வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110


பாகம் 110

ஏப்ரல் 3, 1836ல் ஒஹாயோவின் கர்த்லாந்திலுள்ள ஆலயத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரிக்கும் தரிசனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அத்தருணம் ஒரு ஓய்வுநாளின் கூட்டம். “இந்த நாளில் பரிசுத்த மேஜையில் கடமையாற்றுதல் அவர்களுடைய சிலாக்கியமாயிருந்த, பன்னிருவரிடமிருந்து அதை பெற்று கர்த்தருடைய இராப்போஐனத்தை சபைக்கு பகிர்ந்தளித்துக்கொண்டு பிற்பகலில் பிற தலைவர்களுக்கு நான் உதவிக்கொண்டிருந்தேன். என்னுடைய சகோதரருக்கு இந்த சேவையை செய்தபின்பு, நான் பீடத்திற்குத் திரும்பிச் சென்றேன், திரை விழுந்தது, பக்தியான அமைதலான ஜெபத்தில் நான் ஆலிவர் கௌட்ரியுடன் என்னைத் தாழ்த்தினேன். ஜெபத்திலிருந்து எழுந்தபின்பு, எங்கள் இருவருக்கும் பின்வரும் தரிசனம் திறக்கப்பட்டது” என ஜோசப் ஸ்மித் வரலாறு கூறுகிறது.

1–10, கர்த்தராகிய யேகோவா மகிமையில் தோன்றி, கர்த்லாந்து ஆலயத்தை அவருடைய ஆலயமாக ஏற்றுக்கொள்கிறார்; 11–12, மோசேயும் எலியாஸும் தோன்றி தங்களுடைய திறவுகோல்களையும் ஊழியக்காலங்களையும் பொறுப்பளிக்கிறார்கள்; 13–16, மல்கியாவால் வாக்களிக்கப்பட்டதைப்போல எலியா திரும்பவந்து அவனுடைய ஊழியக்காலங்களின் திறவுகோல்களை பொறுப்பளிக்கிறான்.

1 திரை எங்கள் மனங்களிலிருந்து விலக்கப்பட்டு எங்களது புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டன.

2 எங்களுக்கு முன்பாக பீடத்தின் விளிம்புக்கு மேல் கர்த்தர் நின்றுகொண்டிருப்பதை நங்கள் கண்டோம்; அவருடைய பாதத்தின் கீழே மஞ்சள் நிறத்தில் பசும்பொன் வேலைப்பாடாயிருந்தது.

3 அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய சிரசின் மயிர் உறைந்த மழையைப் போன்று தூய வெண்மையாயிருந்தது; அவருடைய முகரூபம் சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமாய் பிரகாசித்தது; அவரது சத்தம் கொந்தளிக்கிற ஜலப்பிரவாகத்தின் சத்தத்தைப் போலிருந்தது, மேலும் யேகோவாவின் சத்தம் சொன்னது:

4 நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; நானே ஜீவிக்கிறவராயிருக்கிறேன், நானே கொலை செய்யப்பட்டவர், நானே பிதாவிடம் உங்களின் மத்தியஸ்தர்.

5 இதோ, உங்களுடைய பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன; எனக்கு முன்பாக நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகவே, உங்கள் தலைகளை உயர்த்தி களிகூருங்கள்.

6 உங்கள் சகோதரரின் இருதயங்கள் களிகூரட்டும், என்னுடைய நாமத்தில் தங்களுடைய பராக்கிரமத்தில் இந்த ஆலயத்தைக் கட்டிய என்னுடைய சகல ஜனங்களின் இருதயங்களும் களிகூர்வதாக.

7 ஏனெனில் இதோ, இந்த ஆலயத்தை நான் ஏற்றுக்கொண்டேன், என்னுடைய நாமம் இங்கேயிருக்கும்; இந்த ஆலயத்தில் இரக்கத்தில் என்னுடைய ஜனங்களுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்.

8 ஆம், என்னுடைய ஜனங்கள் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு இந்த பரிசுத்த ஆலயத்தை தீட்டுப்படுத்தாதிருந்தால் என்னுடைய ஊழியக்காரர்களுக்கு நான் தோன்றி என்னுடைய சொந்தக்குரலாலே அவர்களுடன் பேசுவேன்.

9 ஆம் பொழியப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் இந்த ஆலயத்தில் என்னுடைய ஊழியக்காரர்கள் தரிப்பித்த தரிப்பித்தலின் விளைவாக ஆயிரக்கணக்கானோர் மற்றும் இலட்சக்கணக்கானவர்களின் இருதயங்கள் அதிகமாய் களிகூரும்.

10 இந்த ஆலயத்தின் புகழ் வெளி தேசங்களுக்கும் பரவும்; என்னுடைய ஜனங்களின் தலைகள் மீது பொழியப்படும் ஆசீர்வாதங்களின் ஆரம்பமாய் இது இருக்கும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

11 இந்த தரிசனம் முடிந்த பின்பு, வானங்கள் மீண்டும் எங்களுக்கு திறக்கப்பட்டது, எங்களுக்கு முன்பாக மோசே தோன்றி, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலின், மற்றும் வடக்கு தேசத்திலிருந்து பத்து கோத்திரங்களை நடத்துதலின் திறவுகோல்களை எங்களிடம் ஒப்படைத்தான்.

12 இதன்பிறகு எலியாஸ் தோன்றி, எங்களாலும் எங்களுடைய சந்ததியாலும் சகல தலைமுறைகளும் ஆசீர்வதிக்கப்படும் என எங்களிடம் சொல்லி ஆபிரகாமின் காலத்தில் கொடுக்கப்பட்ட அதே சுவிசேஷத்தின் ஊழியக்காலத்தை ஒப்படைத்தான்.

13 இந்த தரிசனம் முடிவடைந்த பின், மற்றொரு மகத்தான மகிமையான தரிசனம் எங்களுக்குத் திறக்கப்பட்டது; ஏனெனில் மரணத்தை ருசிபார்க்காமல் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலியா தீர்க்கதரிசி எங்களுக்கு முன்பாக நின்று சொன்னான்:

14 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே அவன் (எலியா) அனுப்பப்படுவான் என்று சாட்சியளித்து,

15 பூமி முழுவதையும் நான் ஒரு சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளின் இருதயங்களை தங்களின் பிதாக்களிடத்திற்கும் திருப்ப, மல்கியாவின் வாயால் பேசப்பட்ட நேரம் முழுமையாக வந்தது,

16 ஆகவே, இந்த ஊழியக்காலத்தின் திறவுகோல்கள் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; இதனால் கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபித்திருக்கிறதென, வாசற்படிகளிலே இருக்கிறதென நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.