வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138


பாகம் 138

அக்டோபர் 3, 1918ல் யூட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் தலைவர் ஜோசப் எப். ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட தரிசனம். முந்தய மாதங்களின்போது அநேக தெய்வீக தொடர்புகளை அவர் பெற்றதாக, அக்டோபர் 4, 1918ல் சபையின் 89வது அரையாண்டு பொது மாநாட்டில் அவருடைய முதல் உரையில் தலைவர் ஸ்மித் அறிவித்தார். இரட்சகரின் சரீரம் கல்லறையிலிருந்தபோது மரித்தவர்களின் ஆவிகளை சந்திக்க அவர் போனதைக் குறித்து அவைகளில் ஒன்றை அதற்கு முதல் நாளில் தலைவர் ஸ்மித் பெற்றார். மாநாட்டின் நிறைவைத் தொடர்ந்து அது உடனடியாக எழுதப்பட்டது. அக்டோபர் 31, 1918ல் பிரதான தலைமையின் ஆலோசகர்களுக்கும், பன்னிருவர் குழுமத்துக்கும் மற்றும் கோத்திரத்தலைவனுக்கும் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களால் அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

1–10, பேதுரு எழுதியவற்றையும் ஆவி உலகத்திற்கு நமது கர்த்தர் போனதையும் குறித்து தலைவர் ஜோசப் எப். ஸ்மித் சிந்திக்கிறார்; 11–24, மரித்த நீதிமான்கள் பரதீசில் கூடியதையும் அவர்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் ஊழியத்தையும் தலைவர் ஸ்மித் காண்கிறார்; 25–37, ஆவிகளுக்கு மத்தியில் சுவிசேஷம் பிரசங்கிப்பது எப்படி ஸ்தாபிக்கப்பட்டதென்பதை அவர் காண்கிறார்; 38–52, தங்களுடைய உயிர்த்தெழுதலுக்கு முன்பாக தங்களுடைய ஆவிநிலையை ஒரு அடிமைத்தனமாக கருதிய ஆதாமையும், ஏவாளையும், அநேக பரிசுத்த தீர்க்கதரிசிகளையும் ஆவி உலகத்தில் அவர் காண்கிறார்; 53–60, இந்த நாளில் மரித்த நீதிமான்கள் ஆவிகள் உலகத்தில் தங்களுடைய பிரயாசங்களைத் தொடர்ந்தார்கள்.

1 ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டாம் வருஷம் அக்டோபர் மூன்றாம் நாளில் வேதங்களைப்பற்றி தியானித்துக்கொண்டு என்னுடைய அறையில் நான் அமர்ந்திருந்தேன்;

2 உலகத்தின் மீட்பிற்காக தேவகுமாரனால் செய்யப்பட்ட மகா பாவநிவர்த்தியின் பலியைப்பற்றியும்;

3 உலகத்திற்குள் மீட்பரின் வருகையினால் பிதாவாலும் குமாரனாலும் வெளிப்படுத்தப்பட்ட மகத்தான அற்புதமான அன்பைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்;

4 அதாவது அவருடைய பாவநிவர்த்தியின் மூலமாகவும் சுவிசேஷத்தின் கொள்கைகளுக்கு கீழ்ப்படிதலாலும் மனுக்குலம் இரட்சிக்கப்படும்.

5 இப்படியாக நான் ஈடுபட்டிருந்தபோது கர்த்தரின் சிலுவையிலறைதலுக்குப்பின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா மற்றும் ஆசியாவின் பிற பாகங்கள் முழுவதிலும் பரவியிருந்த ஆரம்பகால பரிசுத்தவான்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதியவைகளுக்கு என் மனம் திரும்பியது.

6 வேதாகமத்தை நான் திறந்து பேதுரு முதலாம் நிருபத்தின் மூன்றாவது, நான்காவது அதிகாரங்களைப் படித்தேன், நான் படித்துக்கொண்டிருந்தபோது பின்வரும் பகுதிகளில் முன்பு ஒருபோதுமில்லாத அளவுக்கு நான் அதிகமாய் கவரப்பட்டேன்:

7 “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்:

8 “அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்;

9 “அந்த ஆவிகள் பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுபேர் மாத்திரமே பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” (1பேதுரு3:18–20).

10 “இதற்காக மரித்தோரானவர்கள் மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன் முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக மரித்தவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.” (1பேதுரு4:6)

11 எழுதப்பட்ட இந்தக் காரியங்களைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய புரிந்து கொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டு, கர்த்தரின் ஆவி என்மீது இறங்கியது, சிறியதும் பெரியதுமான மரித்தோரின் சேனைகளை நான் கண்டேன்.

12 அநித்தியத்தில் அவர்கள் வாழ்ந்தபோது இயேசுவின் சாட்சியில் உண்மையுள்ளவர்களாயிருந்த;

13 தேவகுமாரனின் பெரிதான பலியின் சாயலில் பலி செலுத்தியவர்களான, தங்களுடைய மீட்பரின் நாமத்தில் உபத்திரவத்திலே பாடனுபவித்த, நீதிமான்களின் ஆவிகளின் ஒரு கணக்கிலடங்காத குழு ஒரு இடத்தில் ஒன்றுசேர கூடியிருந்தார்கள்.

14 பிதாவாகிய தேவனின் மற்றும் அவருடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக ஒரு மகிமையான உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில் உறுதியாயிருந்து இவைகள் யாவும் அநித்திய ஜீவியத்திலிருந்து புறப்பட்டுப்போயிருந்தன.

15 அவர்களுடைய விடுதலையின் நாள் சமீபித்திருந்ததால் அவர்கள் சந்தோஷத்திலும் மகிழ்ச்சியிலும் நிரப்பப்பட்டு ஒன்றுகூடி களிகூர்ந்ததை நான் கண்டேன்.

16 மரணக் கட்டுகளிலிருந்து அவர்களுடைய மீட்பை அறிவிக்க ஆவி உலகத்திற்குள் தேவ குமாரனின் வருகைக்காக காத்திருந்து அவர்கள் ஒன்றுகூட்டப்பட்டிருந்தார்கள்.

17 அவர்கள் சந்தோஷத்தின் பரிபூரணத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக ஆவியும் சரீரமும் ஒருபோதும் மீண்டும் பிரிந்து போகாதிருக்கும்படியாக எலும்போடு எலும்பும், அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாகி அவர்களுடைய நித்திரையிலிருந்த தூசு ஒழுங்கான பரிபூரண அமைப்பிலே திரும்ப சேர்க்கப்பட வேண்டும்.

18 இந்த மிகத் திரளானோர் காத்திருந்தும் சம்பாஷித்துக் கொண்டும் மரணத்தின் சங்கிலிகளிலிருந்து தங்களுடைய விடுதலையின் மணி நேரம் குறித்து களிகூர்ந்து கொண்டிருந்தபோது, தேவகுமாரன் பிரசன்னமாகி உண்மையுள்ளவர்களாயிருந்த சிறைப்பட்டவர்களுக்கு சுதந்திரத்தை அறிவித்து;

19 அங்கே நித்திய சுவிசேஷத்தையும் உயிர்த்தெழுதலின் கோட்பாடையும், வீழ்ச்சியிலிருந்து மனுக்குலத்திற்கும், மனந்திரும்புதலின் நிபந்தனையின் பேரில் தனிப்பட்டவர்களின் பாவங்களிலிருந்து மீட்பையும், அவர்களுக்கு அங்கு அவர் போதித்தார்.

20 ஆனால் துன்மார்க்கரிடத்தில் அவர் போகவில்லை, பக்தியில்லாதவர்கள் மற்றும், மாம்சத்தில் தங்களையே தீட்டுப்படுத்தியவர்களின் மத்தியிலும், அவருடைய குரல் உயர்த்தப்படவில்லை;

21 பூர்வகால தீர்க்கதரிசிகளின் சாட்சிகளையும் எச்சரிப்புகளையும் நிராகரித்த கலகக்காரர்கள் அவருடைய பிரசன்னத்தைக் காணவில்லை, அவருடைய முகத்தையும் பார்க்கவில்லை.

22 இவர்களிருந்த இடங்களில் இருள் ஆளுகை செய்தது, ஆனால் நீதிமான்களுக்கு மத்தியிலே சமாதானமிருந்தது;

23 தங்களுடைய மீட்பில் பரிசுத்தவான்கள் களிகூர்ந்து முழங்காற்படியிட்டு தங்களுடைய மீட்பராகவும் மரணத்திலிருந்தும் பாதாளத்தின் சங்கிலிகளிலிருந்தும் தப்புவிப்பவராகவும் தேவகுமாரனை அங்கீகரித்தார்கள்.

24 அவர்களுடைய முகரூபங்கள் பிரகாசித்தன, கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து ஒளி அவர்கள்மேல் இறங்கியது, அவர்கள் அவருடைய பரிசுத்த நாமத்தைத் துதித்துப் பாடினார்கள்.

25 ஏனெனில் நித்திய சுவிசேஷத்தை அவர்களுக்கு போதிக்கவும் மனந்திரும்புதலுக்கு அவர்களை அழைக்கவும் பிரயத்தனம் செய்துகொண்டு யூதர்களுக்கும் இஸ்ரவேல் வீட்டாருக்கும் மத்தியிலும் அவருடைய ஊழியத்தில் ஏறக்குறைய மூன்று வருஷங்களை இரட்சகர் செலவழித்ததை நான் புரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டேன்;

26 இருந்தும், பெரிதான வல்லமையிலும் அதிகாரத்திலும் அவருடைய பராக்கிரமமான கிரியைகளும், அற்புதங்களும், சத்தியத்தை அறிவித்திருந்த போதும், அவருடைய சத்தத்திற்கு சிலரே செவிகொடுத்து, அவருடைய பிரசன்னத்தில் களிகூர்ந்து அவருடைய கைகளில் இரட்சிப்பைப் பெற்றார்கள்.

27 ஆனால் மரித்தவர்களுக்கு மத்தியில் அவருடைய ஊழியம் அவருடைய சிலுவையிலறைதலுக்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்குமிடையிலான குறைந்த நேரத்திற்கு மட்டுமே இருந்தது.

28 சில சமயங்களில் நோவாவின் நாட்களிலே தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது கீழ்ப்படியாமற்போன காவலிலுள்ள ஆவிகளுக்கு தேவகுமாரன் பிரசங்கித்தார் என்று அவன் சொன்னதிலும், அந்த ஆவிகளுக்குப் பிரசங்கிக்கவும் ஒரு மிகக் குறைந்த நேரத்தில் அத்தியாவசியமான பிரயாசத்தை அவர்களுக்கு மத்தியில் நடப்பிக்கவும், அவருக்கு எவ்வாறு சாத்தியமானது என்றும் சொன்ன பேதுருவின் வார்த்தைகளில் நான் ஆச்சரியமடைந்தேன்.

29 நான் ஆச்சரியமடைந்தபோது, என்னுடைய கண்கள் திறக்கப்பட்டன, என்னுடைய புரிந்து கொள்ளுதல் உயிர்ப்பிக்கப்பட்டது, துன்மார்க்கருக்கும், சத்தியத்தை நிராகரித்த கீழ்ப்படியாதவர்களுக்கும் மத்தியிலே அவர்களுக்குப் போதிக்க கர்த்தர் நேரடியாகப் போகவில்லை என்பதை நான் அறிந்தேன்;

30 ஆனால் இதோ, நீதிமான்களுக்கு மத்தியிலே அவருடைய பராக்கிரமங்களை நிர்வகித்து, தூதர்களை நியமித்து, அவர் தன் சேனைகளை ஒழுங்குபடுத்தி தூதர்களை நியமித்து வல்லமையுடனும் அதிகாரத்தினுடனும் வஸ்திரம் தரிப்பித்து அந்தகாரத்திலிருப்பவர்களுக்கும், மனுஷர்களின் சகல ஆவிகளுக்கும் சுவிசேஷத்தின் ஒளியை எடுத்துப் போகுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்; அப்படியாக மரித்தவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது.

31 தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்கள் கர்த்தருடைய அநுக்கிரக காலத்திலே கட்டப்பட்ட சிறைப்பட்டவர்களுக்கும், தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பி, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிற யாவருக்கும் சுதந்திரத்தை அறிவிக்கப் போனார்கள்.

32 அப்படியாக, சத்தியத்தின் அறிவில்லாமல், அல்லது மீறுதலில் தீர்க்கதரிசிகளை நிராகரித்து தங்களுடைய பாவங்களில் மரித்தவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது.

33 தேவனில் விசுவாசம், பாவத்திலிருந்து மனந்திரும்புதல், பாவங்களின் மீட்பிற்காக பதிலி ஞானஸ்நானம், கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரம் இவற்றாலும்,

34 மனுஷர் முன்பாக மாம்சத்திலே நியாயந்தீர்க்கப்பட்டிருந்தும், தேவன் முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக அவர்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக அறிந்துகொள்ள அவசியமான பிற எல்லா சுவிசேஷக் கொள்கைகளும் அவர்களுக்கு போதிக்கப்பட்டன.

35 சிலுவையில் தேவகுமாரனின் பலியின் மூலமாக மீட்பு நடப்பிக்கப்பட்டதென்பதை சிறியதும் பெரியதும், அநீதியான மற்றும் விசுவாசிகளுமான மரித்தவர்களுக்கு மத்தியிலே அறியப்படுத்தப்பட்டது.

36 இப்படியாக, மாம்சத்திலே அவரைக் குறித்து சாட்சியளித்த தீர்க்கதரிசிகளின் உண்மையுள்ள ஆவிகளுக்கு அறிவுறுத்திக்கொண்டும் ஆயத்தப்படுத்திக்கொண்டும்;

37 அவர்களுடைய கலகத்தினாலும் மீறுதலினாலும் நேரடியாகப் போகமுடியாத மரித்தவர்கள் யாவருக்கும் மீட்பின் செய்தியை எடுத்துப்போகும்படியாக, அவருடைய ஊழியக்காரர்களின் ஊழியத்தின் மூலமாக அவருடைய வார்த்தையை அவர்கள் கேட்கும்படியாகவும், ஆவிகளின் உலகத்திலே அவர் தங்கியிருந்தபோது நமது மீட்பர் தனது நேரத்தை செலவழித்தார் என்பது அறியப்படுத்தப்பட்டது.

38 நீதிமான்களின் இந்த பரந்த சபையில் கூடியிருந்த மகத்தான பராக்கிரமமானவர்களுக்கு மத்தியிலே பூர்வ நாட்களின், யாவருக்கும் தகப்பனான தகப்பன் ஆதாமும்,

39 காலங்காலமாக ஜீவித்து மெய்யான ஜீவிக்கிற தேவனை தொழுது கொண்டிருந்த அவளுடைய உண்மையுள்ள அநேக குமாரத்திகளுடன் மகத்துவமிக்க நமது தாயாகிய ஏவாளுமிருந்தாள்.

40 முதல் இரத்த சாட்சியான ஆபேலும், அவனுடைய தகப்பனான ஆதாமின் சாயலிலிருந்த பராக்கிரமமானவர்களில் ஒருவனான அவனுடைய சகோதரனான சேத்தும் அங்கிருந்தார்கள்.

41 வெள்ளத்தைப்பற்றி எச்சரிக்கைக் கொடுத்த நோவாவும்; மகா பிரதான ஆசாரியனான சேமும்; விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாமும்; ஈசாக்கும், யாக்கோபுவும் இஸ்ரவேலின் மகா நியாயப்பிரமாணிக்கனான மோசேயும்;

42 இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்ட, சிறைப்பட்டவர்களுக்கு சுதந்திரத்தை அறிவிக்க, கட்டுண்டவர்களுக்கு சிறைச்சாலையைத் திறக்க மீட்பர் அபிஷேகம் பண்ணப்பட்டாரென தீர்க்கதரிசனத்தினால் அறிவித்த ஏசாயாவும் கூட அங்கிருந்தார்கள்.

43 மேலும் ஜீவிக்கிற ஆத்துமாக்களாக மரித்தவர்களின் உயிர்த்தெழுதலில் மீண்டும் எழுந்துவர மாம்சத்தால் உடுத்தப்படவேண்டிய உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு தரிசனத்தில் காட்டப்பட்ட எசேக்கியேலும்;

44 பிற்காலங்களில் ஒருபோதும் அழிக்கப்படாத, பிற ஜனங்களுக்கு கொடுக்கப்படாதிருக்கிற தேவனின் ராஜ்யத்தின் ஸ்தாபிதத்தை முன்னதாகக் கண்டு முன்னறிவித்த தானியேலும்;

45 மறுரூப மலையின்மேல் மோசேயுடனிருந்த எலியாஸும்;

46 எலியாவின் வருகையைப்பற்றி சாட்சி கொடுத்த, கர்த்தரின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பாக அவர் வரவேண்டுமென அறிவித்து தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம் மரோனி பேசிய அந்த தீர்க்கதரிசி மல்கியாவும் கூட அங்கிருந்தார்கள்.

47 தங்களுடைய பிதாக்களுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளுடைய இருதயங்களில் தீர்க்கதரிசி எலியா நடவேண்டியதிருந்தது,

48 அவரது வருகையில் பூமி முழுவதும் ஒரு சாபத்தால் அடிக்கப்பட்டு முற்றிலும் விரயமாகாதபடிக்கு மரித்தவர்களுக்கான மீட்பிற்காகவும், பிள்ளைகள் அவர்களின் பெற்றோருடன் முத்திரிக்கப்படவும் காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்திற்கு முன்பே கர்த்தரின் ஆலயங்களில் செய்யப்பட வேண்டிய மகத்தான பணி உள்ளது. நிச்சயமாய்ப் பாழாக்கப்படாமல்,

49 இவர்களும் அநேகரும் நேபியர்களோடு வாழ்ந்த தேவ குமாரனின் வருகையைக் குறித்து சாட்சியளித்த தீர்க்கதரிசிகளும் பரந்த கூட்டத்தில் கூடிச் சேர்ந்து அவர்களுடைய விடுதலைக்காக காத்திருந்தார்கள்,

50 ஏனெனில் மரித்தவர்கள் தங்களுடைய சரீரங்களில் நீண்ட நாட்களாக தங்களுடைய ஆவிகளில்லாததை ஒரு அடிமைத்தனமாக நினைத்தார்கள்.

51 மரணத்திலிருந்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், நித்தியத்துடனும் நித்திய ஜீவனுடனும் அங்கே கிரீடம் சூட்டப்பட்டு, அவருடைய பிதாவின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க இவைகளை கர்த்தர் போதித்து வெளியே வர அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்,

52 கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதைப்போல அவர்களுடைய பிரயாசத்தில் தொடர்ந்து, அவரை நேசிக்கிறவர்களுக்காக காக்கப்பட்டிருக்கிற சகல ஆசீர்வாதங்களிலும் பங்கேற்பவர்களாயிருப்பார்கள்.

53 தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும், என்னுடைய தகப்பனாகிய ஹைரம் ஸ்மித்தும், பிரிகாம் யங்கும், ஜான் டெய்லரும், வில்பர்ட் உட்ரப்பும், ஆலயங்களைக் கட்டுவதையும், அங்கே மரித்தவர்களின் மீட்பிற்காக நியமங்களைச் செய்வதையும் சேர்த்து, பிற்காலத்தின் மகத்தான பணிக்கு அஸ்திவாரங்களைப் போடுவதில் பங்கேற்க காலங்களின் நிறைவேறுதலில் வெளியேவர காத்துக்கொண்டிருக்கிற,

54 பிற தெரிந்தெடுக்கப்பட்ட ஆவிகளும், ஆவி உலகத்திலிருந்தார்கள்.

55 தேவனின் சபையில் அதிகாரிகளாயிருக்க ஆரம்பத்திலே தெரிந்தெடுக்கப்பட்டவர்களான பிரபுக்களும் அதிகாரிகளும் அவர்களுக்கு மத்தியிலிருந்ததை நான் கவனித்தேன்.

56 அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களும் பிற அநேகருடனும் ஆவிகளின் உலகத்தில் அவர்களுடைய முதல் பாடங்களைப் பெற்றார்கள் மற்றும் மனுஷர்களின் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவருடைய திராட்சைத் தோட்டத்திலே பிரயாசப்பட கர்த்தருடைய ஏற்ற காலத்திலே வெளியேவர ஆயத்தப்படுத்தப்பட்டார்கள்.

57 அவர்கள் அநித்திய ஜீவியத்திலிருந்து புறப்பட்டபோது இந்த ஊழியக்காலத்தின் உண்மையுள்ள மூப்பர்கள், மரித்த ஆவிகளின் மகா உலகத்தில் அந்தகாரத்திலும் பாவத்தின் அடிமைத்தனத்தின் கீழுமிருக்கிறவர்களுக்கு மத்தியில் ஒரேபேறான தேவ குமாரனின் பலியின் மூலமாக மனந்திரும்புதல் மற்றும் மீட்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் தங்களுடைய பிரயாசத்தைத் தொடர்ந்ததை நான் கண்டேன்.

58 தேவனின் ஆலயத்தின் நியமங்களுக்குக் கீழ்ப்படிதலின் மூலமாக, மனந்திரும்பிய மரித்தவர்கள் மீட்கப்படுவார்கள்,

59 தங்களுடைய மீறுதல்களுக்காக அவர்கள் கிரயம் செலுத்தி, சுத்தமாகக் கழுவப்பட்ட பின்பு, அவர்கள் இரட்சிப்பின் சந்ததிகளாயிருப்பதால் அவர்களின் கிரியைகளுக்குத் தக்கதாய் ஒரு பலனைப் பெறுவார்கள்.

60 இப்படியாக மரித்தவர்களுக்கான மீட்பின் தரிசனம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது, நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தின் மூலமாக இந்த சாட்சி மெய்யானதென நான் அறிவேன், மற்றும் நான் சாட்சியளிக்கிறேன் அப்படியே ஆகக்கடவது. ஆமென்.