வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 48


பாகம் 48

மார்ச் 10, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். பரிசுத்தவான்களின் குடியிருப்புக்காக நிலங்களை வாங்குவதற்கான செயல் முறைக்காக கர்த்தரிடம் தீர்க்கதரிசி வேண்டியிருந்தார். சபை அங்கத்தினர்கள் ஒஹாயோவில் கூடவேண்டும் என்ற கர்த்தரின் கட்டளைக்கு கீழ்ப்படியும் பொருட்டு கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து வந்த அவர்களின் இடம்பெயர்தல் குறித்தவகையில் இந்த காரியம் மிக முக்கியமானதாயிருந்தது (பாகங்கள் 37:1–3; 45:64 பார்க்கவும்).

1–3, ஒஹாயோவிலுள்ள பரிசுத்தவான்கள், தங்களுடைய சகோதரர்களுடன் தங்கள் நிலத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும்; 4–6, பரிசுத்தவான்கள் நிலங்களை வாங்கி, ஒரு பட்டணத்தைக் கட்டி, தலைமை தாங்கும் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றவேண்டும்.

1 உங்களின் சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல நீங்கள் வாழும் இடங்களில் தற்சமயம் நீங்கள் தங்கியிருக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.

2 உங்களிடம் எவ்வளவாய் நிலங்களிருக்கிறதோ, அவ்வளவாய் உங்கள் கிழக்கிலுள்ள சகோதரர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்;

3 எவ்வளவாய் உங்களிடம் நிலங்கள் இல்லையோ அவ்வளவாய் அவைகள் நல்லதாய் தோன்றுகிற பிரகாரமாக அந்த சுற்றியுள்ள பிரதேசங்களில் தற்சமயம் அவர்கள் வாங்குவார்களாக, ஏனெனில் தற்சமயம் அவர்கள் வாழ்வதற்கு இடங்களிருப்பது அவசியமாயிருக்கவேண்டும்.

4 சரியான சமயத்தில் சுதந்தரிக்க நிலத்தையும், பட்டணத்தையும் கூட, உங்களால் வாங்க முடிந்த எல்லாவற்றையும் நீதியில் நீங்கள் பெறும்படியாக உங்களால் முடிந்தளவுக்கு நீங்கள் பணத்தை சேமிப்பது அவசியமாயிருக்க வேண்டும்.

5 இடம் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை; ஆனால் கிழக்கிலிருந்து உங்கள் சகோதரர் வந்த பின்பு சில மனுஷர்கள் நியமிக்கப்பட்டு, இடங்களைப்பற்றி அறிந்துகொள்ள அது அவர்களுக்குக் கொடுக்கப்படும் அல்லது அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

6 நிலங்களை வாங்கவும், பட்டணத்தின் அஸ்திபாரத்தைப் போட ஆரம்பிக்கவும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்; பின்னர், ஒவ்வொரு மனுஷனும் அவனது குடும்பத்தின் படியும், அவனது சூழ்நிலையின்படியும், சபையின் தலைமை மற்றும் ஆயரால் அவனுக்கு நியமிக்கப்பட்டபடியும், நீங்கள் பெற்றுக்கொண்ட, இப்போதிலிருந்து நீங்கள் பெறப்போகிற பிரமாணங்கள் மற்றும் கட்டளைகளின்படியும் பின்னர் உங்கள் குடும்பத்தோடு கூடிச்சேர நீங்கள் ஆரம்பிக்கலாம். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.