பாகம் 55
ஜூன் 14, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸூக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஒரு அச்சடிப்பவரான வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸூம் அவரது குடும்பமும் அப்போதுதான் கர்த்லாந்திற்கு வந்தடைந்திருந்தார்கள், அவரைப்பற்றிய தகவலுக்காக தீர்க்கதரிசி கர்த்தரை நாடினார்.
1–3, வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸ் அழைக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெறவும், ஒரு மூப்பராக நியமிக்கப்படவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அழைக்கப்பட்டார்; 4, சபை பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகளுக்காக புஸ்தகங்களை அவர் எழுதவும் வேண்டும்; 5–6, அவர் பிரயாசப்படுவதற்கான பகுதியாயிருக்கப்போகிற மிசௌரிக்கு அவர் பயணப்படவேண்டும்.
1 இதோ, இப்படியாக கர்த்தர், ஆம், பூமி முழுவதினுடைய கர்த்தர், உனக்குச் சொல்லுகிறார். எனது ஊழியக்காரனாகிய வில்லியம், நீ அழைக்கப்பட்டிருக்கிறாய், மற்றும் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாய், தண்ணீரால் நீ ஞானஸ்நானம் பெற்ற பின்பு, எனது மகிமைக்கென்ற ஒரே நோக்கத்திற்காக இதை நீ செய்கிறதாயிருந்தால், உனது பாவங்களிலிருந்து விடுபட்டு, கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியைப் பெறுவாய்;
2 பின்னர், ஜீவிக்கிற தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஞானஸ்நானத்தின் வழியில் மனந்திரும்புதலையும் பாவங்களிலிருந்து விடுதலையையும் பிரசங்கிக்க எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனின் கைகளால் இந்த சபைக்கு ஒரு மூப்பராக நீ நியமிக்கப்படுவாய்.
3 யார் மீதெல்லாம் நீ உனது கைகளை வைக்கிறாயோ, எனக்கு முன்பாக அவர்கள் நருங்குண்டவர்களாயிருந்தால், அவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்க உனக்கு அதிகாரமிருக்கும்.
4 மீண்டும், அச்சடிக்கும் பணியைச் செய்யவும், எனக்கு முன்பாக எனக்கு பிரியமாயிருக்கிற சிறுபிள்ளைகளும் அறிவுரையைப் பெற்றுக்கொள்ளும்படியாக இந்த சபையின் பள்ளிக்கூடங்களுக்காக புஸ்தகங்களை தெரிந்தெடுப்பதிலும், எழுதுவதிலும் எனது ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரிக்கு உதவி செய்ய நீ நியமிக்கப்படுவாய்.
5 மீண்டும், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இந்த பணியைச் செய்ய உனது சுதந்தரத்தின் தேசத்திலே நீ காலூன்றியிருக்கும்படிக்கு, எனது ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் மற்றும் சிட்னி ரிக்டனுடன் இந்த காரணத்திற்காக நீ உனது பயணத்தை மேற்கொள்வாய்.
6 மீண்டும், எனது ஊழியக்காரனான ஜோசப் கோவும்கூட அவனது பயணத்தை அவர்களோடு மேற்கொள்வானாக. மீதியானவர்கள் எனது சித்தத்தின்படியே இப்போதிலிருந்து தெரியப்படுத்தப்படுவார்கள். ஆமென்.