வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115


பாகம் 115

அந்த இடத்தையும் கர்த்தரின் வீட்டையும் கட்டுவதற்கு, கர்த்தரின் சித்தத்தைத் தெரிவித்து, ஏப்ரல் 26, 1838ல் மிசௌரியின் பார் வெஸ்டில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தல் சபையின் தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

1–4, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அவருடைய சபைக்கு கர்த்தர் பெயரிடுகிறார்; 5–6, சீயோனும் அவளுடைய பிணையங்களும் பரிசுத்தவான்களுக்கு பாதுகாப்பின் அடைக்கல இடமாயிருக்கிறது; 7–16, பார் வெஸ்டில் கர்த்தருக்காக ஒரு வீட்டைக்கட்ட பரிசுத்தவான்கள் கட்டளையிடப்பட்டார்கள்; 17–19, பூமியில் தேவ ராஜ்யத்தின் திறவுகோல்களை ஜோசப் ஸ்மித் தரித்திருக்கிறார்.

1 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவர், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுக்கும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் ஸ்மித்துக்கும், உன்னுடைய தற்போதைய ஆலோசகர்களுக்கும் இதற்குப்பின் நியமிக்கப்படப்போகிறவர்களுக்கும்;

2 என்னுடைய ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜுக்கும், அவனுடைய ஆலோசகர்களுக்கும்;

3 சீயோனிலுள்ள என்னுடைய சபையின் பிரதான ஆலோசனைக் குழுவாக இருக்கிற என்னுடைய உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கும், உலகமுழுவதிலும் வெளியில் சிதறடிக்கப்பட்டிருக்கிற என்னுடைய பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மூப்பர்கள் யாவருக்கும் மெய்யாகவே கர்த்தர் இப்படியாக உங்களுக்குச் சொல்லுகிறார். ஏனெனில் இப்படியாக இது அழைக்கப்படும்.

4 ஏனெனில் கடைசி நாட்களில் என்னுடைய சபை இப்படியாக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அழைக்கப்படும்.

5 மெய்யாகவே உங்கள் யாவருக்கும் நான் சொல்லுகிறேன், உங்களுடைய வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்படியாக எழுந்து பிரகாசியுங்கள்;

6 பூமி முழுவதிலும் அது கலப்பில்லாமல் ஊற்றப்படும்போது பாதுகாப்பிற்காக, புயலிலிருந்தும், கோபாக்கினையிலிருந்தும் அடைக்கலத்திற்காக சீயோன் தேசத்தின் மேலும், அவளுடைய பிணையங்கள் மேலும் கூடுகை இருக்கும்படியாகவே.

7 பார் வெஸ்ட் பட்டணம் எனக்கு ஒரு பரிசுத்தமானதும் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான பட்டணமாக இருப்பதாக; அது மிகுந்த பரிசுத்தமாக அழைக்கப்படுவதாக, ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற பூமி பரிசுத்தமானது.

8 ஆகவே, என்னுடைய பரிசுத்தவான்கள் என்னைத் தொழுது கொள்ளும்படியாக அவர்களின் கூடிச் சேர்தலுக்காக எனக்கு ஒரு வீட்டைக் கட்ட உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன்.

9 இந்த பின்வரும் கோடையில் இந்த பணிக்கும், ஒரு அஸ்திபாரத்திற்கும், ஒரு ஆயத்தப்பணிக்கும் ஆரம்பம் இருப்பதாக;

10 அடுத்த ஜூலை நான்காவது நாளில் ஆரம்பம் செய்யப்படுவதாக; அந்த நேரத்திலிருந்து என்னுடைய நாமத்தில் ஒரு ஜெபவீட்டைக்கட்ட என்னுடைய ஜனங்கள் கருத்தாய் பிரயாசப்படுவார்களாக;

11 இந்த நாளிலிருந்து ஒரு வருஷத்தில் என்னுடைய வீட்டின் அஸ்திபாரத்தைப்போட அவர்கள் மீண்டும் ஆரம்பிப்பார்களாக.

12 இப்படியாக அந்த நேரத்திலிருந்து அதனுடைய மூலைக்கல்லிலிருந்து மேற்புறம்வரை நிறைவுசெய்யப்படாத எதுவுமே மீதியாயில்லாதிருக்கும்வரை அவர்கள் கருத்தாய் பிரயாசப்படுவார்களாக.

13 என்னுடைய நாமத்தில் ஒரு வீட்டைக்கட்டுவதற்காக என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்போ, என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னியோ, என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரமோ இனியும் கடன் வாங்காதிருப்பார்களாக என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;

14 ஆனால் அவர்களுக்கு நான் காட்டப்போகிற மாதிரியின்படி என்னுடைய நாமத்தில் ஒரு ஜெபவீடு கட்டப்படுவதாக.

15 அவர்களுடைய தலைமைக்கு நான் காட்டுகிற மாதிரியின்படி என்னுடைய ஜனங்கள் அதைக் கட்டவில்லையென்றால் அவர்களின் கைகளில் நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

16 ஆனால் அவர்களுடைய தலைமைக்கு, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கும் அவனுடைய ஆலோசகர்களுக்கும் நான் காட்டுகிற மாதிரியின்படி என்னுடைய ஜனங்கள் அதைக் கட்டுகிறார்களென்றால் பின்னர் என் ஜனங்களின் கைகளில் நான் அதை ஏற்றுக்கொள்ளுவேன்.

17 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய பரிசுத்தவான்களின் கூடுகையால் பார் வெஸ்ட் பட்டணம் சீக்கிரத்திலேயே கட்டப்படவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது;

18 அவ்வப்போது என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு அவைகள் வெளிப்படுத்தப்படவிருப்பதைப்போல சுற்றிலுமுள்ள பகுதிகளில் பிணையங்களுக்காக பிற இடங்களும் நியமிக்கப்படவேண்டும்.

19 ஏனெனில் இதோ, நான் அவனோடேயிருப்பேன், ஜனங்களுக்கு முன்பாக நான் அவனை பரிசுத்தப்படுத்துவேன்; ஏனெனில் இந்த ராஜ்யத்தின் ஊழியத்தின் திறவுகோல்களை நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.