வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 30


பாகம் 30

பயெட்டியில் மூன்று நாட்கள் மாநாட்டைத் தொடர்ந்து, ஆனால் சபையின் மூப்பர்கள் பிரிந்து போவதற்கு முன், செப்டம்பர் 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில் டேவிட் விட்மருக்கும், பீட்டர் விட்மர் இளையவருக்கும், ஜான் விட்மருக்கும், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். முதலாவதாக இந்த பாகம் மூன்று வெளிப்படுத்தல்களாக வெளியிடப்பட்டது. கோட்பாடும் உடன்படிக்கைகளின் 1835 பதிப்பிற்காக தீர்க்கதரிசியால் ஒரு பாகமாக அது தொகுக்கப்பட்டது.

1–4, கருத்தாய் சேவிக்க தவறியதற்காக, டேவிட் விட்மர் கண்டிக்கப்படுகிறார்; 5–8, லாமானியர்களிடத்தில் ஊழியத்திற்காக ஆலிவர் கௌட்ரிக்கு துணையாக பீட்டர் விட்மர் இளையவர் செல்ல வேண்டும்; 9–11, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஜான் விட்மர் அழைக்கப்படுகிறார்.

1 இதோ, டேவிட், நீ மனுஷர்களுக்குப் பயப்பட்டு, நீ செய்ய வேண்டிய விதமாக பெலத்திற்காக என்னை நீ சார்ந்திருக்கவில்லை என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

2 ஆனால், உனது சிருஷ்டிகரான எனக்கடுத்த காரியங்களைவிட, நீ அழைக்கப்பட்ட ஊழியத்தைவிட பூமிக்கடுத்த காரியங்களிலே உனது மனமிருந்திருக்கிறது; எனது ஆவிக்கும், உனக்கு மேலாக ஏற்படுத்தப்பட்டவர்களுக்கும் நீ செவிகொடுக்கவில்லை, ஆனால் நான் கட்டளையிடாதவர்களால் வற்புறுத்தப்பட்டாய்.

3 ஆகவே, என்னிடம் விண்ணப்பிக்கும்படியும், நீ பெற்றுக்கொண்ட காரியங்களைப்பற்றி தியானிக்கவும் நீயே உன்னை ஒப்படைத்தாய்.

4 நான் உனக்கு மேலும் கட்டளைகளைக் கொடுக்கும்வரை, உனது குடும்பம் உனது தகப்பனின் வீட்டிலிருக்கும். நீ சபையின் ஊழியத்தை உலகத்திற்கு முன்பாகவும், சுற்றிலுமுள்ள பகுதிகளிலும் செய்வாயாக. ஆமென்.

5 இதோ, பீட்டர், உனது சகோதரனான ஆலிவருடன் உனது பயணத்தை நீ மேற்கொள்ளவேண்டும்; எனது சுவிசேஷத்தை அறிவிக்க நீ உனது வாயைத் திறப்பது எனக்கு அவசியமாயிருக்கிற நேரம் வந்திருக்கிறது; ஆகவே பயப்படாதே, ஆனால் உனக்கு அவன் கொடுக்கப்போகிற, உனது சகோதரனின் வார்த்தைகளுக்கும் புத்திமதிக்கும் செவிகொடு என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

6 அவனது விடுதலைக்கும், உனது விடுதலைக்கும், ஜெபத்திலும் விசுவாசத்திலும் உனது இருதயத்தை எப்போதும் உயர்த்தி அவனது உபத்திரவங்கள் அனைத்திலும் நீ உபத்திரவப்படு; ஏனெனில் லாமானியர்களுக்கு மத்தியில் எனது சபையைக் கட்ட நான் அவனுக்கு வல்லமையைக் கொடுத்திருக்கிறேன்;

7 அவனது சகோதரனான ஜோசப் ஸ்மித் இளையவனைத் தவிர சபையின் காரியங்களைக் குறித்து சபையில் அவனுக்கு மேலாக யாரையும் அவனது ஆலோசகராக இருக்க நான் நியமிக்கவில்லை.

8 ஆகவே, இந்தக் காரியங்களுக்கு செவிகொடு, எனது கட்டளைகளைக் கைக்கொள்வதில் கருத்தாயிரு, நித்திய ஜீவனுக்கு நீ பாக்கியவானாயிருப்பாய். ஆமென்.

9 இதோ, எனது ஊழியக்காரனாகிய ஜான், ஒரு எக்காள சத்தத்தைப்போல எனது சுவிசேஷத்தை அறிவிக்க இந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டுமென நான் உனக்குச் சொல்லுகிறேன்.

10 உனது சகோதரனான பிலிப் புரோஸிடத்திலும், அந்த பகுதியின் சுற்றுப்புறத்திலும், ஆம், அங்கிருந்து போகும்படி நான் கட்டளையிடும்வரை நீ கேட்கப்படும் எல்லா இடங்களிலும் பிரயாசப்படுவாயாக.

11 இப்போதிலிருந்து, உனது முழு பிரயாசமும் உனது முழு ஆத்துமாவோடும் சீயோனிலிருப்பதாக; ஆம், நான் உன்னோடு இருப்பதால் மனுஷன் என்ன செய்யக்கூடுமென பயப்படாமல் எனக்காக எப்போதும் உனது வாயைத்திறப்பாயாக. ஆமென்.