வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42


பாகம் 42

பிப்ருவரி 9 மற்றும் 23, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக இரண்டு பாகங்களாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். வசனங்கள் 1முதல் 72வரை முதல் பாகத்தில் அடங்கியிருக்கின்றன. பன்னிரண்டு மூப்பர்களின் முன்பாகவும், ஒஹாயோவில் பிரமாணம் கொடுக்கப்படுமென்று முன்பு கர்த்தரால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலிலும் இது பெறப்பட்டது (பாகம் 38:32 பார்க்கவும்). வசனங்கள் 73 முதல் 93வரை இரண்டாம் பாகத்தில் அடங்கியிருக்கின்றன. “சபையின் பிரமாணத்தை தழுவுதல்” என தீர்க்கதரிசி இந்த வெளிப்படுத்தலைக் குறிப்பிடுகிறார்.

1–10, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், மனமாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும், சபையைக் கட்டவும், மூப்பர்கள் அழைக்கப்பட்டார்கள்; 11–12, அவர்கள் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, வேதங்களில் காணப்படுகிற சுவிசேஷத்தின் கொள்கைகளைப் போதிக்கவேண்டும்; 13–17, ஆவியின் வல்லமையால் அவர்கள் போதித்து தீர்க்கதரிசனமுரைக்கவேண்டும்; 18–29, கொலை செய்யாதிருக்கவும், களவு செய்யாமலிருக்கவும், பொய் சொல்லாமலிருக்கவும், இச்சியாதிருக்கவும், விபசாரம் செய்யாதிருக்கவும், அல்லது மற்றவர்களுக்கு எதிராக தீங்கு பேசாதிருக்கவும், பரிசுத்தவான்கள் கட்டளையிடப்பட்டார்கள்; 30–39, சொத்துக்களை நேர்ச்சை செய்வதற்கான பிரமாணம் ஏற்படுத்தப்பட்டது. நிர்வகித்தலின் பிரமாணங்கள் அமைக்கப்பட்டது; 40–42, பெருமையும் சோம்பேறித்தனமும் கண்டனம் செய்யப்பட்டது; 43–52, நிர்வகித்தலின் மூலமாகவும் விசுவாசத்தாலும் வியாதியஸ்தர்கள் குணமாக்கப்படவேண்டும்; 53–60, வேதங்கள் சபையை ஆளுகை செய்கின்றன, மேலும் உலகத்திற்கு பிரகடனப்படுத்தப்பட வேண்டும்; 61–69, புதிய எருசலேமின் இடமும் ராஜ்யத்தின் இரகசியங்களும் வெளிப்படுத்தப்படும்; 70–73, சபை அலுவலர்களை ஆதரிக்க நேர்ச்சை செய்யப்பட்ட சொத்துக்கள் பயன்படுத்தப்படவேண்டும்; 74–93, வேசித்தனம், விபச்சாரம், கொலை செய்தல், களவு செய்தல் மற்றும் பாவங்களுக்காக மனஸ்தாபப்படுதலை கட்டுப்படுத்தும் பிரமாணங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1 உலகத்தின் இரட்சகரான ஜீவிக்கிற தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகிய எனது நாமத்தில் கூடிச்சேர்ந்திருக்கிற எனது சபையின் மூப்பர்களே கேளுங்கள்; இயன்றவரை எனது நாமத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்து எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.

2 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பிரமாணத்திற்கு செவிகொடுத்து, கேட்டு கீழ்ப்படியுங்கள்.

3 ஏனெனில் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளையின்படி நீங்கள் ஒன்றுகூடி இந்த ஒரு காரியத்தைக் குறித்து ஒருமனப்பட்டு எனது நாமத்தில் பிதாவைக் கேட்டதினால் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

4 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரர்களான ஜோசப் ஸ்மித் இளையவர் மற்றும் சிட்னி ரிக்டனைத் தவிர நீங்கள் ஒவ்வொருவரும் எனது நாமத்தில் போகவேண்டுமென்கிற இந்த முதல் கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

5 கொஞ்ச காலத்திற்கு அவர்கள் போகவேண்டுமென்ற ஒரு கட்டளையை நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன், அவர்கள் எப்போது திரும்பிவர வேண்டுமென்பது ஆவியின் வல்லமையால் கொடுக்கப்படும்.

6 எனது ஆவியின் வல்லமையால் நீங்கள், தேவதூதர்களைப்போல எனது வார்த்தையை அறிவிப்பதில் ஒரு எக்காளச் சத்தத்தைப்போல உங்கள் குரலை உயர்த்தி, எனது நாமத்தில் இருவர் இருவராக எனது சுவிசேஷத்தைப் பிரசங்கித்துச் செல்லுங்கள்.

7 நீங்கள் போய் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்துச் சொல்லுங்கள்: மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள், ஏனெனில் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.

8 இந்த இடத்திலிருந்து மேற்கு எல்லைகளுக்கு நீங்கள் போகவேண்டும்; நீங்கள் எவ்வளவாய் உங்களை ஏற்றுக் கொள்பவர்களை கண்டுபிடிக்கிறீர்களோ அவ்வளவாய் ஒவ்வொரு இடத்திலும்,

9 நீங்கள் எனது ஜனமாகவும் நான் உங்கள் தேவனாகவும் இருக்கும்படியாக ஏக ஜனமாகக் கூடிவரும்படியாக, எப்போது புதிய எருசலேம் ஆயத்தப்படுத்தப்படும் என உன்னதத்திலிருந்து அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும் காலம் வரும்வரை எனது சபையை நீங்கள் கட்டுவீர்களாக.

10 மீண்டும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ் நான் நியமித்த அலுவலிலேயே நிலைத்திருப்பானாக. அப்படியாக, அவன் மீறுதல் செய்தால் அவனுக்குப்பதிலாக மற்றொருவன் நியமிக்கப்படுவான். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

11 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அதிகாரமுள்ள ஒருவரால் நியமிக்கப்பட்டு அவனுக்கு அதிகாரமுண்டென சபை அறிந்தும் சபைத்தலைவர்களால் வழக்கப்படி நியமிக்கப்பட்டாலொழிய, போய் என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க, அல்லது என்னுடைய சபையைக்கட்ட யாரும் அனுமதிக்கப்படமாட்டாது.

12 மீண்டும், வேதாகமத்திலும், சுவிசேஷத்தின் பரிபூரணமான மார்மன் புஸ்தகத்திலுமுள்ள எனது சுவிசேஷத்தின் கொள்கைகளை இந்த சபையின் மூப்பர்களும், ஆசாரியர்களும், ஆசிரியர்களும் போதிப்பார்களாக.

13 அவைகளைச் செய்ய உடன்படிக்கைகளையும் சபை பிரமாணங்களையும் அவர்கள் கடைபிடிப்பார்களாக, ஆவியால் அவர்கள் வழிநடத்தப்படுகிறதைப்போல இது அவர்களின் போதனைகளாயிருப்பதாக.

14 விசுவாசத்தின் ஜெபத்தால் ஆவி உங்களுக்குக் கொடுக்கப்படும்; ஆவியை நீங்கள் பெறாவிட்டால் நீங்கள் போதிக்காதிருப்பீர்களாக.

15 என்னுடைய வேதங்களின் பரிபூரணம் கொடுக்கப்படும்வரை உங்களுடைய போதனையைக் குறித்து நான் கட்டளையிட்டபடி இவை எல்லாவற்றையும் நீங்கள் கடைபிடிப்பீர்களாக.

16 தேற்றரவாளனால் உங்கள் குரலை நீங்கள் உயர்த்தும்போது, எனக்கு நன்மையாகத் தோன்றுகிறவற்றை நீங்கள் பேசி தீர்க்கதரிசனமுரைப்பீர்களாக;

17 ஏனெனில், இதோ, சகலவற்றையும் தேற்றரவாளன் அறிந்திருக்கிறார், பிதாவையும் குமாரனையும் குறித்து சாட்சி கொடுக்கிறார்.

18 இப்பொழுது, இதோ, சபையிடம் நான் பேசுகிறேன்.கொலை செய்யாதிருப்பீர்களாக; கொலை செய்கிறவன் இந்த உலகத்திலும் வரப்போகிற உலகத்திலும் மன்னிப்படையமாட்டான்.

19 மீண்டும் நான் சொல்லுகிறேன், கொலை செய்யாதிருப்பீர்களாக; ஆனால் கொலை செய்கிறவன் மரிப்பான்.

20 களவு செய்யாதிருப்பீர்களாக; களவுசெய்து மனந்திரும்பாதவன் புறம்பே தள்ளப்படுவான்.

21 பொய் சொல்லாதிருப்பீர்களாக; பொய் சொல்லி, மனந்திரும்பாதவன் புறம்பே தள்ளப்படுவான்.

22 உங்கள் முழுஇருதயத்தோடும் உங்கள் மனைவிமீது அன்பு செலுத்துவீர்களாக, அவளோடு இசைந்திருப்பீர்களாக, வேறுயாருடனுமல்ல.

23 ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிறவன் விசுவாசத்தை மறுதலிப்பான், ஆவியைக் கொண்டிருக்கமாட்டான்; மனந்திரும்பாதவன் புறம்பே தள்ளப்படுவான்.

24 விபசாரஞ் செய்யாதிருப்பீர்களாக; விபசாரஞ் செய்து மனந்திரும்பாதவன் புறம்பே தள்ளப்படுவான்.

25 ஆனால் விபசாரஞ் செய்தவன் அவனுடைய முழு இருதயத்தோடும் மனந்திரும்பி, அதைக் கைவிட்டு, இனியும் அதைச் செய்யாவிட்டால் நீங்கள் மன்னிப்பீர்களாக;

26 ஆனால் அதை மீண்டும் அவன் செய்தால் அவன் மன்னிக்கப்படமாட்டான் ஆனால், புறம்பே தள்ளப்படுவான்.

27 உங்கள் அயலானைப்பற்றி நீங்கள் தீமை பேசவோ, அவனுக்கு எந்த பொல்லாங்கோ செய்யாதிருப்பீர்களாக.

28 என்னுடைய வேதங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த காரியங்களைக் குறித்த எனது பிரமாணங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; பாவம் செய்து மனந்திரும்பாதவன் புறம்பே தள்ளப்படுவான்.

29 நீங்கள் என்னை நேசிப்பீர்களானால், எனக்கு பணிவிடை செய்து எனது கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொள்வீர்களாக.

30 இதோ, நீங்கள் தரித்திரரை நினைவுகூர்ந்து அவர்களை ஆதரிக்கும்படியாக உங்கள் ஆஸ்திகளை நேர்ச்சை செய்து, மீறப்பட முடியாத ஒரு உடன்படிக்கையுடனும் ஒரு ஒப்பந்தத்துடனும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கவேண்டும்.

31 உங்கள் பொருட்களை தரித்திரருக்கு எவ்வளவாய் நீங்கள் கொடுக்கிறீர்களோ, அதையே எனக்கு நீங்கள் செய்கிறீர்கள்; எனது சபையின் ஆயருக்கு, அவரது ஆலோசகருக்கு, மூப்பர்களில் இரண்டு பேர், அல்லது அவர் நியமிக்கிற அல்லது நியமித்து அந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பிரதான ஆசாரியர்களின் முன்பாக அவைகள் வைக்கப்படுவதாக.

32 எனது சபையின் ஆயர் முன்பாக அவைகள் வைக்கப்பட்ட பின்பு எனது சபையின் சொத்துக்களை நேர்ச்சை செய்வதைப்பற்றிய இந்த சாட்சிகளை அவன் பெற்றபின்பு, எனது கட்டளைகளுக்கு ஏற்றபடி அவைகள் சபையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட முடியாதென்று ஒவ்வொரு மனுஷனும் அவனது சொத்துக்கு உக்கிராணக்காரனாக அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் எவ்வளவு போதுமானதோ அதை நேர்ச்சை செய்து பெற்றதற்கு என்னிடத்தில் பொறுப்பேற்க வேண்டும்.

33 மீண்டும், சபையின் கைவசத்திலோ, சபையிடமோ அல்லது தனிப்பட்டவர்களிடத்திலோ சொத்துக்களிருந்தால் இந்த முதல் நேர்ச்சை செய்தலுக்குப் பின்னர் தங்களின் ஆதரவுக்கு அவசியமானதற்கு அதிகமாக இருப்பது ஆயரிடம் நேர்ச்சை கொடுக்கப்படவேண்டும், தேவையிலிருக்கும் ஒவ்வொரு மனுஷனுக்கும் நிறைவாகக் கொடுக்கப்படவும் அவனது தேவைகளுக்குத் தகுந்தாற்போல பெற்றுக்கொள்ளவும், இல்லாதவர்களுக்கு அவ்வப்போது கொடுக்கப்பட அது பாதுகாக்கப்படவேண்டும்.

34 ஆகவே, சபையின் பிரதான ஆலோசனைக் குழுவாலும், ஆயர் மற்றும் அவரது ஆலோசனைக் குழுவாலும் நியமிக்கப்பட்டபடி தரித்திரருக்கும் தேவையிலிருப்போருக்கும் கொடுக்க, மீதியானவைகள் எனது பண்டசாலையில் வைக்கப்படவேண்டும்;

35 சபையின் பொது நன்மைக்காக நிலங்களை வாங்கும் நோக்கத்துக்காக, ஆராதனைக்கான கூடங்களை கட்டுவதற்கான, இப்போதிலிருந்து வெளிப்படுத்தப்படப் போகிற புதிய எருசலேமைக் கட்டுவதற்கான நோக்கத்திற்காகவும்,

36 நான் எனது ஆலயத்திற்கு வருகிற அந்த நாளில் எனது உடன்படிக்கையின் ஜனங்கள் ஏகஜனமாக கூடிவரும்படியாகவும், என்னுடைய ஜனங்களின் இரட்சிப்பிற்காக நான் இதைச் செய்கிறேன்.

37 பாவஞ்செய்து மனந்திரும்பாதவன் சபையிலிருந்து புறம்பே தள்ளப்படுவான், எனது சபையிலுள்ள தரித்திரருக்கும் தேவையிலுள்ளோருக்கும் அல்லது, வேறு வார்த்தைகளில் எனில் எனக்காக நேர்ச்சை செய்யப்பட்டதை அவன் மீண்டும் பெறமாட்டான்,

38 ஏனெனில் மிகவும் சிறியவரான இவர்களுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்கிறீர்கள்.

39 எனது தீர்க்கதரிசிகளின் வாய்களால் நான் பேசியவை நிறைவேறும்; ஏனெனில், புறஜாதியாருக்கு மத்தியில் எனது சுவிசேஷத்தை தழுவிக்கொண்ட இஸ்ரவேல் வீட்டாரின் தரித்திரருக்கு ஐஸ்வரியங்களை நான் நேர்ச்சை பண்ணுவேன்.

40 மீண்டும், உங்கள் இருதயங்களில் பெருமை பாராட்டாதிருப்பீர்களாக; உங்கள் வஸ்திரங்கள் யாவும் சுத்தமாயிருப்பதாக, அவைகளின் அழகு உங்கள் சொந்த கைகளின் கிரியையின் அழகாயிருக்கும்;

41 எனக்கு முன்பாக சகல காரியங்களும் சுத்தமாகச் செய்யப்படுவதாக.

42 நீங்கள் சோம்பேறியாக இருக்காதிருப்பீர்களாக; ஏனெனில் சோம்பேறியாயிருக்கிறவன் பிரயாசப்படுகிறவர்களின் அப்பத்தை உண்ணாமலும் அல்லது வஸ்திரங்களை உடுத்தாமலும் இருப்பானாக.

43 உங்களுக்கு மத்தியில் வியாதியாயிருக்கிறவன் யாராயிருந்தாலும், குணமாக்கப்பட விசுவாசமில்லாதவனாயிருந்து, ஆனால் நம்புகிறவன் மென்மையாக, மூலிகைகள் மற்றும் மிருதுவான உணவுடன் போஷிக்கப்படவேண்டும். ஒரு சத்துருவின் கையினால் அல்ல.

44 இரண்டு அல்லது அதிகமான சபையின் மூப்பர்கள் அழைக்கப்பட்டு, ஜெபித்து எனது நாமத்தில் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும்; அவர்கள் மரித்தால் எனக்கென்று அவர்கள் மரிப்பார்கள், அவர்கள் ஜீவித்தால் எனக்கென்று ஜீவிப்பார்கள்.

45 மரித்தவர்களுக்காக, விசேஷமாக ஒரு மகிமையான உயிர்த்தெழுதலில் நம்பிக்கை அற்றவர்களாக மரித்தவர்களின் இழப்பிற்காக நீங்கள் அழத்தக்கதாக அன்பில் நீங்கள் ஒன்றுசேர்ந்து வாழவேண்டும்.

46 மேலும், என்னில் மரிப்பவர்கள் மரணத்தை ருசிப்பதில்லை, ஏனெனில் அது அவர்களுக்கு இனிமையாயிருக்கும்;

47 என்னில் மரிக்காதவர்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்களின் மரணம் கசப்பாயிருக்கிறது.

48 மீண்டும், குணமாக்கப்பட என்னில் விசுவாசமுள்ளவன், மரணத்திற்கு குறிக்கப்படாதவன், குணமாக்கப்படுவான்.

49 பார்வையடைய விசுவாசமுள்ளவன் பார்வையடைவான்.

50 கேட்க விசுவாசமுள்ளவன் கேட்பான்.

51 குதிக்க விசுவாசமுள்ள முடவன் குதிப்பான்.

52 இந்தக் காரியங்களைச் செய்ய விசுவாசமில்லாதிருந்து ஆனால் என்னில் நம்பிக்கையுள்ளவர்கள் எனது குமாரர்களாக அதிகாரம் கொண்டிருக்கிறார்கள்; எனது பிரமாணங்களை எவ்வளவாய் அவர்கள் மீறாதிருக்கிறார்களோ அவ்வளவாய் நீங்கள் அவர்களது பெலவீனங்களை சகித்திருப்பீர்கள்.

53 உங்களுடைய உக்கிராணத்தின் இடத்தில் நீங்கள் நிற்பீர்கள்.

54 உங்களுடைய சகோதரனின் வஸ்திரத்தை எடுக்காதிருப்பீர்களாக; உங்களுடைய சகோதரனிடமிருந்து பெற்றுக்கொண்டதை நீங்கள் கொடுப்பீர்களாக.

55 உங்களின் ஆதரவிற்கும் அதிகமானவற்றை நீங்கள் பெற்றால், சகல காரியங்களும் நான் சொன்னபடி செய்யப்படும்படியாக, அதை நீங்கள் எனது பண்டசாலைக்கு கொடுப்பீர்களாக.

56 நீங்கள் கேட்பீர்கள், நான் நியமிக்கிறபடி எனது வசனங்கள் கொடுக்கப்படும், அவைகள் பாதுகாப்பில் வைக்கப்படவேண்டும்;

57 அவைகளைப் பொறுத்தமட்டில் நீங்கள் சமாதானமாயிருக்க வேண்டுமென்பது அவசியமாயிருக்கிறது, அவைகளைப் பரிபூரணமாக நீங்கள் பெற்றுக்கொள்ளும்வரை அவைகளைப் போதிக்காதிருப்பீர்களாக.

58 பின்னர் சகல மனுஷருக்கும் நீங்கள் போதிக்கவேண்டுமென்ற ஒரு கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; ஏனெனில், சகல தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் அவை போதிக்கப்படவேண்டும்.

59 எனது சபையை நிர்வகிக்க பிரமாணமாயிருக்க, பிரமாணங்களாக எனது வேதங்களில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டு நீங்கள் பெற்றுக்கொண்டவற்றை எடுத்துக்கொள்ளுவீர்களாக;

60 இந்தக் காரியங்களின்படி செய்கிறவன் இரட்சிக்கப்படுவான், அவைகளை செய்யாதிருக்கிறவன் தொடர்ந்து செய்யாதிருந்தால் அவன் ஆக்கினைக்குள்ளாவான்.

61 நீங்கள் கேட்டால், இரகசியங்களையும் சமாதானத்துக்குரிய காரியங்களையும் நீங்கள் அறியத்தக்கதாக, சந்தோஷத்தைக் கொண்டுவருகிற, நித்திய ஜீவனைக் கொண்டுவருகிற வெளிப்படுத்தலுக்கு மேல் வெளிப்படுத்தலும், புத்திக்கு மேல் புத்தியும் நீங்கள் பெறுவீர்கள்.

62 புதிய எருசலேம் எங்கே கட்டப்படுமென நீங்கள் கேட்பீர்கள், என்னுடைய சொந்த ஏற்ற காலத்திலே அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

63 இதோ, எனது ஊழியக்காரர்கள் கிழக்கேயும் மேற்கேயும் வடக்கேயும் தெற்கேயும் அனுப்பப்படுவார்கள்.

64 இப்போதும்கூட, கிழக்கே போகிறவன் அவர்கள் மனம் மாறி மேற்கே ஓடத்தக்கதாக அவர்களுக்குப் போதிக்கக்கடவன், இது பூமியின்மேல் வருகிறவை மற்றும் இரகசிய சங்கங்களின் விளைவாகும்.

65 இதோ, இந்தக் காரியங்கள் அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பீர்களாக, உங்களின் பலன் பெரிதாயிருக்கும், ஏனெனில், ராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ள உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவைகளைப்பற்றி அறிந்துகொள்ள உலகத்தாருக்கு கொடுக்கப்படவில்லை.

66 நீங்கள் பெற்றுக்கொண்ட பிரமாணங்களை நீங்கள் கடைபிடித்து விசுவாசத்தோடிருப்பீர்களாக.

67 இங்கேயும் புதிய எருசலேமிலும் உங்களை நிலைப்படுத்திக்கொள்ள போதுமானதாயிருக்கும்படியாக இப்போதிலிருந்து சபை உடன்படிக்கைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

68 ஆகவே, ஞானத்தில் குறைவுள்ளவன், என்னிடத்தில் கேட்கக்கடவன், அவனுக்கு சம்பூரணமாய்க் கொடுப்பேன், அவனைக் கடிந்து கொள்ளமாட்டேன்.

69 உங்கள் இருதயங்களை உயர்த்துங்கள், களிகூருங்கள், ஏனெனில் உங்களுக்கு ராஜ்யம் அல்லது வேறு வார்த்தைகளில் எனில், சபையின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

70 ஆசாரியர்களும் ஆசிரியர்களும் சபையாரைப்போலவே அவர்களின் உக்கிராணத்துவத்தைக் கொண்டிருப்பார்கள்.

71 முன்பு குறிக்கப்பட்டதைப்போல, தரித்திரர்களின் நன்மைக்காக மற்றும் பிற நோக்கங்களுக்காக ஆயரிடம் நேர்ச்சை செய்யப்பட்ட சொத்திலிருந்து, சகல காரியங்களிலும் ஆயருக்கு ஆலோசகர்களாக உதவி புரிய நியமிக்கப்பட்டிருக்கிற மூப்பர்கள் அல்லது பிரதான ஆசாரியர்கள் தங்களின் குடும்பங்களை ஆதரிப்பார்களாக;

72 அல்லது அவர்களின் சகல சேவைகளுக்கும் ஒரு உக்கிராணத்துவத்திற்காக அல்லது ஆலோசகர்களாலும் ஆயராலும் சிறந்ததென நினைத்த அல்லது தீர்மானிக்கப்பட்ட ஒரு நியாயமான சம்பளத்தை அவர்கள் பெறவேண்டும்.

73 ஆயரும்கூட அவரது ஆதரவை, அல்லது சபையில் அவரது சகல சேவைகளுக்கும் ஒரு நியாயமான சம்பளத்தைப் பெறுவாராக.

74 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுக்கு மத்தியில் யாராயிருந்தாலும் வேசித்தனத்திற்காக தங்களின் துணையை விட்டுப்போகிறவர்கள் அல்லது வேறு வார்த்தைகளில் எனில் முழு இருதயத் தாழ்மையோடு உங்களுக்கு முன்பாக இப்படிப்பட்ட பிரச்சினையுள்ளது என அவர்கள் சாட்சியளித்தால், உங்களுக்கு மத்தியிலிருந்து அவர்களை புறம்பே தள்ளாதிருப்பீர்களாக;

75 ஆனால், விபசாரத்திற்காக எவரேனும் தங்கள் துணைகளை விட்டுப்போனதை நீங்கள் கண்டுபிடித்தீர்களானால், அவர்களே அவர்களுக்கு குற்றவாளிகளாகி, அவர்களின் துணைகள் பிழைத்திருந்தால் உங்களுக்கு மத்தியிலிருந்து அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்களாக.

76 மீண்டும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களுக்குத் திருமணமாகியிருந்தால் இப்படிப்பட்ட யாரையும் உங்களுக்கு மத்தியிலே நீங்கள் ஏற்றுக்கொள்ளாதிருக்க முழு விசாரிப்புடன் நீங்கள் எச்சரிக்கையாயும் கவனமாயுமிருக்க வேண்டும்;

77 அவர்கள் திருமணமாகாதவர்களாயிருந்தால், அவர்களின் பாவங்கள் அனைத்திற்காகவும் அவர்கள் மனந்திரும்பவேண்டும் அல்லது அவர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதிருப்பீர்களாக.

78 மீண்டும், கிறிஸ்துவின் இந்த சபைக்கு சொந்தமான யாவரும் சபையின் கட்டளைகள் மற்றும் உடன்படிக்கைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டு கடைபிடிப்பீர்களாக.

79 அப்படியாக, உங்களுக்கு மத்தியில் யாராவது கொலை செய்தவனிருந்தால் அவர்கள் ஒப்படைக்கப்பட்டு தேசத்தின் சட்டத்தின்படி கையாளப்படுவார்கள்; ஏனெனில் அவனுக்கு மன்னிப்பில்லை என்பதை நினைவுகூருங்கள்; அது தேசத்தின் சட்டத்தின்படி விசாரிக்கப்படுவதாக.

80 எந்த ஆணாவது பெண்ணாவது விபசாரத்தில் ஈடுபட்டிருந்தால், சபையின் இரண்டு அல்லது அதற்கதிகமான மூப்பர்களுக்கு முன்னால் அவன் அல்லது அவள் விசாரிக்கப்படுவார்களாக, சத்துருவினால் அல்ல; அவன் அல்லது அவளுக்கு விரோதமான ஒவ்வொரு வார்த்தையும் சபையின் இரண்டு சாட்சிகளால் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு சாட்சிகளுக்கு மேலிருந்தால் மிக நல்லது.

81 ஆனால் அவன் அல்லது அவள் இரண்டு சாட்சிகளின் வாயால் குற்றவாளிகளாக தீர்க்கப்படுவார்களாக; மூப்பர்கள் வழக்கை சபைக்கு முன்னால் வைப்பார்களாக, அவர்கள் தேவனின் பிரமாணத்தின்படி கையாளப்பட அவன் அல்லது அவளுக்கு எதிராக சபையார் தங்களின் கைகளை உயர்த்துவார்களாக.

82 முடியுமானால், ஆயர் உடனிருப்பதுவும் அவசியமாயிருக்கிறது.

83 அப்படியாக, உங்களுக்கு முன் வருகிற எல்லா வழக்குகளையும் நீங்கள் தீர்ப்பீர்களாக.

84 ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருடினால் அவன் அல்லது அவள் தேசத்தின் சட்டத்திற்கு முன்பாக ஒப்படைக்கப்படுவார்களாக.

85 அவன் அல்லது அவள் களவு செய்தால் அவனோ அல்லது அவளோ தேசத்தின் சட்டத்திற்கு முன்பாக ஒப்படைக்கப்படுவார்களாக.

86 அவனோ அல்லது அவளோ பொய் சொன்னால், அவனோ அல்லது அவளோ தேசத்தின் சட்டத்திற்கு முன்பாக ஒப்படைக்கப்படுவார்களாக.

87 அவனோ அல்லது அவளோ எந்த வகையிலும் அக்கிரமத்தைச் செய்தால், அவனோ அல்லது அவளோ தேசத்தின் சட்டத்திற்கும் தேவனின் பிரமாணத்திற்கும் முன்பாக ஒப்படைக்கப்படுவார்களாக.

88 உங்களின் சகோதரன் அல்லது சகோதரி உங்களை குற்றவாளியாக தீர்த்தால் அவனுக்கும் அல்லது அவளுக்குமிடையில் நீங்கள் தனியாக அவனை அல்லது அவளை சந்திப்பீர்களாக; அவன் அல்லது அவள் அறிக்கையிட்டால் நீங்கள் ஒப்புரவாகுவீர்களாக.

89 அவன் அல்லது அவள் அறிக்கையிடாவிட்டால், அங்கத்தினர்களிடமல்ல, மூப்பர்களிடம், சபைக்கு முன்பாக அவனை அல்லது அவளை நீங்கள் ஒப்படைப்பீர்களாக. இது உலகத்தாருக்கு முன்பே அல்லாமல், ஒரு கூட்டத்தில் செய்யப்படவேண்டும்.

90 உங்களுடைய சகோதரன் அல்லது சகோதரி அநேகரை புண்படுத்தினால் அவன் அல்லது அவள் அநேகருக்கு முன்பாக தீர்க்கப்படுவார்களாக.

91 பகிரங்கமாக யாராவது புண்படுத்தினால் அவன் அல்லது அவள் வெட்கப்படும்படியாக அவன் அல்லது அவள் பகிரங்கமாக தண்டிக்கப்படுவார்களாக. அவன் அல்லது அவள் அறிக்கையிடாதிருந்தால், அவன் அல்லது அவள் தேவனின் பிரமாணத்திற்கு முன்பாக ஒப்படைக்கப்படுவார்களாக.

92 இரகசியமாக யாராவது புண்படுத்தினால், புண்படுத்தப்பட்ட அவன் அல்லது அவளுக்கு முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும் அவன் அல்லது அவள் இரகசியமாக அறிக்கையிட, அவன் அல்லது அவளைப்பற்றி சபை நிந்திக்கிறதற்கு இடமளிக்காதிருக்க, அவன் அல்லது அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்படியாக அவன் அல்லது அவள் இரகசியமாக கண்டிக்கப்படுவார்களாக.

93 அப்படியாக, சகல காரியங்களையும் நீங்கள் நடத்துவீர்களாக.