வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122


பாகம் 122

மிசௌரியிலுள்ள லிபர்டி சிறைச்சாலையில் ஒரு கைதியாக தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இருந்தபோது அவருக்கு கர்த்தரின் வார்த்தை. இந்த பாகம், மார்ச் 20, 1839 என தேதியிடப்பட்ட சபைக்கு எழுதப்பட்ட நிருபத்திலிருந்து ஒரு பகுதி. (பாகம் 121க்கான தலைப்பைப் பார்க்கவும்).

1–4, தேசத்தின் கடையாந்தரங்கள் ஜோசப் ஸ்மித்தின் பெயரைத் தொடர்ந்து விசாரிக்கும்; 5–7, அவருடைய மோசங்கள், கஷ்டங்கள் யாவும் அவருக்கு அனுபவத்தைக் கொடுத்து அவருடைய நன்மைக்காக இருக்கும்; 8–9, மனுஷகுமாரன் அவைகள் எல்லாவற்றிற்கும் கீழே இறங்கினார்.

1 பூமியின் கடையாந்தரங்கள் உன்னுடைய நாமத்தை விசாரிக்கும், மதிகெட்டவர்கள் உன்னை இகழுவார்கள், பாதாளம் உனக்கு விரோதமாக கொந்தளிக்கும்;

2 இருதயத்தில் சுத்தமுள்ளவர்களும், ஞானிகளும் பிரபுக்களும், குணசாலிகளும் ஆலோசனையையும் அதிகாரத்தையும், ஆசீர்வாதங்களையும் உன்னுடைய கரங்களிலிருந்து தொடர்ந்து நாடுவார்கள்.

3 சதிகாரர்களின் சாட்சியால் உன்னுடைய ஜனங்கள் உனக்கு விரோதமாக திரும்பமாட்டார்கள்.

4 அவர்களுடைய செல்வாக்கு உன்னை தொந்தரவுக்குள்ளும், கம்பிகளுக்குள்ளும், மதில்களுக்குள்ளும் தள்ளினாலும், நீ கனம் பண்ணப்பட்டிருப்பாய்; ஆனால் உன்னுடைய நீதியினால் சிறிது நேரத்திற்கு உன்னுடைய சத்துருக்களுக்கு மத்தியிலே உன்னுடைய சத்தம் கொடிய சிங்கத்தைவிட அதிக பயங்கரமாயிருக்கும்; உன்னுடைய தேவன் என்றென்றைக்கும் உன் அருகில் நிற்பார்.

5 உபத்திரவத்தினோடே கடந்துபோக நீ அழைக்கப்பட்டால்; பொய்யான சகோதரர்களுக்கு மத்தியிலே நீ அழிவுகளிலிருந்தால்; களவாளிகளுக்கு மத்தியிலே உபத்திரவத்தினோடே இருந்தால், நிலத்தாலோ அல்லது சமுத்திரத்தாலோ நீ ஆபத்திலிருந்தால்;

6 நீ எல்லாவிதமான பொய் குற்றச்சாட்டுகளால் குற்றம் சாட்டப்பட்டால்; உன்னுடைய சத்துருக்கள் உன்மீது விழுந்தால்; உன்னுடைய தகப்பன், தாய் மற்றும் சகோதர சகோதரிகளோடு இருக்கும்போது அவர்கள் உன்னைப் பிரித்தால்; உருவப்பட்ட ஒரு வாளைக் கொண்டு உன்னுடைய சத்துருக்கள் உன்னுடைய மனைவியின் பாசத்திலிருந்தும், உன்னுடைய வம்சத்திடமிருந்தும் உன்னை பிரித்தால், ஆறு வயதே ஆகிய உன்னுடைய மூத்த மகன், உன்னுடைய வஸ்திரத்தைப் பிடித்துக்கொண்டு சொல்வான், தகப்பனே, தகப்பனே, என்னுடைய தகப்பனே நீங்கள் ஏன் எங்களோடு தங்கக்கூடாது, இந்த மனுஷர்கள் உங்களை என்ன செய்வார்கள் என்று சொல்லும் பொழுது, பின்னர் பலவந்தத்தால் உன்னிடமிருந்து அவன் பிரிக்கப்பட்டு, நீ சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு, உன்னுடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்காக ஓநாய்களைப்போல உன்னைச் சுற்றி அலைந்தால்;

7 நீ குழிக்குள் அல்லது கொலைகாரர்களின் கைகளில் தள்ளப்பட்டு மரணதண்டனை உனக்குக் கொடுக்கப்பட்டால்; நீ ஆழத்தில் தள்ளப்பட்டால்; பொங்கிவரும் பெரும் அலை உனக்கு விரோதமாக சதிசெய்தால்; கொடும் புயல்கள் உன்னுடைய சத்துருக்களானால்; வானங்கள் இருளை கூட்டிச்சேர்த்து, வழியைத் தடுக்க எல்லா கூறுகளும் ஒன்றுசேர்ந்தால்; எல்லாவற்றிற்கும் மேலாக பாதாளத்தின் கதவுகள் உனக்காக வாயை அகலத்திறந்தால், இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தரும், உன்னுடைய நன்மைக்காயிருக்கும் என்பதை என் மகனே, நீ அறிந்துகொள்.

8 மனுஷ குமாரன் சகலவற்றிற்கும் கீழே இறங்கினார். அவரைவிட நீ பெரியவனோ?

9 ஆகவே, உன் வழியைப் பற்றிக்கொள், ஆசாரியத்துவம் உன்னோடிருக்கும், ஏனெனில் அவைகளின் எல்லைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, அவைகள் கடந்துபோக முடியாது. உன்னுடைய நாட்கள் அறியப்பட்டிருக்கிறது, உன்னுடைய வருஷங்கள் குறைவாக எண்ணப்படாது; ஆகவே மனுஷன் செய்ய முடிகிறவற்றுக்காக பயப்படாதே, ஏனெனில் என்றென்றைக்கும் தேவன் உன்னோடிருக்கிறார்.