பாகம் 15
ஜூன் 1829ல் நியூயார்க்கிலுள்ள பயெட்டியில் ஜான் விட்மருக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல் (பாகம் 14க்கான தலைப்பைப் பார்க்கவும்). நெருக்கமானதும் கவரக்கூடியதுமான தனிப்பட்ட செய்தியில், ஜான் விட்மருக்கும் தமக்கும் மட்டுமே தெரிந்ததை கர்த்தர் கூறுகிறார். பின்னர் மார்மன் புஸ்தகத்திற்கான எட்டு சாட்சிகளில் ஜான் விட்மர் ஒருவரானார்.
1–2, கர்த்தரின் கரம் பூமி முழுவதிலுமிருக்கிறது; 3–6, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் ஆத்துமாக்களை இரட்சிப்பதும் மிகுந்த மதிப்புடைய காரியமாயிருக்கிறது.
1 எனது ஊழியக்காரனாகிய ஜான், செவிகொடு, மற்றும் உனது கர்த்தரும் உனது மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேள்.
2 இதோ, கண்டிப்புடனும், வல்லமையுடனும் நான் உன்னுடனே பேசுகிறேன், ஏனெனில் என் கரம் பூமி முழுவதிலுமிருக்கிறது.
3 என்னையும் உன்னையும் தவிர ஒரு மனுஷனும் அறிந்திராததை நான் உனக்குக் கூறுவேன்.
4 ஏனெனில் உனக்கு அதிக மதிப்புடையது எதுவாயிருக்குமென அறிய அநேக முறைகள் என்னிடம் நீ வாஞ்சித்தாய்.
5 இதோ, இந்தக் காரியத்திற்காகவும், எனது கட்டளைகளின்படி நான் உனக்குக் கொடுத்த எனது வார்த்தைகளை பேசியதற்காகவும் நீ பாக்கியவானாயிருப்பாய்.
6 இதோ, எனது பிதாவின் ராஜ்யத்தில் அவர்களோடு இளைப்பாற, என்னிடத்தில் ஆத்துமாக்களை கொண்டுவர, இந்த ஜனங்களிடத்தில் மனந்திரும்புதலை நீ அறிவிப்பதுவே உனக்கு பெருமதிப்பானதாயிருக்குமென இப்பொழுது நான் உனக்குச் சொல்லுகிறேன். ஆமென்.