வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 57


பாகம் 57

ஜூலை 20, 1831ல் மிசௌரியிலுள்ள ஜாக்சன் மாகாணத்தின் சீயோனில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். உங்களுடைய சுதந்தர தேசத்தைக் குறித்து அவர் வெளிப்படுத்தப்போகிற மிசௌரிக்கு பயணம் செய்ய கர்த்தருடைய கட்டளைக்கு ஏற்ப (பாகம் 52) மூப்பர்கள் ஒஹாயோவிலிருந்து மிசௌரியின் மேற்கு எல்லைக்கு பயணம் செய்தார்கள். லாமானியர்களின் நிலைமையைப்பற்றி ஜோசப் ஸ்மித் சிந்தனை செய்து எப்போது வனாந்தரம் புஷ்பத்தைப்போல செழிக்கும்? அவளது மகிமையில் சீயோன் எப்போது கட்டப்படும், கடைசி நாட்களில் சகல தேசங்களும் வருகிற உமது ஆலயம் எங்கே நிற்கும்?” என வியப்புற்றார். தொடர்ந்து இந்த வெளிப்படுத்தலை அவர் பெற்றார்.

1–3, சீயோன் பட்டணத்திற்கும் ஆலயத்திற்கும் இன்டிபென்டன்ஸ், மிசௌரி இடமாயிருக்கிறது; 4–7, பரிசுத்தவான்கள் நிலங்களை வாங்கி அந்த இடத்தை சுதந்தரிக்கவேண்டும்; 8–16, சிட்னி கில்பர்ட் ஒரு பண்டசாலையை நிர்வகிக்கவேண்டும், வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸ் ஒரு அச்சடிப்பவராக இருக்கவேண்டும், வெளியீட்டிற்காக எழுத்துக்களை ஆலிவர் கௌட்ரி தொகுக்கவேண்டும்.

1 பரிசுத்தவான்களின் கூடிச்சேருதலுக்காக நான் நியமித்த பரிசுத்தம் செய்யப்பட்ட தேசமான, மிசௌரி தேசமான இந்த தேசத்தில் என்னுடைய கட்டளைகளின்படி உங்களுக்குள் கூடியிருக்கிற என்னுடைய சபையின் மூப்பர்களே கேளுங்கள் என உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

2 ஆகவே, இதுவே வாக்களிக்கப்பட்ட தேசமும் சீயோன் பட்டணத்தின் இடமுமாயிருக்கிறது.

3 உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படியாக சொல்லுகிறார், நீங்கள் ஞானத்தைப் பெறுகிறதாயிருந்தால் இதுவே ஞானம். இதோ, இன்டிபென்டன்ஸ் என இப்பொழுது அழைக்கப்படுகிற இடம் மையமான இடமாயிருக்கிறது, நீதிமன்றத்திலிருந்து அதிக தொலைவிலில்லாத மேற்கு பகுதியில் ஆலயத்திற்கான ஒரு இடம் அமைந்திருக்கிறது.

4 ஆகவே, பரிசுத்தவான்களால் இடம் வாங்கப்படவேண்டுமென்பது ஞானமாயிருக்கிறது, மேற்குப்பகுதியில் அமைந்திருக்கிற ஒவ்வொரு தடமும்கூட, யூதர்களுக்கும் புறஜாதியாருக்குமிடையில் நேரடியாகப் போய்க்கொண்டிருக்கிற கோடும்கூட;

5 அகன்ற புல்வெளிகளால் எல்லைகளாக்கப்பட்ட ஒவ்வொரு தடத்திலும்கூட எவ்வளவுக்கெவ்வளவாய் என்னுடைய சீஷர்கள் நிலங்களை வாங்க முடியுமோ வாங்குவார்களாக, இதோ, ஒரு என்றென்றைக்குமான சுதந்தரமாக அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ள இதுவே ஞானமாயிருக்கிறது.

6 எனது ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட், பணத்தைப் பெறுவதற்கும், சபைக்கு ஒரு பிரதிநிதியாக இருக்கவும், சுற்றிலுமுள்ள சகல பகுதிகளிலுமுள்ள நிலத்தை வாங்கவும், நீதியில் செயல்பட ஞானம் வழிகாட்டும் அளவில் நான் அவனுக்கு நியமித்த அலுவலில் நிற்பானாக.

7 எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ், நான் கட்டளையிட்டபடி பரிசுத்தவான்களுக்கும், அவனுக்கு உதவி செய்ய அவன் நியமித்தவர்களுக்கும், அவர்களின் சுதந்தரத்தைப் பிரித்துக் கொடுக்கவும் நான் அவனுக்கு நியமித்த அலுவலில் நிற்பானாக.

8 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட், இந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்தி, வஞ்சகமில்லாமல் பொருட்களை அவன் விற்கவும், பரிசுத்தவான்களின் நன்மைக்காக நிலங்களை அவன் வாங்கவும், தங்கள் சுதந்தரத்தில் அவர்களை நிலைநிறுத்த சீஷர்கள் விரும்புகிற எந்தக் காரியங்களையும் அவன் பெறவும், ஒரு பண்டசாலையை நிர்வகிப்பானாக.

9 எனது ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட், ஜனங்களுக்கும், அவனது சேவையில் எழுத்தர்களாக அவன் நியமிக்கப் போகிறவர்களுக்கும்கூட பொருட்களை அவன் அனுப்ப, ஒரு உத்தரவைப் பெறுவானாக, இதோ, இதிலே ஞானம் விளங்கும், படிக்கிறவன் புரிந்துகொள்வானாக;

10 இருளில் இருக்கிறவர்களுக்கும், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கும் என்னுடைய சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட, அப்படியாக எனது பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்படுவதாக.

11 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸ் இந்த இடத்தில் தங்கி, சபையில் ஒரு அச்சடிப்பவனாக ஏற்படுத்தப்படுவானாக.

12 இதோ, அவனது எழுத்துக்களை உலகம் ஏற்றுக்கொண்டால், பரிசுத்தவான்களின் நன்மைக்காக நீதியில் அவனால் முடிந்த எதையும் அவன் பெற்றுக்கொள்வான், இதோ, இதிலே ஞானம் விளங்கும்.

13 நான் கட்டளையிட்டபடி, நான் அவனை நியமிக்கிற எந்த இடத்திலும், அவன் மூலமாக ஆவியால் அது நிரூபிக்கப்பட சகல காரியங்களையும் எனக்கு முன்பாக சரியாயிருக்கும்படியாக பிரதி எடுக்கவும், சரி பார்க்கவும், தெரிந்தெடுக்கவும் எனது ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரி அவனுக்கு உதவுவானாக.

14 அப்படியாக, நான் பேசினவர்கள், நான் பேசின அந்தக்காரியங்களைச் செய்ய தங்கள் குடும்பங்களுடன் முடிந்தவரை சீக்கிரத்திலேயே சீயோன் தேசத்தில் நிலைநிறுத்தப்படுவார்களாக.

15 இப்பொழுது கூடிச் சேர்தலைக் குறித்தவரையில், முடிந்தவரை சீக்கிரத்திலேயே இந்த தேசத்திற்குள் வரவும் தங்கள் சுதந்தரத்தில் நிலைநிறுத்தப்படவும் கட்டளையிடப்பட்டுள்ள அந்த குடும்பங்களுக்கு ஆயரும் பிரதிநிதியும் ஆயத்தங்கள் செய்வார்களாக.

16 மீதியான மூப்பர்கள் அங்கத்தினர்கள் இருவருக்கும் கூடுதலான வழிகாட்டுதல்கள் இப்போதிலிருந்து கொடுக்கப்படும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.