பாகம் 13
மே 15, 1829ல் பென்சில்வேனியாவின் ஹார்மனிக்கருகில் ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு தீர்க்கதரிசியும் ஆலிவர் கௌட்ரியும் நியமிக்கப்படுதலைப்பற்றி விளக்கி ஜோசப் ஸ்மித் வரலாற்றிலிருந்து ஒரு சுருக்கம். தன்னை யோவான் என அறிவித்த, புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானன் என்றழைக்கப்பட்ட, ஒரு தூதனின் கைகளால் இந்த நியமனம் செய்யப்பட்டது, மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவம் என்றழைக்கப்படுகிற உயர்ந்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களைத் தரித்திருக்கிற பூர்வகாலத்து அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானின் வழிகாட்டுதலின் கீழ் தான் செயல்படுவதாக தூதன் விளக்கினான். குறிப்பிடப்பட்ட நேரத்தில் இந்த உயர்ந்த ஆசாரியத்துவம் அவர்கள்மேல் அருளப்படும் என ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. (பாகம் 27:7–8, 12 பார்க்கவும்).
ஆரோனிய ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களும் வல்லமைகளும் ஏற்படுத்தப்பட்டன.
1 என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல், மேசியாவின் நாமத்தில், தூதர்களின் பணிவிடை, மனந்திரும்புதலின் சுவிசேஷம், மற்றும் பாவங்களின் மீட்பிற்காக முழுக்கு ஞானஸ்நானம் ஆகியவற்றின் திறவுகோல்களைக் கொண்டிருக்கிற, ஆரோனின் ஆசாரியத்துவத்தை நான் அருளுகிறேன். லேவியின் குமாரர்கள் மீண்டும் நீதியிலே காணிக்கையைக் கர்த்தருக்குப் படைக்குமட்டும் இது மீண்டும் ஒருபோதும் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.