பாகம் 108
டிசம்பர் 26, 1835ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஒரு எழுபதின்மராக முன்பு நியமிக்கப்பட்ட, தம்முடைய கடமையை அறிந்துகொள்ள வெளிப்படுத்தலுக்கான ஒரு வேண்டுகோளுடன் தீர்க்கதரிசியிடம் வந்த லைமன் ஷெர்மனின் வேண்டுகோளினால் இந்த பாகம் பெறப்பட்டது.
1–3, லைமன் ஷெர்மன் அவனுடைய பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டான்; 4–5, சபையின் முன்னணித் தலைவர்களுடன் அவன் எண்ணப்படவேண்டும்; 6–8, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அவனுடைய சகோதரரை பலப்படுத்தவும் அவன் அழைக்கப்பட்டான்.
1 என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன், மெய்யாகவே கர்த்தர் உனக்குச் சொல்லுகிறார்: நான் நியமித்தவனுடைய ஆலோசனையைப் பெற இந்த காலையில் இங்கே வந்து என்னுடைய சத்தத்திற்கு நீ கீழ்ப்படிந்ததால் உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன.
2 ஆகவே, உன்னுடைய ஆவிக்குரிய காரியங்களின் நிலையைப் பொருத்தவரை உனது ஆத்துமா இளைப்பாறி, இனியும் என்னுடைய சத்தத்தை தடைசெய்யாதிருப்பானாக.
3 நீ எழுந்திருந்து, நீ செய்த, செய்கிற, உன்னுடைய பொருத்தனைகளை கைக்கொள்ளுவதில் இப்போதிலிருந்து அதிக கவனமாயிரு, அதிக ஆசீர்வாதங்களுடன் நீ மிக அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவாய்.
4 என்னுடைய ஊழியக்காரர்களால் பயபக்தியான கூட்டம் அழைக்கப்படும்வரை பொறுமையாய் காத்திரு, பின்னர் என்னுடைய மூப்பர்களில் முதன்மையானவர்களுடன் நீ நினைவுகூரப்படுவாய், நான் தெரிந்துகொண்ட மீதியான என்னுடைய மூப்பர்களுடன் நியமனத்தால் உரிமையைப் பெறுவாய்.
5 இதோ, நீ உண்மையுள்ளவனாய் தொடர்ந்திருந்தால் இது உனக்கு பிதாவின் வாக்குத்தத்தமாய் இருக்கிறது.
6 அந்த நேரத்திலிருந்து நான் உன்னை எங்கே அனுப்பினாலும் என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உனக்கு உரிமையிருக்கும்படியாக அந்த நாளில் உன்மீது அது நிறைவேற்றப்படும்.
7 ஆகவே, உன்னுடைய சகல உரையாடலிலும், உன்னுடைய சகல ஜெபங்களிலும், உன்னுடைய சகல புத்திமதிகளிலும், உன்னுடைய சகல செயல்களிலும் உன்னுடைய சகோதரரை பலப்படுத்து.
8 இதோ, உன்னை என்றென்றைக்குமாய் ஆசீர்வதிக்கவும் உன்னை விடுவிக்கவும் நான் உன்னோடிருக்கிறேன். ஆமென்.