வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12


பாகம் 12

மே 1829ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக ஜோசப் நைட், மூத்தவருக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மார்மன் புஸ்தகத்தின் தகடுகள் அவரது கைவசமிருப்பதைப்பற்றியும், மொழிபெயர்ப்பு வேலை அப்பொழுது நடந்து கொண்டிருப்பதைப்பற்றியும் ஜோசப் ஸ்மித்தின் அறிக்கைகளை ஜோசப் நைட் நம்பினார். மேலும் அவர், அவர்கள் மொழிபெயர்ப்பை தொடர்ந்து செய்து முடிப்பதற்காக ஜோசப் ஸ்மித்துக்கும் அவரது எழுத்தருக்கும் அநேகமுறை பொருள் உதவி செய்தார். ஜோசப் நைட்டின் வேண்டுகோளின்படி, தீர்க்கதரிசி கர்த்தரிடம் விசாரித்து வெளிப்படுத்தலைப் பெற்றார்.

1–6, திராட்சைத்தோட்டத்தில் பிரயாசப்படுபவர்கள் இரட்சிப்பைப் பெறுவார்கள்; 7–9, வாஞ்சிக்கிற, தகுதிபெற்ற அனைவரும் கர்த்தரின் பணியில் உதவலாம்.

1 மனுபுத்திரர்களுக்குள் ஒரு பெரிதும் அற்புதமுமான கிரியை வரப்போகிறது.

2 இதோ, நானே தேவன், எனது வார்த்தைக்குச் செவிகொடுங்கள், அது ஜீவனும் வல்லமையுமுள்ள, கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்க, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிட கூர்மையானது, ஆகவே எனது வார்த்தைக்குச் செவிகொடுங்கள்.

3 இதோ, வயல் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது; ஆகவே, அறுவடைக்கு வாஞ்சிக்கிறவன் தனது முழு பெலத்துடன் அரிவாளை நீட்டி, தேவனுடைய ராஜ்யத்தில் தனது ஆத்துமாவுக்கான நித்திய இரட்சிப்புக்காக பொக்கிஷப்படுத்தும்படியாக பகல் இருக்கும்வரை அறுவடை செய்யக்கடவன்.

4 ஆம், தனது அரிவாளை நீட்டி அறுவடை செய்கிறவன் தேவனால் அழைக்கப்பட்டவன்.

5 ஆகவே, என்னிடம் கேட்டால் நீ பெற்றுக்கொள்வாய்; நீ தட்டினால் அது உனக்குத் திறக்கப்படும்.

6 இப்பொழுது, நீ கேட்டதினால், இதோ, எனது கட்டளைகளைக் கைக்கொண்டு, சீயோனைக் கொண்டுவந்து அதை ஸ்தாபிக்க வகைதேடு என நான் உனக்குச் சொல்லுகிறேன்;

7 இதோ, உன்னிடமும், இந்த பணியை கொண்டுவந்து, ஸ்தாபிக்க வாஞ்சிக்கிற அனைவரிடமும் நான் பேசுகிறேன்;

8 தாழ்மையாயும் அன்பில் பூரணப்பட்டுமிருந்து, விசுவாசம், நம்பிக்கை மற்றும் தயாளமுள்ளவர்களாயிருந்து, அவனது பொறுப்பில் விடப்பட்ட எக்காரியமாயிருந்தாலும், எல்லாவற்றிலும் இச்சையடக்கமுள்ளவர்களைத் தவிர யாராலும் இந்த பணிக்கு உதவமுடியாது.

9 இதோ, இந்த வார்த்தைகளைப் பேசுகிற நானே உலகின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன், ஆகவே உன் ஊக்கத்தோடு செவிகொடு, அப்பொழுது நீ அழைக்கப்படுகிறாய். ஆமென்.