீங்கள் நியாயாதிபதிகளாகி அவர்களை நியாயந்தீர்ப்பீர்கள்;

22 நியாயத்தீர்ப்பின் நாளிலே அந்த வீட்டிற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் புறஜாதியாருக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்; ஆகவே, உங்கள் அரைக்கச்சையைக் கட்டிக்கொண்டு உண்மையுள்ளவர்களாயிருங்கள், சகல காரியங்களையும் மேற்கொண்டு கடைசி நாளில் உயர்த்தப்படுவீர்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

23 மீண்டும், இப்படியாக கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிறார், உங்களைப்பற்றி அவருடைய சித்தத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக உங்களுடைய பெயர்களைக் கொடுத்த என்னுடைய சபையின் மூப்பர்களே,

24 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களின் குடும்பங்களை ஆதரித்து உதவிசெய்வதும், அழைக்கப்பட்டு, உலகத்தாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பப்படவேண்டியவர்களின் குடும்பங்களை ஆதரிப்பதுவும் சபையின் கடமை.

25 ஆகவே, உங்களுடைய சகோதரர் தங்களின் இருதயங்களை திறக்க வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிற அளவில் உங்கள் குடும்பங்களுக்கு இடங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என கர்த்தராகிய நான் இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

26 அத்தகையவர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பங்களுக்காக இடங்களையும், அவர்களுக்காக சபையின் ஆதரவையும் பெறுவார்களாக, கிழக்கோ மேற்கோ, அல்லது வடக்கோ தெற்கோ, உலகத்திற்குள் போகாமலிருக்கவேண்டாம்.

27 அவர்கள் கேட்பார்களாக, அவர்கள் பெறுவார்கள், தட்டுவார்களாக அவர்களுக்காகத் திறக்கப்படும், அவர்கள் எங்கே போகவேண்டுமென உன்னதத்திலிருந்தும், தேற்றரவாளனிடமிருந்தும்கூட தெரியப்படுத்தப்படும்.

28 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவனுடைய சொந்த குடும்பத்திற்கு தேவையை அளிக்க பொறுப்பளிக்கப்பட்ட எல்லா மனுஷனும், தேவையை அளிப்பானாக, அவன் அவனுடைய கிரீடத்தை எந்த வகையிலும் இழந்துபோகமாட்டான்; அவன் சபையில் பிரயாசப்படுவானாக,

29 சகல காரியங்களிலும் ஒவ்வொரு மனுஷனும் கருத்தாய் இருப்பானாக. அவன் மனந்திரும்பி அவனது வழிகளை செம்மைப்படுத்துவதைத் தவிர சோம்பேறிக்கு சபையில் இடமில்லை.

30 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய சிமியோன் கார்ட்டரும், என்னுடைய ஊழியக்காரனாகிய எமர் ஹாரிஸூம்;

31 என்னுடைய ஊழியக்காரனாகிய எஸ்றா தாயரும், என்னுடைய ஊழியக்காரனாகிய தாமஸ் பி. மார்ஷூம்;

32 என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் ஸ்மித்தும், என்னுடைய ஊழியக்காரனாகிய ரெய்னால்ட்ஸ் ககூனும்;

33 என்னுடைய ஊழியக்காரனாகிய டேனியேல் ஸ்டான்டனும் என்னுடைய ஊழியக்காரனாகிய செய்மூர் ப்ரன்சனும்;

34 என்னுடைய ஊழியக்காரனாகிய சில்வெஸ்டர் ஸ்மித்தும் என்னுடைய ஊழியக்காரனாகிய கிதியோன் கார்ட்டரும்;

35 என்னுடைய ஊழியக்காரனாகிய ரக்லஸ் எமஸூம், என்னுடைய ஊழியக்காரனாகிய ஸ்டீபன் பர்னட்டும்;

36 என்னுடைய ஊழியக்காரனாகிய மீகா பி. வெல்டன்னும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஏடென் ஸ்மித்தும், ஊழியத்தில் இணைந்திருப்பார்களாக. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.