வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28


பாகம் 28

செப்டம்பர் 1830ல், நியூயார்க்கின் பயெட்டியில் ஆலிவர் கௌட்ரிக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சபையின் அங்கத்தினரான ஹைரம் பேஜிடம் ஒரு குறிப்பிட்ட கல் இருந்தது, அதன் துணையால் சீயோனைக் கட்டுவதற்கும், சபையின் முறைமைக்கும் சம்பந்தப்பட்ட வெளிப்படுத்தல்களைப் பெறுவதாக அறிவித்தான். ஏராளமான அங்கத்தினர்கள் இம்மாதிரியான கோரிக்கைகளால் ஏமாற்றப்பட்டிருந்து, அவற்றால் ஆலிவர் கௌட்ரியும்கூட தவறாக தாக்கமடைந்தார். தீர்மானிக்கப்பட்ட ஒரு மாநாட்டுக்கு சற்று முன்னே இந்தக் காரியத்தைக் குறித்து தீர்க்கதரிசி உருக்கமாய் கர்த்தரிடம் விசாரித்தார்; இந்த வெளிப்படுத்தல் பின்தொடர்ந்தது.

1–7, இரகசியங்களின் திறவுகோல்களை ஜோசப் ஸ்மித் தரித்திருக்கிறார், சபைக்கான வெளிப்படுத்தல்களை அவர் மட்டுமே பெறுகிறார்; 8–10, ஆலிவர் கௌட்ரி, லாமானியர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும்; 11–16, ஹைரம் பேஜை சாத்தான் ஏமாற்றி அவனுக்கு பொய்யான வெளிப்படுத்தல்களைக் கொடுத்தான்.

1 இதோ ஆலிவர், நான் கொடுத்த வெளிப்படுத்தல்கள் மற்றும் கட்டளைகளைக் குறித்தவரை, தேற்றரவாளனால் நீ எதை அவர்களுக்குப் போதித்தாலும் சகல காரியங்களிலும் சபையால் நீ கேட்கப்படுமாறு உனக்கு அருளப்படுமென நான் உனக்குச் சொல்லுகிறேன்.

2 ஆனால், இதோ, மோசேயைப்போல எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் அவைகளைப் பெறுவதால், அவனைத்தவிர இந்த சபையில், கட்டளைகளையும், வெளிப்படுத்தல்களையும் பெற ஒருவனும் நியமிக்கப்படமாட்டான் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

3 கட்டளைகளையும், வெளிப்படுத்தல்களையும், வல்லமையோடும், அதிகாரத்தோடும் சபைக்கு அறிவிக்க, அவனுக்கு நான் கொடுக்கிற காரியங்களுக்கு, நீ, ஆரோனைப்போல கீழ்ப்படிதலுள்ளவனாய் இருப்பாயாக.

4 எந்த நேரத்திலேயாவது அல்லது எல்லா நேரங்களிலும் கட்டளையாக சபைக்குப் பேச அல்லது போதிக்க தேற்றரவாளனால் நீ நடத்தப்பட்டால் அதை நீ செய்யலாம்.

5 ஆனால் ஞானமாக அன்றி, நீ கட்டளையாக எழுதக்கூடாது;

6 உனக்குத் தலைமையாயிருக்கிற, மற்றும் சபைக்கும் தலைமையாயிருக்கிற அவனுக்கு நீ கட்டளையிடாதிருப்பாயாக;

7 ஏனெனில் அவனுக்குப் பதிலாக மற்றொருவனை அவர்களுக்கு நான் நியமிக்கும்வரை, முத்திரிக்கப்பட்ட இரகசியங்கள் மற்றும் வெளிப்படுத்தல்களின் திறவுகோல்களை அவனுக்கு நான் கொடுத்திருக்கிறேன்.

8 இப்பொழுதும், இதோ, லாமானியர்களிடத்தில் நீ போய் அவர்களுக்கு எனது சுவிசேஷத்தைப் பிரசங்கி என நான் உனக்குச் சொல்லுகிறேன்; உனது போதனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிற அளவில் அவர்களுக்கு மத்தியிலே நீ எனது சபை ஸ்தாபிக்கப்படச் செய்; வெளிப்படுத்தல்களை நீ பெறுவாய், ஆனால் அவைகளை கட்டளைகளாக எழுதாதே.

9 இப்பொழுதும், இதோ, இது வெளிப்படுத்தப்படவில்லை, சீயோன் பட்டணம் எங்கே கட்டப்படவேண்டுமென ஒருவனும் அறியான், ஆனால் இப்போதிலிருந்து அது கொடுக்கப்படுமென நான் உனக்குச் சொல்லுகிறேன். இதோ லாமானியர்களின் எல்லையில் அது இருக்குமென நான் உனக்குச் சொல்லுகிறேன்.

10 மாநாடு முடியும்வரை நீ இந்த இடத்தை விட்டுப்போகாதே, அதன் ஒப்புதலால் மாநாட்டுக்கு தலைமை தாங்க எனது ஊழியக்காரன் ஜோசப் நியமிக்கப்படுவான், அவன் உனக்குச் சொல்லுகிறவற்றை நீ சொல்வாயாக.

11 மீண்டும், நீ உனது சகோதரனாகிய ஹைரம் பேஜை அழைத்து நீயும் அவனும் தனித்திருக்கையில், அந்தக் கல்லிலிருந்து அவன் எழுதியவை என்னிடமிருந்து வந்ததல்ல என்றும் சாத்தான் அவனை ஏமாற்றிவிட்டானென்றும் அவனுக்கு கூறுவாயாக.

12 ஏனெனில் இதோ, இந்தக் காரியங்கள் அவனுக்கு பணிக்கப்படவில்லை, சபையின் உடன்படிக்கைகளுக்கு எதிராக இந்த சபையில் எவரும் எந்தக் காரியத்திலும் நியமிக்கப்படவில்லை.

13 ஏனெனில் சபையில் சகல காரியங்களும் ஒழுங்கான முறையிலும், விசுவாசத்தின் ஜெபத்தாலும், சபையின் பொது சம்மதத்துடனும் நடத்தப்பட வேண்டும்.

14 லாமானியர்களுக்கு மத்தியில் உனது பயணத்தை மேற்கொள்ளுவதற்கு முன் சபையின் உடன்படிக்கைகளின்படி இந்த சகல காரியங்களையும் சரிப்படுத்த நீ உதவி செய்வாயாக.

15 நீ போகிற நேரத்திலிருந்து நீ திரும்ப வருகிறவரையிலான நேரம்வரை நீ என்ன செய்யவேண்டுமென்பது உனக்குத் தெரிவிக்கப்படும்.

16 களிகூருதலின் சத்தத்தோடு எனது சுவிசேஷத்தை அறிவித்து எல்லா நேரத்திலும் நீ உனது வாயைத்திறக்க வேண்டும். ஆமென்.