வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109


பாகம் 109

மார்ச் 27, 1836ல் ஒஹாயோவின் கர்த்லாந்திலுள்ள ஆலயத்தின் பிரதிஷ்டையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம். தீர்க்கதரிசியின் எழுதப்பட்ட வாசகத்தின்படி, வெளிப்படுத்தலால் இந்த ஜெபம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

1–5, மனுஷ குமாரன் வருவதற்கான இடமாக கர்த்லாந்து ஆலயம் கட்டப்பட்டது; 6–21, இது ஜெபம், உபவாசம், விசுவாசம், கற்றுக்கொள்ளுதல், மகிமை, ஒழுங்கு மற்றும் தேவனின் வீடாக இருக்க வேண்டும்; 22–33, கர்த்தருடைய ஜனங்களை எதிர்க்கிற மனந்திரும்பாதவர்கள் தாறுமாறாக்கப்படுவார்களாக; 34–42, சீயோனில் நீதிமான்களை ஒன்றுசேர்க்க வல்லமையுடன் பரிசுத்தவான்கள் போவார்களாக; 43–53, கடைசி நாட்களில் துன்மார்க்கர்மீது பொழியப்படப்போகிற பயங்கரமான காரியங்களிலிருந்து பரிசுத்தவான்கள் விடுவிக்கப்படுவார்களாக; 54–58, தேசங்களும், ஜனங்களும், சபைகளும் சுவிசேஷத்திற்கு ஆயத்தப்படுத்தப்படுவதாக; 59–67, யூதர்களும், லாமானியர்களும், சகல இஸ்ரவேலரும் மீட்கப்படுவார்களாக; 68–80, பரிசுத்தவான்கள் மகிமையோடும் கனத்தோடும் கிரீடம் சூட்டப்பட்டு நித்திய இரட்சிப்பை அடைவார்களாக.

1 தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நிமிர்ந்து நடக்கிற உம்முடைய ஊழியக்காரர்களிடத்தில் உடன்படிக்கையை காத்துக் கொள்ளுகிறவரும், இரக்கம் காட்டுகிறவருமான இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உமது நாமத்திற்கு நன்றிகள் செலுத்தப்படுவதாக.

2 இந்த இடத்தில் [கர்த்லாந்து] உமது நாமத்தில் ஒரு ஆலயத்தைக் கட்ட உமது பணியாட்களுக்கு கட்டளையிட்டிருக்கிறீர்.

3 உம்முடைய கட்டளையின்படி உம்முடைய பணியாட்கள் செய்தார்கள் என்பதை, கர்த்தாவே இப்பொழுது நீர் காண்கிறீர்.

4 மனுபுத்திரர்களுக்கு அவருடைய நாமத்தினால் மட்டுமே இரட்சிப்பு நிர்வகிக்கப்பட முடிகிற உமது மனம் நிறைந்த குமாரனான, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பரிசுத்த பிதாவே, இப்பொழுது நாங்கள் உம்மைக் கேட்கிறோம். கர்த்தாவே உம்முடைய பணியாட்களாகிய எங்களுடைய கைவேலைப்பாடால் அமைக்கப்பட்டு கட்டப்பட எங்களுக்குக் கட்டளையிட்ட இந்த ஆலயத்தை ஏற்றுக் கொள்ளும்படியாக, நாங்கள் உம்மைக் கேட்கிறோம்,

5 ஏனெனில், மிகுந்த உபத்திரவத்திற்கு மத்தியிலே இந்த வேலையை நாங்கள் செய்தோம்; அவருடைய ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்த மனுஷகுமாரனுக்கு ஒரு இடம் அமைந்திருக்க உம்முடைய நாமத்தில் ஒரு ஆலயத்தைக் கட்ட எங்களுடைய வறுமையில் எங்களுடைய பொருட்களை நாங்கள் கொடுத்தோம் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.

6 உம்முடைய சிநேகிதராக எங்களை அழைத்து, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்படுத்தலில் நீர், நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைப்போல உங்களுடைய பயபக்தியான கூட்டத்தைக் கூட்டுங்கள், என்று சொன்னதைப்போல,

7 யாவருக்கும் விசுவாசமில்லாதபடியால், கருத்தாய் நீங்கள் நாடி ஒருவருக்கொருவர் ஞானவார்த்தையைப் போதியுங்கள்; ஆம், சிறந்த புஸ்தகங்களில் ஞானமான வார்த்தைகளை நாடுங்கள், படிப்பு மற்றும் விசுவாசத்தால் கற்றுக்கொள்வதை நாடுங்கள்;

8 உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்; அவசியமான ஒவ்வொரு காரியத்தையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், ஜெபத்தின் வீட்டை, உபவாசத்தின் வீட்டை, விசுவாசத்தின் வீட்டை, கற்றுக்கொள்ளுதலின் வீட்டை, மகிமையின் வீட்டை, ஒழுங்கின் வீட்டை, தேவனின் வீட்டை கட்டுங்கள்;

9 உங்களின் உட்பிரவேசங்கள் கர்த்தரின் நாமத்திலிருக்கும்படியாக; நீங்கள் வெளியே செல்வதும் கர்த்தரின் நாமத்திலிருக்கும்படியாக; உன்னதமானவருக்கு உயர்த்தப்பட்ட கைகளுடன் உங்களின் வந்தனங்கள் கர்த்தரின் நாமத்திலிருக்கும்படியாக எனச் சொன்னதால்;

10 இப்பொழுது, பரிசுத்த பிதாவே, உம்மை கனம் பண்ணவும், உமது தெய்வீக ஏற்றுக்கொள்ளுதலிலும் அது செய்யப்படத்தக்கதாக, எங்களுடைய பயபக்தியான கூட்டங்களை கூட்ட உம்முடைய கிருபையுடன் உம்முடைய ஜனங்களாகிய எங்களுக்கு உதவும்படியாக உம்மைக் கேட்கிறோம்;

11 உமது ஜனங்களாகிய எங்களுக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்களில் நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றுதலை அடைய உமது பார்வையில் நாங்கள் தகுதியுள்ளவர்களாக காணப்படும்படியான ஒரு விதத்தில்;

12 பரிசுத்தமாயிருக்க பிரதிஷ்டை செய்யப்படும்படியாக, உமது பிரசன்னம் இந்த ஆலயத்தில் தொடர்ந்திருக்கும்படியாக, இப்பொழுது உமக்கு நாங்கள் பிரதிஷ்டை செய்கிற இந்த உமது ஆலயம் புனிதமாயிருக்க, அது பிரதிஷ்டை பண்ணப்படும்படியாக உமது ஜனங்களின் மீதும், உமது மகிமை இறங்கும்படியாக;

13 கர்த்தரின் வீட்டின் வாசற்படியில் பிரவேசிக்கிற சகல ஜனங்களும் உமது வல்லமையை உணரத்தக்கதாக, அதை நீர் பரிசுத்தப்படுத்தியிருக்கிறீர் என்பதை ஏற்றுக்கொள்ள, அது உமது வீடாகவும், பரிசுத்தத்தின் ஸ்தலமெனவும் கட்டாயமாக உணரத்தக்கதாக உதவி செய்யும்.

14 இந்த ஆலயத்தில் ஆராதிக்கிற சகலமானோரும் சிறந்த புஸ்தகங்களிலிருந்து ஞானமான வார்த்தைகளை கற்றுக்கொள்ளும்படியாகவும், நீர் சொன்னதைப்போல படிப்பினாலும், விசுவாசத்தினாலும் அவர்கள் கற்றுக்கொள்ள நாடும்படியாகவும்;

15 உம்மில் அவர்கள் வளரவும், பரிசுத்த ஆவியின் பரிபூரணத்தை பெற்றுக் கொள்ளும்படியாகவும், உமது நியாயப்பிரமாணங்களின்படி ஒழுங்குபடுத்திக் கொள்ளவும், அவசியமான காரியங்கள் ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கும்படியாகவும்;

16 இந்த வீடு ஜெபத்தின் வீடாகவும், உபவாசத்தின் வீடாயிருக்கவும், விசுவாசத்தின் வீடாயிருக்கவும், மகிமையின் தேவனின் வீடாயிருக்கவும், உமது வீடாயிருக்கவும்;

17 இந்த வீட்டிற்குள் உமது ஜனங்களின் உட்பிரவேசம் யாவும் கர்த்தரின் நாமத்தில் இருக்கவும்;

18 இந்த ஆலயத்திலிருந்து அவர்களின் வெளியேற்றம் யாவுமே கர்த்தரின் நாமத்தில் இருக்கவும்;

19 உன்னதமானவரை நோக்கி உயர்த்தப்பட்ட பரிசுத்தமான கைகளுடன் அவர்களின் வந்தனங்கள் யாவும் கர்த்தரின் நாமத்திலிருக்கும்படியாக;

20 அதை தீட்டுப்படுத்த உமது ஆலயத்திற்குள் எந்த அசுசியான காரியமும் வர அனுமதிக்கப்படாமலிருக்க;

21 உமது ஜனங்களாகிய அவர்களில் யாராவது மீறுதல் செய்யும்போது, சீக்கிரத்திலே அவர்கள் மனந்திரும்பி உம்மிடம் திரும்பி வரவும், உமது பார்வையில் தயை காணவும், உமது வீட்டில் உம்மிடம் பயபக்தியாயிருக்கிறவர்கள் மீது பொழியப்பண்ண நீர் நியமனம் செய்த ஆசீர்வாதங்களை திரும்பப் பெறவும் பரிசுத்த பிதாவே நீர் அருளுவீராக.

22 உமது வல்லமையால் ஆயுதந்தரித்தவர்களாக, இந்த ஆலயத்திலிருந்து உமது ஊழியக்காரர்கள் போகும்படியாகவும், உமது நாமம் அவர்கள் மீது இருக்கும்படியாகவும், உமது மகிமை அவர்களைச் சுற்றியிருக்கும் படியாகவும், உம்முடைய தூதர்கள் அவர்கள்மீது பொறுப்பேற்றுக் கொள்ளவும், பரிசுத்த பிதாவே நாங்கள் உம்மைக் கேட்கிறோம்;

23 இது உம்முடைய கிரியையென அவர்கள் அறிந்து கொள்ளும்படியாகவும், கடைசி நாட்களைக் குறித்து தீர்க்கதரிசிகளின் வாய்களால் நீர் பேசியவற்றை நிறைவேற்ற உமது கைகளை நீர் போடும்படியாக, இந்த இடத்திலிருந்து பூமியின் கடையாந்தரம் மட்டும் அவர்கள் மிகவும் அதிகமானதும் மகிமையானதுமான செய்திகளை சத்தியத்தில் சாட்சி பகருவார்களாக.

24 தொழுதுகொள்கிற ஜனங்களை காத்துக்கொள்ளவும், தலைமுறைகளாகவும் நித்தியத்திற்கும் இந்த உமது ஆலயத்தில், கனமுடன் ஒரு நாமத்தைத் தரித்திருக்கவும், மரியாதை பெற்றிருக்கவும் பரிசுத்த பிதாவே நாங்கள் உம்மைக் கேட்கிறோம்;

25 அவர்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்படியாகவும்; அவர்களுக்கு படுகுழியை வெட்டுகிறவனே அதிலே விழும்படியாகவும்;

26 இந்த வீட்டில் உமது நாமம் தரித்திருக்கிற, உமது ஜனங்களின் மீது துன்மார்க்கத்தின் எந்த கூட்டமைப்புக்கும் எழும்பி மேற்கொள்ள வல்லமையில்லாதிருக்கும்படிக்கும்;

27 இந்த ஜனங்களுக்கு விரோதமாக எந்த ஜனமாவது எழுந்தால் அவர்களுக்கு விரோதமாக உமது கோபம் மூளும்படிக்கும்;

28 இந்த ஜனங்களை அவர்கள் அடித்தால் அவர்களை நீர் அடிப்பீராக; அவர்களின் சத்துருக்கள் யாவரின் கைகளிலிருந்தும் அவர்கள் விடுதலையடையும்படியாக யுத்தத்தின் நாளில் நீர் செய்ததைப்போல உமது ஜனங்களுக்காக நீர் யுத்தம் பண்ணுவீராக.

29 உலகம் முழுவதிலும் உமது ஊழியக்காரன் அல்லது ஊழியக்காரர்களுக்கு விரோதமாக பொய்யான அறிக்கைகளைப் பரப்புவர்கள் யாவரும், நித்தியமான சுவிசேஷம் அவர்களின் காதுகளில் அறிவிக்கப்படும்போது, அவர்கள் மனந்திரும்பாதிருந்தால் அவர்களை தாறுமாறாக்க, அதிர்ச்சியூட்ட, அவமானத்தையும் குழப்பத்தையும் கொண்டுவர, பரிசுத்த பிதாவே நாங்கள் உம்மைக் கேட்கிறோம்;

30 உமது ஜனங்களுக்கு விரோதமாக பொய்கள் சொல்லுகிறதற்கும் அவதூறு பரப்புவதற்கும் ஒரு முடிவு உண்டாயிருக்கும்படியாக, உமது கோபத்தில் நீர் அவர்கள் மீது அனுப்பும் நியாயத்தீர்ப்புகளால் அவர்களின் கிரியைகள் யாவும் அதமாக்கப்பட்டு, புயலால் வாரிக்கொள்ளப்படுவதாக.

31 உமது நாமத்தை சாட்சி பகருவதில் உம்முடைய ஊழியக்காரர்கள் உமக்கு முன்பாக மாசற்றவர்களாக இருந்தார்களென்பதை கர்த்தாவே நீர் அறிவீர், ஏனெனில் இந்தக் காரியங்களுக்காக அவர்கள் துன்பம் அனுபவித்தார்கள்.

32 ஆகவே, இந்த நுகத்தின் கீழிருந்து ஒரு நிறைவான முற்றிலுமான விடுதலைக்காக உமக்கு முன்பாக நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறோம்;

33 இந்த தலைமுறைக்கு மத்தியிலே நாங்கள் எழுந்திருந்து உமது கிரியையைச் செய்யத்தக்கதாக உமது வல்லமையால், கர்த்தாவே முறித்துப் போடுவீராக, உமது ஊழியக்காரர்களின் கழுத்துக்களிலிருந்து அதை முறித்துப் போடுவீராக.

34 யேகோவா, இந்த ஜனங்கள்மீது இரக்கமாயிரும், சகல மனுஷர்களும் பாவஞ்செய்வதால், உமது ஜனங்களின் மீறுதல்களை மன்னியும், அவை என்றென்றைக்குமாய் அவர்கள் மீதிருந்து துடைக்கப்படுவதாக.

35 உன்னதத்திலிருந்து வரும் வல்லமையுடன் உம்முடைய ஊழியக்காரர்களின் அபிஷேகம் அவர்கள் மீது முத்திரிக்கப்படுவதாக.

36 பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேற்றப்பட்டதைப்போல அவர்கள் மீது அருளப்படுவதாக; பிரிந்திருக்கும் அக்கினி நாவுகள்போல, பாஷைகளின் மற்றும் வியாக்கியானம் செய்யும் வரங்களும், உம்முடைய ஜனங்களின் மீது பொழியப்படுவதாக.

37 உமது மகிமையுடன் பலத்த காற்று அடிக்கிறதைப்போல உமது ஆலயம் நிரப்பப்படுவதாக.

38 அவர்கள் வெளியே போய் உமது வார்த்தையை அறிவிக்கும்போது நியாயப்பிரமாணத்தை அவர்கள் முத்திரிக்கவும், அவர்களுடைய மீறுதல்களினால், நெருக்கத்தின் நாளில், உம்முடைய ஜனங்கள் களைப்படையாதிருக்கும்படி, உம்முடைய கோபத்திலே பூமியின் குடிகள் மீது, நீர் அனுப்பப்போகிற, அந்த சகல நியாயத்தீர்ப்புகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் இருதயங்களை ஆயத்தம் செய்யவும், உடன்படிக்கையின் சாட்சியை உமது ஊழியக்காரர்கள்மீது வைப்பீராக.

39 உமது ஊழியக்காரர்கள் எந்த பட்டணத்தில் பிரவேசித்தாலும் அந்த பட்டணத்திலுள்ள ஜனங்கள் அவர்களுடைய சாட்சியைப் பெறும்படியாகவும்; அந்த பட்டணத்திலுள்ள நீதிமான்கள் ஒன்றுகூடி வரும்படியாகவும், நித்திய சந்தோஷத்தின் பாடல்களுடன், நீர் நியமித்த இடங்களான சீயோனுக்கு, அல்லது அவளுடைய பிணையங்களுக்கு அவர்கள் வரும்படியாகவும், உமது சமாதானமும் இரட்சிப்பும் அந்த பட்டணத்தின் மீதிருப்பதாக.

40 இது நிறைவேற்றப்படும்வரை உமது நியாயத்தீர்ப்புகள் அந்த பட்டணத்தின்மீது விழாதிருப்பதாக.

41 உமது ஊழியக்காரர்கள் எந்த பட்டணத்தில் பிரவேசித்தாலும் அந்த பட்டணத்திலுள்ள ஜனங்கள் தங்களுடைய சாட்சியைப் பெறாவிட்டால், மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என உமது ஊழியக்காரர்கள் எச்சரித்தால், உமது தீர்க்கதரிசிகளின் வாய்களால் நீர் பேசியதன்படி, அந்த பட்டணத்தின்மீது வருவதாக.

42 ஆனால் யேகோவா, அவர்களின் கைகளிலிருந்து உமது ஊழியக்காரர்களை நீர் விடுவியும், அவர்களுடைய பாவத்திலிருந்து அவர்களை சுத்தப்படுத்தும் என நாங்கள் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம்.

43 கர்த்தாவே, எங்களுடைய சக மனுஷர்களின் அழிவில் நாங்கள் களிகூரவில்லை; அவர்களுடைய ஆத்துமா உமக்கு முன்பாக விலையேறப்பெற்றதாக இருக்கிறது;

44 ஆனால் உமது வார்த்தை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கு உமது கிருபையின் உதவியுடன் இப்படியாகச் சொல்ல உமது ஊழியக்காரர்களுக்கு உதவும்: கர்த்தாவே, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது, எங்களுடைய சித்தத்தின்படியல்ல.

45 துன்மார்க்கரைக் குறித்த பயங்கரமான காரியங்களை உமது தீர்க்கதரிசிகளின் வாயால் நீர் பேசியிருக்கிறதை நாங்கள் அறிவோம்; மற்றும் கடைசி நாட்களில் அளவில்லாமல் உமது நியாயத்தீர்ப்புகளை நீர் பொழியப்பண்ணுவீர்.

46 ஆகவே, கர்த்தாவே துன்மார்க்கரின் ஆபத்திலிருந்து உமது ஜனங்களை விடுவியும்; சுட்டெரித்தலின் நாளுக்கு எதிராக அவர்கள் ஆயத்தமாயிருக்கும்படியாக உமது ஊழியக்காரர்கள் நியாயப்பிரமாணத்தை முத்திரிக்கவும் சாட்சியைக் கட்டவும் சாத்தியமாக்கும்.

47 தங்களுடைய சுதந்தரமான தேசங்களிலிருந்து மிசௌரியின் ஜாக்சன் மாகாணத்தின் குடிகளால் விரட்டப்பட்டவர்களை நினைவு கூரும்படியாகவும், கர்த்தாவே அவர்கள்மீது போடப்பட்ட உபத்திரவத்தின் இந்த நுகத்தை முறித்துப் போடும்படியாகவும் பரிசுத்த பிதாவே நாங்கள் உம்மைக் கேட்கிறோம்.

48 அவர்கள் அதிகமாய் தாழ்த்தப்பட்டு துன்மார்க்க மனுஷர்களால் துன்புறுத்தப்பட்டார்களென்பதை கர்த்தாவே நீர் அறிவீர்; அவர்களின் துன்பத்தின் சுமைகளால் எங்களுடைய இருதயங்கள் துக்கத்தால் நிரம்பி வழிகிறது.

49 கர்த்தாவே இந்த ஜனங்கள் இந்த உபத்திரவத்தைத் தாங்கிக்கொள்ள எதுவரைக்கும் நீர் பொறுமையாயிருப்பீர், அவர்களின் மாசற்றவர்களின் கூக்குரல்கள் உமது காதுகளை எட்டுகிறதே, அவர்களின் இரத்தம் சாட்சியாக உமக்கு முன்பாக வருகிறது, அவர்களின் சார்பாக உமது சாட்சியை காட்சிப் பொருளாக்காதிருப்பீராக.

50 அழிப்பதை அவர்கள் நிறுத்தும் படியாகவும், மனந்திரும்புதல் காணப்படுவதாயிருந்தால் அவர்களின் பாவங்களுக்காக அவர்கள் மனந்திரும்பும்படியாகவும் கர்த்தாவே உமது ஜனங்களை விரட்டியடித்த துன்மார்க்க கும்பல்மீது இரக்கமாயிரும்;

51 ஆனால் அவர்கள் மனந்திரும்பாவிட்டால், கர்த்தாவே உமது புயத்தை வெளிப்படுத்தும், உமது ஜனங்களுக்கு நீர் நியமித்த சீயோனை மீட்டுக்கொள்ளும்.

52 அப்படியில்லையானால், உமது ஜனங்களின் சித்தம் உமக்கு முன்பாக தோல்வியடையாமல் உமது கோபம் மூட்டப்பட்டு, வானத்தின் கீழிருந்து வேர், கிளை இரண்டும் அழிக்கப்படும்படியாக, உமது ஆக்கினை அவர்கள்மீது விழுவதாக;

53 ஆனால் அவர்கள் மனந்திரும்புகிற அளவில், கிருபையும் இரக்கமும் உள்ளவரான நீர், உமது அபிஷேகிக்கப்பட்டவரின் முகத்தை நீர் நோக்கிப்பார்க்கும்போது உமது கோபத்தை விட்டுவிடுவீராக.

54 கர்த்தாவே, பூமியின் சகல தேசங்கள் மீதும் இரக்கமாயிரும்; எங்களுடைய தேசத்தை ஆளுபவர்கள் மீது இரக்கமாயிரும்; மிகவும் மரியாதையாகவும் மகத்துவத்துடனும் பாதுகாக்கப்பட்ட, எங்கள் பிதாக்களால் உருவாக்கப்பட்ட எங்களுடைய தேசத்தின் அரசியலமைப்பு கொள்கைகள் என்றென்றைக்குமாய் காக்கப்படுவதாக.

55 ராஜாக்களையும், பிரபுக்களையும், அதிபதிகளையும், பூமியின் அதிகாரிகளையும், சகல ஜனங்களையும், சபைகளையும், சகல தரித்திரர்களையும், பூமியிலுள்ள வறியோரையும், உபத்திரவப்படுவோரையும்;

56 யேகோவா, உமது ஆலயத்திலிருந்து உமது ஊழியக்காரர்கள் வெளியே போகும்போது அவர்களின் இருதயங்கள் மிருதுவாகவும், உமது நாமத்தில் சாட்சி கொடுக்கும்படியாகவும், சத்தியத்திற்கு முன்பாக அவர்களின் தவறான கருத்து விலகிவிடவும், யாவரின் பார்வையிலும் உமது ஜனங்களுக்கு தயை கிடைக்கும்படியாகவும்;

57 உமது ஊழியக்காரர்களாகிய நாங்கள், உமது சத்தத்தைக் கேட்டோம் என்றும், நீரே எங்களை அனுப்பினீர் என்றும் பூமியின் சகல கடையாந்தரங்களும் அறிந்துகொள்ளும்படியாகவும்;

58 இவர்களுக்கு மத்தியிலிருந்து, அவர்களுக்கு நீர் கட்டளையிட்டதைப்போல உமது நாமத்தில் ஒரு பரிசுத்த பட்டணத்தைக் கட்டவும், யாக்கோபுவின் குமாரர்களான உமது ஊழியக்காரர்கள், நீதிமான்களை கூட்டிச்சேர்க்கும்படியாகவும் நினைவுகூரும்.

59 உமது ஜனங்களின் கூடிச்சேர்தல் மிகுந்த வல்லமையிலும் மகத்துவத்திலும் தொடரும்படியாகவும், உமது கிரியை நீதியோடே சீக்கிரமாய் நிறைவேற்றப்படும்படியாகவும், நீர் நியமித்த இந்த ஒன்றோடு சீயோனில் பிற பிணையங்களை ஆணையிடவும் நாங்கள் உம்மைக் கேட்கிறோம்.

60 புறஜாதியாருடன் அடையாளம் காணப்பட்ட எங்களுக்கு நீர் கொடுத்த வெளிப்படுத்தல்களையும் கட்டளைகளையும் குறித்து கர்த்தாவே இப்பொழுது உமக்கு முன்பாக இந்த வார்த்தைகளை நாங்கள் பேசினோம்.

61 ஆனால் ஒரு மப்பும் மந்தாரமுமான நாளிலே நீண்ட காலத்திற்கு மலைகளின்மேலே சிதறுண்டுபோன யாக்கோபுவின் பிள்ளைகளிடம் உமக்கு மிகுந்த அன்புண்டென்று நீர் அறிவீர்.

62 ஆகவே, இந்த மணி நேரத்திலிருந்து எருசலேம் மீட்கப்படுவது ஆரம்பிப்பதற்காக யாக்கோபுவின் பிள்ளைகளிடத்தில் இரக்கமாயிருக்கும்படி உம்மை நாங்கள் கேட்கிறோம்;

63 தாவீதின் வீட்டிலிருந்து அடிமைத்தனத்தின் நுகம் முறியடிக்கப்படுவது ஆரம்பமாவதாக;

64 தங்கள் தகப்பனான ஆபிரகாமுக்கு நீர் கொடுத்த தேசத்திற்கு யூதாவின் பிள்ளைகள் திரும்பிவர ஆரம்பிப்பார்களாக.

65 அவர்களுடைய மீறுதலினிமித்தம் சபிக்கப்பட்டு, அடிக்கப்பட்ட யாக்கோபுவின் மீதியானோர், அவர்களுடைய காட்டுத்தனமான கொடிய நிலைமையிலிருந்து, நித்திய சுவிசேஷத்தின் பரிபூரணத்திற்கு மாறப்பண்ணுவீராக;

66 அவர்களுடைய இரத்தம் சிந்துதலின் ஆயுதங்களை அவர்கள் கீழே போடவும் தங்களுடைய கலகங்களை நிறுத்தும்படியாகவும்.

67 பூமியின் முடிவுபரியந்தம் விரட்டப்பட்டு, சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலின் மீதியானோர் யாவரும் சத்தியத்தின் அறிவுக்கு வந்து, மேசியாவில் நம்பிக்கை வைத்து, ஒடுக்கத்திலிருந்து மீட்கப்பட்டு உமக்கு முன்பாக களிகூருவார்களாக.

68 கர்த்தாவே, உமது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனையும், அவனுடைய சகல உபத்திரவங்களையும் துன்புறுத்தல்களையும், யேகோவாவுடன் அவன் எவ்வாறு உடன்படிக்கை செய்தான் என்றும், யாக்கோபுவின் வல்லமையுள்ள தேவனே உம்மிடம் பொருத்தனை செய்ததையும், அவனுக்கு நீர் கொடுத்த கட்டளைகளையும், உமது சித்தத்தை நிறைவேற்ற அவன் கருத்தாய் முயற்சித்ததையும் நினைவுகூர்வீராக.

69 உம்முடைய பிரசன்னத்தில் அவர்கள் மேன்மையடையும்படியாகவும் உமது ஆதரவின் கரத்தால் பாதுகாக்கப்படும்படியாகவும் கர்த்தாவே அவனுடைய மனைவியிடமும் பிள்ளைகளிடமும் இரக்கமாயிரும்.

70 அவர்களுடைய தவறான கருத்துக்கள் நொறுக்கப்பட்டு ஒரு வெள்ளத்தோடு அடித்துப் போகப்படுவதைப்போல, அவர்கள் மனமாறி இஸ்ரவேலுடன் மீட்கப்படும்படியாகவும், நீரே தேவனென்று அறிந்து கொள்ளும்படியாகவும், அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் யாவர் மீதும் இரக்கமாயிரும்.

71 அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் யாவருடனும், அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் யாவருடனும், அவர்களுடைய பெயர்கள் அழியாது பாதுகாக்கப்படவும், தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்குமாய் நினைவில் வைக்கப்படவும், உமது வலது கரம் மேன்மைப்படுத்தும்படியாக, கர்த்தாவே, தலைவர்களையும், உமது சபையின் எல்லா தலைவர்களையும் நினைவுகூரும்.

72 கைகளாலல்லாமல் நீர் அமைத்த ராஜ்யம் ஒரு பெரிய பர்வதமாகி பூமியை நிரப்பும்படியாக, அவர்களுடைய குடும்பத்தினர் யாவருடனும், அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் யாவருடனும், அவர்களுடைய வியாதியஸ்தர் மற்றும் உபத்திரவப்படுவோர் யாவருடனும், பூமியின் தரித்திரர், சிறுமைப்பட்டோர் யாவருடனும்,

73 உமது சபை அந்தகாரத்தின் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்து, சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகளுடன் கூடிய படையைப்போல் பயங்கரமானதாயிருக்கும்படியாக;

74 உமது மகிமை பூமியை நிரப்பும்படியாக, நீர் வானங்களைத் திறக்கும்போது அந்த நாளில் மணவாட்டிபோல அலங்கரிக்கப்பட, உமது பிரசன்னத்தில் பர்வதங்கள் கீழே உருண்டோடி, பள்ளத்தாக்குகள் மேடாகி, கரடுமுரடான இடங்கள் சமமாகி;

75 மரித்தவர்களுக்காக எக்காளம் ஊதப்படும்போது, கர்த்தருடன் என்றென்றைக்குமாய் நாங்களிருப்பதற்காக உம்மை சந்திக்க நாங்கள் மேகங்களின்மேலே எடுத்துக்கொள்ளப்பட;

76 எங்களுடைய வஸ்திரங்கள் தூய்மையாயிருக்கும்படிக்கும், எங்களுடைய கைகளில் உள்ளங்கைகளுடன், நாங்கள் நீதியின் வஸ்திரங்களைத் தரித்திருக்கும்படியாக எங்கள் தலைகளின்மேல் மகிமையின் கிரீடங்களுடன், எங்களுடைய பாடுகளுக்காக நித்திய சந்தோஷத்தை அடையும்படிக்கு, கர்த்தாவே உமது சபை முழுவதையும் நினைவுகூரும்.

77 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, இந்த எங்களுடைய வேண்டுதல்களைக் கேட்டு, மகிமை, கனம், வல்லமை, மகத்துவம், பராக்கிரமம், ஆளுகை, சத்தியம், நீதி, நியாயத்தீர்ப்பு, இரக்கம் மற்றும் அநாதியாய் என்றென்றைக்கும், பரிபூரணத்தின் எல்லையில்லாத, நீர் அமர்ந்திருக்கிற சிங்காசனத்தின், பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து எங்களுக்கு பதிலளியும்.

78 கேளும், கேளும், கர்த்தாவே நாங்கள் சொல்வதைக் கேளும், இந்த விண்ணப்பங்களுக்கு பதிலளியும், எங்களின் கைகளின் கிரியையால் உமது நாமத்தில் உமக்காக நாங்கள் கட்டின இந்த ஆலயத்தின் பிரதிஷ்டையை ஏற்றுக் கொள்ளும்;

79 இந்த சபை உமது நாமத்தை தன்மேல் எடுத்துக்கொள்ள அனுமதிப்பீராக. தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா பாடி, துதியின் ஆரவாரத்துடன், உமது சிங்காசனத்தைச் சுற்றியுள்ள அந்த பிரகாசமான ஜொலிக்கும் கேரூபீன்களுடன் எங்களுடைய சத்தங்களைக் கலக்கும்படியாக உமது ஆவியின் வல்லமையால் எங்களுக்குதவும்!

80 இந்த, உமது அபிஷேகிக்கப்பட்டவர்கள் இரட்சிப்பின் ஆடை தரிப்பார்களாக, உமது பரிசுத்தவான்கள் மிகவும் மகிழ்ச்சியாக கெம்பீரிப்பார்களாக. ஆமென், ஆமென்.