பாகம் 95
ஜூன் 1, 1833ல் ஒஹாயோவின், கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஆராதனைக்காகவும் அறிவுரைக்காகவும் ஒரு ஜெப வீடு கர்த்தரின் ஆலயம் கட்டப்பட தெய்வீக வழிகாட்டுதல்களின் ஒரு தொடர்ச்சியே இந்த வெளிப்படுத்தல் (பாகம் 88:119–136 பார்க்கவும்).
1–6, கர்த்தரின் வீட்டைக் கட்டத் தவறியதற்காக பரிசுத்தவான்கள் கண்டிக்கப்படுகிறார்கள்; 7–10, உன்னதத்திலிருந்து வல்லமையைக் கொண்டு அவருடைய ஜனங்களை முத்திரிக்க அவருடைய ஆலயத்தைப் பயன்படுத்த கர்த்தர் விரும்புகிறார்; 11–17, ஆராதனையின் இடமாகவும் அப்போஸ்தலர்களின் குழுவுக்காகவும் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும்.
1 நான் பிரியமாயிருக்கிற உங்களுக்கு கர்த்தர் மெய்யாகவே இப்படியாகச் சொல்லுகிறார், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட நான் பிரியமாயிருக்கிற அவர்களை நான் கண்டிக்கிறேன், ஏனெனில் கண்டிப்புடன் சோதனைகளின் சகல காரியங்களிலும் அவர்களின் விடுதலைக்காக நான் ஒரு வழியை ஆயத்தம் செய்கிறேன், நான் உங்கள்மேல் பிரியமாயிருந்திருக்கிறேன்,
2 ஆகவே, நீங்கள் கண்டிக்கப்படவேண்டியது அவசியமாயிருக்கிறது, கடிந்துகொள்ளப்பட்டவர்களாக என்னுடைய முன்பாக நிற்கவேண்டும்;
3 ஏனெனில் மிகவும் கொடியதான ஒரு பாவத்தை எனக்கெதிராக நீங்கள் செய்தீர்கள், அதில் சகல காரியங்களிலும் என்னுடைய ஆலயத்தைக் கட்டுவதைக் குறித்து நான் உங்களுக்குக் கொடுத்த பெரிதான கட்டளையை நீங்கள் எண்ணாதிருந்தீர்கள்;
4 என்னுடைய அபூர்வமான கிரியையை நான் நிறைவேற்றும்படியாகவும், சகல மாம்சத்தின் மேலும் என்னுடைய ஆவியை நான் ஊற்றும்படியாகவும், கடைசி முறையாக என்னுடைய திராட்சை தோட்டத்தை கிளை நறுக்கும்படியாக என்னுடைய அப்போஸ்தலர்களை ஆயத்தப்படுத்த நான் திட்டமிட்டேன்,
5 ஆனால் இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் அழைத்த அநேகர் உங்களுக்கு மத்தியிலே நியமனம் செய்யப்பட்டார்கள், ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலரே.
6 தெரிந்து கொள்ளப்படாதவர்கள் மிகப்பெரிய ஒரு கொடிய பாவத்தைச் செய்தார்கள், அதனால் மத்தியான வேளையில் அவர்கள் அந்தகாரத்தில் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
7 இந்தக் காரணத்திற்காக, உங்களுடைய உபவாசங்களும், உங்களுடைய துக்கமும், ஆதியும் அந்தமுமான முதல் நாளின் சிருஷ்டிகர் என்ற அர்த்தத்தில் உள்ள ஓய்வு நாளின் கர்த்தரின் செவிகளில் வந்து ஏறத்தக்கதாக நீங்கள் பயபக்தியான கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தேன்.
8 ஆம், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உன்னதத்திலிருந்து வரும் வல்லமையுடன் நான் தெரிந்து கொண்டவர்களை தரிப்பிக்க நான் திட்டமிட்ட ஆலயத்தை நீங்கள் கட்டவேண்டும் என்று நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தேன்;
9 ஏனெனில் இது உங்களுக்காக பிதாவின் வாக்குத்தத்தமாய் இருக்கிறது; ஆகவே எருசலேமிலிருந்த என்னுடைய அப்போஸ்தலர்களைப்போல நீங்களும் தங்கும்படியாக நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்.
10 ஆயினும், என்னுடைய ஊழியக்காரர்கள் மிகக் கொடியதான ஒரு பாவத்தைச் செய்தார்கள்; தீர்க்கதரிசிகளின் குழுவில் வாக்குவாதங்கள் எழுந்தன; அது எனக்கு மிகக் கொடியதாயிருந்ததென உங்களுடைய கர்த்தர் சொல்லுகிறார்; ஆகவே கண்டிக்கப்பட அவர்களை நான் அனுப்பினேன்.
11 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது. என்னுடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொண்டால் அதைக் கட்ட உங்களுக்கு வல்லமையிருக்கும்.
12 என்னுடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளாவிட்டால் பிதாவின் அன்பு உங்களோடு தொடர்ந்திருக்காது, ஆகவே நீங்கள் இருளில் நடப்பீர்கள்.
13 இதிலே ஞானமும் கர்த்தரின் சிந்தையும் விளங்கும், ஆலயம் கட்டப்படுவதாக, உலகத்தாரின் விதமாயல்ல, ஏனெனில் உலகத்தாரின் விதமாக நீங்கள் வாழவேண்டுமென நான் உங்களுக்குக் கொடுக்கவில்லை;
14 ஆகவே, இந்த அதிகாரத்திற்கு நீங்கள் நியமிக்கிற, உங்கள் மூவருக்கு நான் காட்டுகிற விதமாய் அது கட்டப்படுவதாக.
15 ஐம்பத்தைந்து அடி அகலத்திலும் அறுபத்தைந்து அடி நீளத்திலும் உட்பிரகாரத்தின் அளவிருக்கவேண்டும்.
16 உங்களுடைய திருவிருந்துக்கும், உங்களுடைய போதனைக்கும், உங்களுடைய உபவாசத்திற்கும், உங்களுடைய ஜெபத்திற்கும், உங்களுடைய மிகுந்த பரிசுத்த விருப்பங்களை என்னிடம் செலுத்தவும், உட்பிரகாரத்தின் கீழ்ப்பாகம் எனக்கு பிரதிஷ்டை செய்யப்படுவதாக என உங்களுடைய கர்த்தர் சொல்லுகிறார்.
17 என்னுடைய அப்போஸ்தலர்களின் குழுவுக்காக உட்பிரகாரத்தின் மேல்பாகம் எனக்கு பிரதிஷ்டை செய்யப்படுவதாக என குமாரன் ஆமானும்; அல்லது வேறு வார்த்தைகளில் எனில் அல்பஸ்; அல்லது வேறு வார்த்தைகளிலெனில் ஓமெகா என்ற உங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆமென்.