வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50


பாகம் 50

மே 9, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். பூமியின் மீதெங்கிலும் வித்தியாசமான ஆவிகளின் செயல்பாடுகளை மூப்பர்களில் சிலர் புரிந்துகொள்ளவில்லை எனவும் இந்தக் காரியத்தைக்குறித்து அவரது விசேஷித்த விசாரிப்புக்கு பதிலாக இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டதென்றும் ஜோசப் ஸ்மித் வரலாறு உரைக்கிறது. அப்படிப்பட்ட ஆவிக்குரிய நிகழ்வுகள் அங்கத்தினர்களிடையே பொதுவாக இருந்தது. அவர்களில் சிலர் தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் பெறுவதாகக் கோரினார்கள்.

1–5, பூமியின் மீதெங்கும் அநேக பொய்யான ஆவிகளிருக்கின்றன; 6–9, மாயக்காரர்களுக்கும் சபையிலிருந்து தள்ளப்பட்டவர்களுக்கும் ஐயோ; 10–14, சுவிசேஷத்தை மூப்பர்கள் ஆவியால் பிரசங்கிக்க வேண்டும்; 15–22, பிரசங்கிப்பவர்களும் கேட்பவர்களும் ஆவியால் தெளிவுபடுத்தப்படவேண்டும்; 23–25, பக்திவிருத்தியடையாதவை தேவனுடையவையல்ல; 26–28, விசுவாசமுள்ளவர்கள் சகல காரியங்களையும் உடையவர்களாயிருப்பார்கள்; 29–36, சுத்திகரிக்கப்பட்டவர்களின் ஜெபங்கள் பதிலளிக்கப்படுகின்றன; 37–46, கிறிஸ்து நல்ல மேய்ப்பராயும் இஸ்ரவேலின் கன்மலையுமாயிருக்கிறார்.

1 எனது சபையின் மூப்பர்களே கேளுங்கள், ஜீவிக்கிற தேவனின் குரலுக்கு செவிகொடுங்கள்; சபையைப்பற்றியும் பூமியின் மீதெங்கும் போன ஆவிகளைப்பற்றியும் நீங்கள் கேட்டதின்படியும் ஒப்புக்கொண்டதின்படியும் உங்களுக்குக் கொடுக்கப்படவுள்ள ஞானவார்த்தைகளைக் கவனியுங்கள்.

2 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உலகத்தை வஞ்சித்து பூமியின்மேல் போன பொய்யான ஆவிகளான அநேக ஆவிகளிருக்கின்றன.

3 உங்களை அவன் மேற்கொள்ளும்படியாக, சாத்தானும் கூட உங்களை வஞ்சிக்க வகை தேடுகிறான்.

4 இதோ, கர்த்தராகிய நான் உங்களை நோக்கிப்பார்த்தேன், எனது நாமத்தை அறிக்கையிடுகிற சபையில் அருவருப்புகளைப் பார்த்திருக்கிறேன்.

5 ஆனால் ஜீவியத்திலோ மரணத்திலோ உண்மையுள்ளவர்களாயும் நிலைத்திருப்பவர்களுமாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள்.

6 ஆனால் வஞ்சிக்கிறவர்களுக்கும் மாயக்காரர்களுக்கும் ஐயோ, ஏனெனில் நான் அவர்களை நியாயத்தீர்ப்புக்கு கொண்டுவருவேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

7 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சிலரை வஞ்சித்த சத்துரு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிற மாயக்காரர்கள் உங்களுக்கு மத்தியிலே இருக்கிறார்கள்; ஆனால் இதோ அப்படிப்பட்டவர்கள் சரிப்படுத்தப்பட வேண்டும்;

8 ஆனால் மாயக்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜீவியத்திலோ மரணத்திலோ எனது சித்தத்தின்படி அறுப்புண்டு போகக்கடவர்கள்; எனது சபையிலிருந்து அறுப்புண்டு போனவர்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்கள் உலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

9 ஒவ்வொரு மனுஷனும் எனக்கு முன்பாக சத்தியமாகவும் நீதியாகவுமில்லாதிருக்கிறதை அவன் செய்யாமல் இருக்கும் பொருட்டு அவன் எச்சரிக்கையாயிருப்பானாக.

10 இப்பொழுது, நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக, வழக்காடுவோம் வாருங்கள் என்று ஆவியால் அவரது சபையின் மூப்பர்களுக்கு கர்த்தர் சொல்லுகிறார்;

11 ஒருவன் மற்றொருவனோடு முகமுகமாய் வழக்காடுவதைப்போல நாமும் வழக்காடுவோமாக.

12 இப்பொழுது, ஒரு மனுஷன் வழக்காடும்போது மனுஷனால் புரிந்து கொள்ளப்படுகிறான், ஏனெனில் அவன் ஒரு மனுஷனைப்போல வழக்காடுகிறான்; அதுபோலவே கர்த்தராகிய நானும் நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக வழக்காடமாட்டேனோ.

13 ஆகவே, கர்த்தராகிய நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், எதற்காக நீங்கள் நியமனம் செய்யப்பட்டீர்கள்?

14 ஆவியால் என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க, தேற்றரவாளனும் சத்தியத்தைப் போதிக்க அனுப்பப்பட்டார்.

15 பின்னர் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாத ஆவிகளை நீங்கள் பெற்றீர்கள், தேவனிடத்திலிருந்து வந்ததுபோல அவைகளைப் பெற்றீர்கள். இதில் நீங்கள் நீதி செய்தீர்களா?

16 இதோ, நீங்களே இந்த கேள்விக்கு பதிலளிப்பீர்கள்; ஆயினும், நான் உங்களோடே இரக்கமாயிருப்பேன்; உங்களில் பலவீனமானவன் இப்போதிலிருந்து பெலசாலியாக்கப்படுவான்.

17 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னால் நியமனம் செய்யப்பட்டவன், தேற்றரவாளனால் சத்தியத்தின் வார்த்தையை, சத்தியத்தின் ஆவியால், பிரசங்கிக்க அனுப்பப்பட்டவன், சத்தியத்தின் ஆவியால் அதை பிரசங்கிக்கிறானா அல்லது வேறு வழியிலா?

18 அது வேறு வழியிலிருந்தால் அது தேவனிடமிருந்தல்ல.

19 மீண்டும், சத்தியத்தின் வார்த்தையைப் பெறுகிற அவன் அதை சத்தியத்தின் ஆவியால் பெறுகிறானா அல்லது வேறு வழியிலா?

20 அது வேறு வழியிலிருந்தால் அது தேவனிடமிருந்தல்ல.

21 ஆகவே, சத்தியத்தின் ஆவியால் சத்தியத்தின் வார்த்தையைப் பெறுகிற அவன் சத்தியத்தின் ஆவியால் பிரசங்கித்தபடி அதைப் பெறுகிறான் என்பதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளவும் அறிந்து கொள்ளவுமில்லை?

22 ஆகவே, பிரசங்கிக்கிறவனும் பெறுகிறவனும் ஒருவருக்கொருவரை புரிந்துகொள்கிறார்கள், இருவருமே பக்திவிருத்தியடைந்து ஒன்றாக களிகூருகிறார்கள்.

23 பக்திவிருத்தியடையாதவன் தேவனுடையவனல்ல, அந்தகாரத்திலிருப்பவன்.

24 தேவனிடமிருந்து வருகிறவை ஒளியாயிருக்கிறது; ஒளியைப் பெற்று தேவனில் தொடர்ந்திருப்பவன், கூடுதலான ஒளியைப் பெறுகிறான்; அந்த ஒளி சரியான நாள் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும்.

25 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுக்கு மத்தியிலிருந்து அந்தகாரத்தை நீங்கள் விரட்டும்படியாக நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என நான் இதைச் சொல்லுகிறேன்;

26 தேவனால் நியமனம் செய்யப்பட்டவனும் அனுப்பப்பட்டவனுமானவன் சிறியவனாயிருந்தாலும் சகலருக்கும் வேலைக்காரனாயிருந்தாலும் அவனே பெரியவனாயிருக்க நியமிக்கப்படுகிறான்.

27 ஆகவே, அவன் சகலத்தையும் வைத்திருக்கிறான்; ஏனெனில் வானத்திலும் பூமியிலும் சகல காரியங்களும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, பிதாவின் சித்தப்படி அனுப்பப்பட்ட ஜீவனும் ஒளியும், ஆவியும் வல்லமையும் அவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது.

28 ஆனால் சகல பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டவனைத் தவிர ஒருவனும் சகல காரியங்களையும் வைத்திருப்பவனில்லை.

29 சகல பாவங்களிலிருந்தும் நீங்கள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டால் இயேசுவின் நாமத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும் அது நிறைவேற்றப்படும்.

30 ஆனால் இதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதைக் கேட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கப்படும்; நீங்கள் தலைமைக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் ஆவிகள் உங்களுக்கு கீழ்ப்பட்டிருக்கும்.

31 ஆகவே, உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு ஆவி வெளியரங்கமாக்கப்பட்டு, நீங்கள் பார்த்தால் அந்த ஆவியை நீங்கள் பெறவில்லையென்றால் இயேசுவின் நாமத்தில் நீங்கள் பிதாவைக் கேட்கவேண்டும்; அவர் அந்த ஆவியை உங்களிடம் கொடுக்கவில்லையென்றால், பின்னர் அது தேவனிடமிருந்து அல்லவென்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

32 அந்த ஆவியின் மேல் வல்லமை உங்களுக்குக் கொடுக்கப்படும்; அது தேவனிடமிருந்து அல்ல என ஒரு உரத்த குரலுடன் அந்த ஆவிக்கு எதிராக நீங்கள் அறிவிப்பீர்கள்,

33 தூஷணமாய் குற்றப்படுத்தாமல், பெருமை பாராட்டாமலும் களிகூராமலும், நீங்கள் மேற்கொள்ளப்படாதவாறு இருங்கள், இல்லையேல் அவ்வாறே நீங்கள் சிறைபிடிக்கப்படுவீர்கள்.

34 தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன், தேவனுக்கு அதை கணக்கொப்புவிப்பானாக; ஏற்றுக்கொள்ள தகுதியாக இருக்கும்பொருட்டு அவன் தேவனிடத்தில் கணக்கொப்புவித்தானென அவன் களிகூர்வானாக.

35 நீங்கள் பெற்றுக் கொண்டதும், இப்போதிலிருந்து நீங்கள் பெறப்போகிறதுமான இந்தக் காரியங்களுக்குச் செவி கொடுப்பதாலும் செய்வதாலும், பிதாவால் ராஜ்யமும், அவரால் நியமனம் செய்யப்படாத சகல காரியங்களையும் மேற்கொள்ள அதிகாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது,

36 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனின் வாயிலிருந்து வருகிற எனது இந்த வார்த்தைகளை இப்போது கேட்கிற நீங்கள் பாக்கியவான்கள், ஏனெனில் உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன.

37 நான் பிரியமாயிருக்கிற எனது ஊழியக்காரனாகிய ஜோசப் வேக்பீல்டும், எனது ஊழியக்காரனாகிய பார்லி பி. பிராட்டும் சபைகளுக்கு மத்தியிலே போய் புத்திமதியின் வார்த்தையால் அவைகளைப் பலப்படுத்துவார்களாக;

38 எனது ஊழியக்காரனாகிய ஜான் கோரிலும், அல்லது இந்த அலுவலுக்கு நியமனம் செய்யப்பட்ட அநேக ஊழியக்காரர்களும் திராட்சைத் தோட்டத்திலே பிரயாசப்படுவார்களாக; நான் அவர்களுக்கு நியமித்தவற்றை அவர்கள் செய்வதை ஒருவனும் தடைசெய்யாதிருப்பானாக,

39 ஆகவே, இந்தக் காரியத்தில் எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ் நியாயம் செய்யவில்லை; ஆயினும் அவன் மனந்திரும்புவானாக, அவன் மன்னிக்கப்படுவான்.

40 இதோ, நீங்கள் சிறு பிள்ளைகளாயிருக்கிறீர்கள், இப்பொழுது சகல காரியங்களையும் உங்களால் சுமக்க முடியாது; கிருபையிலும் சத்தியத்தின் அறிவிலும் நீங்கள் வளரவேண்டும்.

41 சிறு பிள்ளைகளே பயப்படாதிருங்கள், ஏனெனில் நீங்கள் என்னுடையவர்கள், நான் உலகத்தை மேற்கொண்டேன், என்னுடைய பிதா எனக்குக் கொடுத்தவர்கள் நீங்கள்;

42 எனது பிதா எனக்குக் கொடுத்த ஒருவரும் காணாமற் போகமாட்டார்கள்.

43 பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம். நான் பிதாவிலிருக்கிறேன், என்னில் பிதா இருக்கிறார். எவ்வளவாய் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்கிறீர்களோ அவ்வளவாய் நீங்கள் என்னிலிருக்கிறீர்கள், நான் உங்களிலிருக்கிறேன்.

44 ஆகவே, நான் உங்கள் நடுவிலிருக்கிறேன், நானே நல்ல மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையுமாயிருக்கிறேன். இந்த கன்மலையின்மேல் கட்டுகிறவன் ஒருக்காலும் இடறி விழுவதில்லை.

45 நீங்கள் என் சத்தத்தைக் கேட்டு, என்னைக் கண்டு, நானே என்றறியும் நாள் வருகிறது.

46 ஆகவே, நீங்கள் ஆயத்தமாயிருக்கும்படியாக எச்சரிக்கையாயிருங்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.