வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45


பாகம் 45

மார்ச் 7, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக சபைக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தல் குறித்த அவரது முன்னுரையில் ஜோசப் ஸ்மித்தின் வரலாறு கூறுவதாவது, “சபையின் இந்த ஆண்டில் பணியை ஆராய்வதிலிருந்தும், அல்லது இவ்விசுவாசத்தைத் தழுவுவதிலிருந்தும் ஜனங்களைத் தடுக்க அநேக பொய்யான அறிக்கைகளும், அறிவீனமான கதைகளும் வெளியிடப்பட்டு பரப்பப்பட்டன, ஆனால் பரிசுத்தவான்களின் சந்தோஷத்திற்காக பின்வருவனவற்றை நான் பெற்றேன்.”

1–5, பிதாவிடம் நமக்காக பரிந்து பேசுபவராய் கிறிஸ்து இருக்கிறார்; 6–10, சுவிசேஷம், கர்த்தருக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்தும் தூதுவனாயிருக்கிறது; 11–15, ஏனோக்கும் அவனது சகோதரரும் கர்த்தரால் அவரிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்; 16–23, ஒலிவ மலையில் கொடுக்கப்பட்டதைப்போல, அவரது வருகையைப்பற்றிய அடையாளங்களை கிறிஸ்து வெளிப்படுத்தினார்; 24–38, சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்படும், புறஜாதியாரின் காலங்கள் நிறைவேறும், பாழாக்கும் நோய் தேசத்தை நிரப்பும்; 39–47, இரண்டாவது வருகையில் அடையாளங்களும், அற்புதங்களும் உயிர்த்தெழுதலும் நடைபெறும்; 48–53, ஒலிவ மலை மேலே கிறிஸ்து நின்றுகொண்டிருப்பார், அவரது கைகளிலும் கால்களிலுமுள்ள தழும்புகளை யூதர்கள் காண்பார்கள்; 54–59, ஆயிரம் வருஷத்தில் கர்த்தர் ஆளுகை செய்வார்; 60–62, அதன் மூலமாக முக்கியமான தகவல் அறியப்படத்தக்கதாக புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க தீர்க்கதரிசி அறிவுறுத்தப்படுகிறார்; 63–75, சகல தேசங்களிலிருந்தும் ஜனங்கள் வரக்கூடிய புதிய எருசலேமைக் கட்ட பரிசுத்தவான்கள் கட்டளையிடப்படுகிறார்கள்.

1 ராஜ்யம் கொடுக்கப்பட்டிருக்கிற எனது சபையின் ஜனங்களே செவி கொடுங்கள், சொல்வதைக் கேளுங்கள்; பூமியின் அஸ்திபாரத்தைப் போட்டவரும், வானங்களையும் அதன் சகல சேனைகளையும் உண்டாக்கியவரும், ஜீவிக்கிறதும், நகர்கிறதும், ஜீவனோடிருக்கிற சகலவற்றையும் உண்டாக்கினவருக்கு செவி கொடுத்து கேளுங்கள்.

2 மீண்டும் நான் சொல்லுகிறேன், என் குரலுக்குச் செவிகொடுங்கள், இல்லையேல் மரணம் உங்களை முந்திக்கொள்ளும். நீங்கள் நினைத்திராத வேளையில் கோடை கடந்துபோம், அறுவடை முடிந்துபோம், உங்கள் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படாது.

3 அவருக்கு முன்பாக உங்களுக்காக வேண்டிக்கொண்டிருக்கிற பிதாவிடம் பரிந்து பேசுகிற அவர் சொல்வதைக் கவனியுங்கள்,

4 அவர் சொல்லுகிறார்: பிதாவே, நீர் பிரியமாயிருந்த, பாவம் செய்யாத அவரின் பாடுகளையும் மரணத்தையும் பாரும்; சிந்தப்பட்ட உமது குமாரனின் இரத்தத்தை, நீர் மகிமையடையும்படியாக நீர் கொடுத்த அவரது இரத்தத்தைப் பாரும்;

5 ஆகவே, பிதாவே, அவர்கள் என்னிடத்திற்கு வந்து நித்திய ஜீவனை அடையும்படியாக எனது நாமத்தில் நம்பிக்கையுள்ள எனது இந்த சகோதரர்களை தப்பவிடும்.

6 எனது சபையின் ஜனங்களே கேளுங்கள், மூப்பர்களாகிய நீங்களும் ஒன்றாய்க் கவனியுங்கள், இன்று கூப்பிடும்போது, எனது சத்தத்தைக் கேளுங்கள், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதேயுங்கள்;

7 ஏனெனில் நானே அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், இருளானது அதை விளங்கிக்கொள்ளாத, இருளில் பிரகாசிக்கிற ஒளியான, உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன், என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

8 நானே எனக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தேன், எனக்கு சொந்தமானவர்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் எவ்வளவு பேர் என்னை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அநேக அற்புதங்களைச் செய்யவும் தேவகுமாரர்களாகும்படியும் நான் அதிகாரம் கொடுத்தேன்; எனது நாமத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நித்திய ஜீவனைப் பெறும்படிக்கும் நான் அதிகாரமளித்தேன்.

9 ஆகவே உலகத்திற்கு ஒளியாயிருக்கும்படியாகவும், எனது ஜனங்களுக்கு அடையாளமாக இருக்கவும், புறஜாதியார் அதை நாடவும், எனக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்த எனது முகத்திற்கு முன்பாக ஒரு தூதனாயிருக்கவும், என்னுடைய நித்திய உடன்படிக்கையை உலகத்திற்குள் அனுப்பினேன்.

10 ஆகவே, அதனிடத்திற்கு நீங்கள் வாருங்கள், வருபவரிடம் பூர்வ நாட்களில் மனுஷர்களுக்கு புத்தி சொன்னதைப்போலவே எனது பெலத்த புத்திமதியை உங்களுக்குக் கொடுப்பேன்.

11 ஆகவே, நீங்கள் ஒன்றுசேர்ந்து கேளுங்கள், எனது ஞானத்தை நான் உங்களுக்குக் காட்டுகிறேன், ஏனோக்கு மற்றும் அவனது சகோதரரின் தேவனென்று நீங்கள் சொல்லுகிற அவரது ஞானம்,

12 பூமியிலிருந்து பிரிக்கப்பட்டு, என்னிடத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், துன்மார்க்கத்தாலும் அருவருப்புகளாலும் அவர்கள் அதைக் கண்டுபிடிக்காத, சகல பரிசுத்த மனுஷர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட நாளான நீதியின் நாள் வரும்வரை காக்கப்பட்டிருக்கும் ஒரு பட்டணம்;

13 தாங்கள் பூமியின் மேல் அந்நியரும் பரதேசிகளும் என்று அவர்கள் அறிக்கையிட்டார்கள்;

14 ஆனால், தங்கள் மாம்சத்தில் அதை அவர்கள் கண்டுபிடித்து அதைப் பார்க்கவேண்டுமென்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றார்கள்.

15 ஆகவே, கேளுங்கள், பூர்வ கால மனுஷர்களைப்போல நான் உங்களுக்குப் புத்திசொல்லி நான் உங்களோடு பேசி தீர்க்கதரிசனமுரைப்பேன்.

16 உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வானத்தின் மேகங்களில் எனது மகிமையில் நான் வருகிற நாளில் எனது வருகையின் அடையாளங்களைக் குறித்து என்னிடம் நீங்கள் கேட்டதினால் எனது சீஷர்களுக்கு முன்பாக மாம்ச சரீரத்தில் நான் நின்று அவர்களிடம் பேசியதைப்போல அதை நான் வெளிப்படையாகக் காண்பிப்பேன்,

17 ஏனெனில் உங்கள் சரீரங்களில் உங்கள் ஆவிகள் நீண்ட நாட்கள் இல்லாததை நீங்கள் அடிமைத்தனம் என நினைத்ததால், மீட்பின் நாள் எவ்வாறு வருமென்பதையும், சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேல் திரும்ப கூட்டிச் சேர்க்கப்படுதலையும் நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.

18 இப்பொழுது, தேவனின் வீடு என நீங்கள் அழைக்கிற, இந்த வீடு ஒருபோதும் விழாது என உங்கள் சத்துருக்கள் சொல்லுகிற எருசலேமிலுள்ள இந்த ஆலயத்தை நீங்கள் காணுங்கள்.

19 ஆனால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இரவில் ஒரு திருடனைப்போல இந்த சந்ததிக்குள்ளே பாழ்க்கடிப்பு வரும், இந்த ஜனங்கள் அழிக்கப்பட்டு சகல ஜாதிகளுக்கு மத்தியில் சிதறடிக்கப்படுவார்கள்.

20 இப்பொழுது நீங்கள் காண்கிற இந்த ஆலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்.

21 மேலும், அவர்களைக் குறித்து நான் உங்களுக்குக் கூறிய எல்லா பாழ்க்கடிப்பும் வரும்வரை யூதரின் இந்த சந்ததி கடந்து போகாது.

22 உலகத்தின் முடிவு வருகிறதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களென நீங்கள் சொல்லுகிறீர்கள்; வானமும் பூமியும்கூட கடந்துபோகுமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களென்றும் நீங்கள் சொல்லுகிறீர்கள்;

23 இதை நீங்கள் மெய்யாகவே சொல்லுகிறீர்கள்; ஏனெனில் அது அப்படியேதான்; ஆனால் சகலமும் நிறைவேறுமட்டும் நான் உங்களுக்குக் கூறிய இந்தக் காரியங்கள் கடந்துபோகாது.

24 எருசலேமைக் குறித்து இதை நான் உங்களுக்குக் கூறினேன்; அந்த நாள் வரும்போது, மீதியானவர்கள் சகல ஜாதிகளுக்கும் மத்தியில் சிதறடிக்கப்படுவார்கள்;

25 ஆனால் அவர்கள் மீண்டும் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்; ஆனால் புறஜாதியாரின் காலங்கள் நிறைவேறும்வரை அவர்கள் அங்கிருப்பார்கள்.

26 அந்த நாளில் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய வதந்திகளையும் குறித்துக் கேள்விப்படுவீர்கள், பூமி முழுவதும் குழப்பத்திலிருக்கும், மனுஷர்களுடைய இருதயங்கள் சோர்ந்துபோகும், பூமியின் முடிவு மட்டும் கிறிஸ்து அவரது வருகையைத் தாமதப்படுத்துகிறார் என அவர்கள் சொல்வார்கள்.

27 மனுஷர்களுடைய அன்பு தணிந்துபோகும், அக்கிரமம் மிகுதியாகும்.

28 புறஜாதியாரின் காலங்கள் வரும்போது, அவர்களுக்கு மத்தியிலே ஒரு வெளிச்சம் எழும்பி அது இருளிலே அமர்ந்திருக்கும், அதுவே என்னுடைய சுவிசேஷத்தின் பரிபூரணம்;

29 ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஒளியை உணராதிருப்பார்கள், மனுஷர்களின் கருத்துக்களினால் அவர்கள் தங்கள் இருதயங்களை என்னிடமிருந்து திருப்புகிறார்கள்.

30 அந்த சந்ததியில் புறஜாதியாரின் காலங்கள் நிறைவேற்றப்படும்.

31 அந்த சந்ததியில் அங்கே மனுஷர்கள் நின்றுகொண்டிருப்பார்கள், ஒரு வெள்ளமாய் புரண்டுவரும் வாதையை அவர்கள் காணும் மட்டும் அது கடந்துபோகாது, ஏனெனில் பாழ்க்கடிப்பின் வியாதி தேசத்தை மூடும்.

32 ஆனால் எனது சீஷர்கள் பரிசுத்த ஸ்தலங்களில் நின்றுகொண்டிருப்பார்கள், அசைக்கப்படமாட்டார்கள், ஆனால் துன்மார்க்கருக்கு மத்தியில் மனுஷர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி தேவனை சபித்து மரிப்பார்கள்.

33 பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும், அநேக பாழ்க்கடிப்புகளும் உண்டாகும்; ஆனாலும் எனக்கு விரோதமாக மனுஷர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துவார்கள், அவர்கள் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் பட்டயத்தை எடுப்பார்கள், அவர்கள் ஒருவரையொருவர் கொன்றுபோடுவார்கள்.

34 இப்பொழுது, எனது சீஷர்களிடத்தில் இந்த வார்த்தைகளை கர்த்தராகிய நான் பேசியபோது, அவர்கள் கலக்கமடைந்தார்கள்.

35 நான் அவர்களுக்குச் சொன்னேன்: நீங்கள் கலங்காதிருப்பீர்களாக, ஏனெனில் இந்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்போது உங்களோடு செய்யப்பட்ட வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படுமென்பதை நீங்கள் அறிவீர்கள்.

36 ஒளி எழுந்துவர ஆரம்பிக்கும்போது, நான் உங்களுக்குக் காட்டப்போகிற ஒரு உவமையைப்போல அது அவர்களோடிருக்கும்,

37 நீங்கள் அத்தி மரங்களைப் பாருங்கள், நீங்கள் உங்கள் கண்களால் அவைகளைப் பாருங்கள், அவைகள் துளிர்விட ஆரம்பிக்கும்போது நீங்கள் சொல்வீர்கள், அவைகளின் இலைகள் இன்னமும் தளிராயிருக்கிறது, கோடை காலம் சமீபித்திருக்கிறது;

38 இந்தக் காரியங்கள் அனைத்தையும் அவர்கள் காணும்போது அந்த நாளும் அப்படியே இருக்கும், காலம் சமீபித்திருக்கிறதென்பதை அப்போது அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

39 எனக்குப் பயப்படுகிறவன் கர்த்தரின் மகத்தான நாள் வருகிறதற்காக, மனுஷகுமாரனின் வருகையின் அடையாளங்களுக்காகவும் எதிர்பார்த்திருப்பான்.

40 அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பார்கள், ஏனெனில் மேலே வானத்திலேயும் கீழே பூமியிலேயும் அவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

41 அவர்கள் இரத்தம், அக்கினி, மற்றும் புகைமண்டலத்தையும் காண்பார்கள்.

42 கர்த்தரின் நாள் வருவதற்கு முன்பே சூரியன் இருளும், சந்திரன் இரத்தமாகும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.

43 மீதியானோர் இந்த இடத்தில் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்;

44 பின்னர் அவர்கள் என்னைத் தேடுவார்கள், இதோ நான் வருவேன்; வல்லமையுடனும் மகத்தான மகிமையோடும் வஸ்திரம் தரித்து சகல பரிசுத்த தூதர்களுடனும் வானத்தின் மேகங்களில் அவர்கள் என்னைக் காண்பார்கள். என்னைக் கவனியாதிருப்பவன் சங்கரிக்கப்படுவான்.

45 ஆனால் கர்த்தரின் கரம் விழுவதற்கு முன்பே ஒரு தூதன் தனது எக்காளத்தை ஊதுவான், நித்திரையடைந்த பரிசுத்தவான்கள் மேகத்தில் என்னை சந்திக்க வருவார்கள்.

46 ஆகவே, நீங்கள் சமாதானத்தில் நித்திரையடைந்தால் நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் இப்பொழுது நீங்கள் என்னைப் பார்த்து நானே என அறிவதுபோல, அப்படியே நீங்கள் என்னிடம் வருவீர்கள், உங்கள் ஆத்துமாக்கள் பிழைத்திருக்கும், உங்கள் மீட்பு பரிபூரணப்படும்; பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் பரிசுத்தவான்கள் வருவார்கள்.

47 பின்னர் கர்த்தரின் கரம் தேசங்களின்மேல் விழும்.

48 பின்னர் கர்த்தர் தனது பாதங்களை இந்த மலையின்மேல் வைப்பார், அது இரண்டாகப் பிளக்கும், பூமி நடுங்கி, அங்கும் இங்கும் புரளும், வானங்களும் அசையும்.

49 கர்த்தர் தனது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணுவார், கர்த்தர் தன் குரலில் பேசுவார், பூமியின் கடையாந்தரங்கள் யாவும் அதைக் கேட்கும்; பூமியின் ஜாதிகள் துக்கிக்கும், பரிகாசம் செய்தவர்கள் தங்கள் மதிகேட்டைக் காண்பார்கள்.

50 பரிகாசம் செய்கிறவனை ஆபத்து மூடும், பரிகாசம் செய்கிறவர்கள் சுட்டெரிக்கப்படுவார்கள்; அக்கிரமத்திற்காகக் காத்திருக்கிறவர்கள் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படுவார்கள்.

51 பின்னர் யூதர்கள் என்னை நோக்கிப் பார்த்து சொல்வார்கள்: உமது கைகளிலும் உமது பாதங்களிலுமுள்ள இந்த காயங்கள் ஏது?

52 பின்னர் நானே கர்த்தரென அவர்கள் அறிந்துகொள்வார்கள்? ஏனெனில் நான் அவர்களுக்குச் சொல்வேன்: இந்த காயங்கள் என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள். உயர்த்தப்பட்டவர் நானே. சிலுவையிலறையப்பட்ட இயேசு நானே. நானே தேவகுமாரன்.

53 அப்போது தங்கள் அக்கிரமங்களினிமித்தம் அவர்கள் அழுவார்கள். பின்னர் தங்கள் ராஜாவை துன்புறுத்தியதால் அவர்கள் துக்கிப்பார்கள்.

54 பின்னர் புறஜாதிகள் மீட்கப்படும், எந்த பிரமாணத்தையும் அறியாதவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவார்கள்; அது அவர்களுக்கு இலகுவாயிருக்கும்.

55 மனுபுத்திரர்களின் இருதயங்களில் சாத்தானுக்கு இடமில்லாதபடிக்கு அவன் கட்டப்படுவான்.

56 எனது மகிமையில் நான் வரும் அந்த நாளில், பத்து கன்னிகைகளைப்பற்றி நான் பேசிய உவமை நிறைவேற்றப்படும்.

57 ஏனெனில் புத்திமான்களும் சத்தியத்தைப் பெற்றவர்களும், அவர்களை வழிநடத்துவதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள், மற்றும் ஏமாற்றப்படாதவர்கள், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படமாட்டார்கள், ஆனால் அந்நாளில் இருப்பார்கள்.

58 ஒரு சுதந்தரமாக பூமி அவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் பலுகிப்பெருகி பலங்கொள்வார்கள், அவர்களின் பிள்ளைகள் இரட்சிப்படைய பாவமில்லாதவர்களாக வளர்வார்கள்.

59 ஏனெனில் கர்த்தர் அவர்களின் நடுவிலிருப்பார், அவருடைய மகிமை அவர்கள் மேலிருக்கும், அவர் அவர்களின் ராஜாவாயும் அவர்களின் பிரமாணத்தைக் கொடுப்பவராயுமிருப்பார்.

60 இப்பொழுது, இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், புதிய ஏற்பாடு மொழிபெயர்க்கப்படும்வரை இந்த அதிகாரத்தைக் குறித்த எந்த கூடுதலானவற்றையும் நீங்கள் அறிந்துகொள்ள அது உங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை, அதில் இந்த காரியங்கள் எல்லாமும் அறிவிக்கப்படும்;

61 ஆகவே, வரப்போகிற காரியங்களுக்காக நீ ஆயத்தமாயிருக்கும்படிக்கு, இதை இப்பொழுது நீ மொழிபெயர்க்க நான் உனக்குக் கொடுக்கிறேன்.

62 ஏனெனில் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மகத்தான காரியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன;

63 அந்நிய தேசங்களிலே நீங்கள் யுத்தங்களை கேள்விப்படுவீர்கள் ஆனால், இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவைகள் சமீபித்திருக்கிறது, உங்கள் நுழைவாயிலில் இருக்கிறது, இப்போதிலிருந்து பல வருஷங்கள் அல்ல, உங்கள் சொந்த தேசங்களில் நீங்கள் யுத்தங்களைப்பற்றி கேள்விப்படுவீர்கள்.

64 ஆகவே, கர்த்தராகிய நான் சொன்னேன், கிழக்கு தேசங்களிலிருந்து கூடிச் சேருங்கள், எனது சபையின் மூப்பர்களாகிய நீங்கள் ஒன்றுகூடுங்கள்; மேற்கு நாடுகளுக்கு போங்கள், மனந்திரும்ப குடிகளை அழையுங்கள், எவ்வளவாய் அவர்கள் மனந்திரும்புகிறார்களோ அவ்வளவாய் எனக்காக சபைகளைக் கட்டுங்கள்.

65 ஏக உள்ளத்திலும் ஏக சிந்தனையிலும் இப்போதிலிருந்து உங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கிற சுதந்தரத்தை வாங்க உங்கள் ஐஸ்வரியங்களை சேகரியுங்கள்.

66 புதிய எருசலேம், சமாதானத்தின் தேசம், அடைக்கலத்தின் பட்டணம், உன்னதத்தின் தேவனின் பரிசுத்தவான்களுக்கான ஒரு பாதுகாப்பான இடம் என அது அழைக்கப்படுவதாக;

67 கர்த்தரின் மகிமை அங்கே இருக்கும், கர்த்தரின் திகிலும் அங்கிருக்கும். துன்மார்க்கர் அங்கு வராதவரை அது சீயோன் என்றழைக்கப்படும்.

68 மேலும், துன்மார்க்கருக்கு மத்தியில், அவனது அயலானுக்கு எதிராக தனது பட்டயத்தை எடுக்காமலிருக்கிற ஒவ்வொரு மனுஷனும் பாதுகாப்புக்காக சீயோனுக்கு ஓடிப்போவது அவசியமாயிருக்கிறது.

69 வானத்தின் கீழே ஒவ்வொரு ஜாதியும் அங்கே கூட்டிச் சேர்க்கப்படும்; ஒருவருக்கொருவர் யுத்தம் செய்யாத அந்த ஜனங்கள் மட்டுமே இருப்பார்கள்.

70 அது துன்மார்க்கருக்கு மத்தியிலே சொல்லப்படும்; சீயோனின் குடிகள் பயங்கரமாயிருப்பதால் சீயோனுக்கு எதிராக யுத்தம் செய்யாதிருப்போமாக; ஏனெனில் நாம் நிலைக்க முடியாது.

71 சகல ஜாதிகளுக்கு மத்தியிலிருந்து நீதிமான்கள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள், நித்திய சந்தோஷத்தின் பாடல்களைப் பாடிக்கொண்டு சீயோனுக்கு வருவார்கள்.

72 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட காரியத்தை நீங்கள் நிறைவேற்றுமட்டும் உங்கள் பணியை அவர்கள் அறியாதிருக்கும்படியாகவும் ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் சத்துருக்களின் கண்களுக்கு முன்பாகவும் இந்த பணியை நீங்கள் நிறைவேற்றவும், எனக்கு அவசியமாகும்வரை இந்தக் காரியங்கள் உலகத்திற்குள் வெளியே போவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்;

73 அவர்கள் அதை அறியும்போது இந்தக் காரியங்களை அவர்கள் கருத்தில் கொள்ளுவார்கள்.

74 கர்த்தர் தோன்றும்போது அவர்களுக்கு அவர் பயங்கரமாயிருப்பார், அந்தப் பயம் அவர்களைப் பிடித்துக்கொள்ளும், அவர்கள் தூரத்திலே நின்று நடுங்குவார்கள்.

75 கர்த்தரின் பயங்கரத்தினிமித்தமும் அவரது பராக்கிரமத்தின் வல்லமையாலும் சகல ஜாதிகளும் பயப்படும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.