வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46


பாகம் 46

மார்ச் 8, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக சபைக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சபையின் இந்த ஆரம்ப காலத்தில் சபை ஆராதனைகளை நடத்துவற்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாதிரி இன்னமும் உருவாக்கப்படவில்லை, ஆயினும், அங்கத்தினர்கள் மற்றும் உண்மையான விசாரிப்பவர்களை மட்டும் திருவிருந்து கூட்டத்திற்கும், சபையின் பிற கூட்டங்களுக்கும் அனுமதிக்கும் பழக்கம் ஓரளவிற்கு பொதுவாயிருந்தது. கூட்டங்களை நிர்வகிப்பதற்கும் நடத்துவதற்கும் சம்பந்தமான கர்த்தரின் சித்தத்தையும் ஆவியின் வரங்களை நாடுதலையும் புரிந்துகொள்ளுதலையும் குறித்து இந்த வெளிப்படுத்தல் தெரிவிக்கிறது.

1–2, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டபடி, கூட்டங்களை மூப்பர்கள் நடத்தவேண்டும்; 3–6, சத்தியத்தை தேடுபவர்கள் திருவிருந்து கூட்டங்களிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது; 7–12, ஆவியின் வரங்களை தேவனிடம் கேட்டு, நாடவேண்டும்; 13–26, இந்த சில வரங்களின் வரிசை கொடுக்கப்பட்டிருக்கிறது; 27–33, ஆவியின் வரங்களைப் பகுத்தறிய சபைத் தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1 எனது சபையின் ஜனங்களே கேளுங்கள்; உங்களின் நன்மைக்காகவும், கற்றுக்கொள்ளுவதற்காகவும் இந்தக் காரியங்கள் உங்களிடம் பேசப்பட்டன என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2 எழுதப்பட்ட அந்தக் காரியங்களில்லாமல், பரிசுத்த ஆவியானவரால் அவைகள் வழிகாட்டப்பட்டு வழிநடத்தப்படுவதுபோல அனைத்துக் கூட்டங்களும் எப்போதும் நடத்தப்படவேண்டும். ஆரம்பத்திலிருந்தே இது எப்போதுமே எனது சபையின் மூப்பர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

3 ஆயினும், உலகத்திற்கு முன்பாக நடத்தப்படும் உங்களுடைய பொதுக் கூட்டங்களிலிருந்து யாரையும் நீங்கள் வெளியேற்றக் கூடாதென நீங்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறீர்கள்.

4 உங்களுடைய திருவிருந்துக் கூட்டங்களிலிருந்து சபைக்கு சொந்தமான யாரையும் வெளியேற்றக் கூடாதெனவும் நீங்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறீர்கள்; ஆயினும், யாராவது மீறுதல் செய்திருந்தால் அவன் ஒப்புரவாகும் மட்டும் அவன் திருவிருந்தில் பங்கேற்காதிருப்பானாக.

5 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ராஜ்யத்தை உண்மையாக நாடுகிற யாரையும் உங்கள் திருவிருந்துக் கூட்டங்களிலிருந்து நீங்கள் வெளியேற்றாதிருப்பீர்களாக, சபையைச் சாராதவர்களைக் குறித்து இதை நான் பேசுகிறேன்.

6 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுடைய திடப்படுத்தல் கூட்டங்களைப் பொறுத்தமட்டிலும் சபையைச் சாராதவர்களாயிருந்து ராஜ்யத்தை உண்மையாக நாடுகிற யாரையும் நீங்கள் வெளியேற்றக் கூடாது.

7 ஆனால் சம்பூரணமாய் கொடுக்கிற தேவனிடம் சகல காரியங்களையும் கேட்கும்படியாக நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; இருதயத்தின் முழு பரிசுத்தத்தோடும், எனக்கு முன்பாக உத்தமனாய் நடந்து, உங்களின் இரட்சிப்பின் முடிவை கருத்தில் கொண்டு, பொல்லாத ஆவிகளால், அல்லது பிசாசுகளின் கோட்பாடுகளால், அல்லது மனுஷர்களின் கட்டளைகளால், கெடுக்கப்படாமலிருக்க, ஜெபத்தோடும் நன்றி செலுத்துவதிலும் சகல காரியங்களையும் இருதயத்தின் சகல பரிசுத்தத்துடனும் நீங்கள் செய்யவேண்டுமென நான் விரும்புகிறதுபோல ஆவி உங்களுக்கு சாட்சியளிக்கிறது. ஏனெனில் அவைகளில் சில மனுஷர்களுடையதாயும், சில பிசாசினுடையவையாயும் இருக்கின்றன.

8 ஆகவே நீங்கள் வஞ்சிக்கப்படாமலிருக்கும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் வஞ்சிக்கப்படாமலிருக்கும்படிக்கு அவைகள் எதற்காக கொடுக்கப்பட்டன என எப்போதுமே நினைவுகூர்ந்து சிறந்த வரங்களையே நாடுங்கள்.

9 ஏனெனில் நான் மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு அடையாளத்திற்காக தங்களுடைய இச்சைகளை நிறைவேற்றக் கேட்காமல், நாடுவோர் அனைவரும் நன்மையடையத்தக்கதாக அல்லது என்னிடம் கேட்பவர்கள், என்னை நேசித்து, எனது கட்டளைகளைக் கைக்கொள்வோர் நன்மையடைவதற்காக அவைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

10 மீண்டும் மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் எப்போதும் நினைவுகூரவும், சபைக்குக் கொடுக்கப்படுகிற அந்த வரங்களை எப்போதும் உங்கள் மனங்களில் வைத்திருக்கவும் நான் விரும்புகிறேன்.

11 ஏனெனில் எல்லா வரங்களும் அவர்கள் எல்லோருக்கும் கொடுக்கப்படவில்லை; ஏனெனில் அநேக வரங்களுண்டு, தேவனின் ஆவியால் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு வரம் அளிக்கப்படுகிறது.

12 அதனால் அனைவரும் நன்மையடையத்தக்கதாக. சிலருக்கு ஒன்று கொடுக்கப்படுகிறது, சிலருக்கு மற்றொன்று அளிக்கப்படுகிறது.

13 இயேசு கிறிஸ்து தேவனின் குமாரனென்றும், உலகத்தின் பாவங்களுக்காக அவர் சிலுவையிலறையப்பட்டார் என்றும் அறியத்தக்கதாக பரிசுத்த ஆவியானவரால் சிலருக்கு அது அளிக்கப்படுகிறது.

14 அவர்களின் வார்த்தைகளை நம்புவதற்காகவும், அவர்கள் விசுவாசத்தில் தொடர்ந்திருந்தால் அவர்களும் நித்திய ஜீவன் அடையும்படிக்கு மற்றவர்களுக்கு அது அளிக்கப்படுகிறது.

15 மீண்டும், அதே கர்த்தருக்கு பிரியமானபடி, கர்த்தரின் சித்தத்தின்படியே, மனுபுத்திரர்களின் நிலைமைகளுக்கேற்ப அவரது இரக்கங்களுக்கு ஏற்றவாறு, நிர்வாகத்தின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, சிலருக்கு அது பரிசுத்த ஆவியானவரால் அளிக்கப்படுகிறது.

16 மீண்டும் ஒவ்வொரு மனுஷனின் ஆதாயத்துக்காக ஆவியின் வெளிப்பாடுகள் கொடுக்கப்படும்படிக்கு, அவை தேவனுடையனவா என செயல்பாடுகளின் விதங்களை அறிய பரிசுத்த ஆவியானவரால் இது சிலருக்குக் கொடுக்கப்படுகிறது.

17 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவனின் ஆவியால் சிலருக்கு ஞானமுள்ள வார்த்தை அளிக்கப்படுகிறது.

18 அனைவரும் ஞானமாயிருக்கவும், அறிவைப் பெற்றிருக்கவும் மற்றொருவனுக்கு அறிவின் வார்த்தை அளிக்கப்படுகிறது.

19 மீண்டும், குணமாக்கப்பட விசுவாசம் கொண்டிருக்க சிலருக்கு அளிக்கப்படுகிறது.

20 குணமாக்க விசுவாசம் கொண்டிருக்க மற்றவர்களுக்கு அது அளிக்கப்படுகிறது.

21 மீண்டும், அற்புதங்களைச் செய்வது சிலருக்கு அளிக்கப்படுகிறது;

22 மற்றவர்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்ல அளிக்கப்படுகிறது;

23 ஆவிகளைப் பகுத்தறிதல் மற்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

24 மீண்டும், பல பாஷைகள் பேசுவது சிலருக்கு அளிக்கப்படுகிறது;

25 பற்பல பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் மற்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

26 தேவனின் பிள்ளைகளின் நன்மைக்காக இந்த எல்லா வரங்களும் தேவனிடமிருந்து வருகிறது.

27 சபையின் ஆயருக்கும், சபையின் மூப்பர்களாயிருக்க தேவன் நியமிக்கவிருப்பவர்களுக்கும் சபையைக் கண்காணிக்கவும், உங்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தாலும் தேவனுடையவராய் இல்லாதோரைப் பகுத்தறிய அந்த சகல வரங்களும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

28 ஆவியில் கேட்பவன் ஆவியில் பெறுவான்;

29 அதனால் ஒவ்வொரு அங்கத்தினரும் பலனடையும்படிக்கு ஒரு தலைமை இருக்கும்படியாக, அந்த வரங்கள் யாவும் சிலருக்கு கொடுக்கப்படலாம்.

30 ஆவியில் கேட்கிறவன் தேவனின் சித்தத்தின்படி கேட்கிறான்; ஆகவே அவன் கேட்கிறபடி கொடுக்கப்படுகிறது.

31 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆவியில் நீங்கள் எதைச் செய்தாலும் சகல காரியங்களும் கிறிஸ்துவின் நாமத்தில் செய்யப்படவேண்டும்;

32 எந்த ஆசீர்வாதத்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டாலும், ஆவியில் தேவனுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.

33 எனக்கு முன்பாக நீங்கள் தொடர்ந்து நற்குணத்தையும் பரிசுத்தத்தையும் பயிற்சி செய்யவேண்டும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.