வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 69


பாகம் 69

நவம்பர் 11, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். நவம்பரின் 1–2 விசேஷித்த மாநாட்டில், விரைவில் வெளியிட எண்ணப்பட்ட வெளிப்படுத்தல்கள் தொகுக்கப்பட, தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 3ல் இங்கு பாகம் 133 ஆக காணப்படுகிறவை, பின்னர் பிற்சேர்க்கை என அழைக்கப்பட்டவை சேர்க்கப்பட்டன. வெளிப்படுத்தல்கள் மற்றும் கட்டளைகளின் தொகுப்பின் கையெழுத்துப்பிரதிகளை அச்சடிக்க, மிசௌரியின் இன்டிபென்டன்ஸூக்கு எடுத்துப்போக முன்னர் ஆலிவர் கௌட்ரி நியமிக்கப்பட்டார். மிசௌரியில் சபை கட்டப்படுவதற்காக நன்கொடையளிக்கப்பட்ட பணத்தையும் அவர் தம்முடன் எடுத்துப்போகவேண்டும். ஆலிவர் கௌட்ரியுடன் ஜான் விட்மர் துணையாக செல்லவேண்டுமென இந்த வெளிப்படுத்தல் அறிவுறுத்தி சபை வரலாற்றாசிரியராக மற்றும் பதிவாளராக அவரது அழைப்பில் வரலாற்று காரியங்களை சேகரிக்க வேண்டுமென்றும் வழிகாட்டுகிறது.

1–2, மிசௌரிக்கு ஆலிவர் கௌட்ரியுடன் ஜான் விட்மர் போகவேண்டும்; 3–8, அவன் பிரசங்கிக்கவும், வரலாற்று விபரங்களை சேகரித்து, எழுதவும் பதிவுசெய்யவும் வேண்டும்.

1 என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரிக்காக நான் சொல்வதைக் கேளுங்கள் என உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். உண்மையும் விசுவாசமுமுள்ள ஒருவன் அவனோடு போனாலொழிய, சீயோன் தேசத்திற்கு அவன் எடுத்துப்போக கட்டளைகளின் பிரதிகளையும் பணத்தையும் அவனிடத்தில் ஒப்படைக்கப்படுவது என்னுடைய ஞானமில்லை.

2 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் விட்மர் என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரியுடன் போகவேண்டுமென கர்த்தராகிய நான் வாஞ்சிக்கிறேன்;

3 என்னுடைய சபையைக் குறித்து அவன் கவனித்த, அறிந்த முக்கியமான அனைத்துக் காரியங்களையும் அவன் தொடர்ந்து எழுதி ஒரு வரலாற்றை உருவாக்கவேண்டும்;

4 என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரியிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் ஆலோசனையையும் உதவியையும் அவன் பெற வேண்டும்.

5 பூமியின் மீதெங்குமுள்ள என்னுடைய ஊழியக்காரர்களும் சீயோன் தேசத்திற்கு தங்களுடைய உக்கிராணத்துவத்திலுள்ள கணக்குகளை அனுப்பவேண்டும்;

6 ஏனெனில் இந்த சகல காரியங்களைப் பெறவும், செய்யவும் சீயோன் தேசம் ஒரு இருக்கையாகவும், இடமாகவுமிருக்கும்.

7 ஆயினும், மிக எளிதாக அவன் அறிவைப் பெற, இடம்விட்டு இடமும், சபைவிட்டு சபைக்கும் அநேக முறைகள் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் விட்மர் பயணம் செய்வானாக.

8 சபையின் நன்மையாயிருக்கப் போகிற, சீயோன் தேசத்தில் எழும்புகிற தலைமுறைகளுக்காக, பிரசங்கித்து, வியாக்கியானம்செய்து, எழுதி, பிரதி எடுத்து, தெரிந்தெடுத்து, சகல காரியங்களையும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறை வரை என்றென்றைக்குமாய் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆமென்.