பாகம் 60
ஆகஸ்டு 8, 1831ல் மிசௌரியிலுள்ள ஜாக்சன் மாகாணத்தில் இன்டிபென்டன்ஸில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த சந்தர்ப்பத்தில் ஜாக்சன் மாகாணத்திற்கு பயணப்பட்டு தேசம் மற்றும் ஆலயத்தின் இடத்தை பிரதிஷ்டை செய்வதில் பங்கேற்ற மூப்பர்கள் அவர்கள் என்ன செய்யவேண்டுமென்பதை அறிந்துகொள்ள விரும்பினார்கள்.
1–9, துன்மார்க்கரின் சபைகளில் மூப்பர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும்; 10–14, அவர்கள் தங்கள் நேரத்தை சோம்பலில் கழிக்காமலும் தங்கள் தாலந்துகளை புதைக்காமலுமிருக்கவேண்டும்; 15–17, சுவிசேஷத்தைப் புறக்கணிப்பவர்களுக்கெதிராக ஒரு சாட்சியாக தங்கள் பாதங்களை அவர்கள் கழுவுவார்கள்.
1 இதோ, அவர்கள் வந்த தேசத்திலிருந்து அங்கு சீக்கிரத்திலேயே திரும்பவேண்டியவர்களான அவரது சபையின் மூப்பர்களுக்கு இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நீங்கள் இங்கே வந்தது எனக்குப் மகிழ்ச்சியாயிருக்கிறது:
2 ஆனால் சிலருடன் நான் மகிழ்ச்சியாயில்லை, ஏனெனில் அவர்கள் தங்கள் வாய்களைத் திறக்கமாட்டார்கள், ஆனால், மனுஷனுக்கு பயந்ததால், நான் அவர்களுக்குக் கொடுத்த தாலந்துகளை அவர்கள் மறைத்து வைத்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஐயோ, ஏனெனில் என்னுடைய கோபம் அவர்களுக்கெதிராக மூண்டது–
3 மேலும், அவர்கள் என்னிடத்தில் அதிக உண்மையுள்ளவர்களாய் இல்லாதிருந்தால், அவர்களிடத்தில் இருப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.
4 ஏனெனில், கர்த்தராகிய நான் வானங்களுக்கு மேலாகவும், பூமியின் சேனைகளுக்கு மத்தியிலும், ராஜரீகம் பண்ணுகிறேன். நான் என் ஆபரணங்களைச் செய்யும் அந்நாளிலே தேவனின் வல்லமையைப் பேசுகிற அது எதுவென சகல மனுஷர்களும் அறிந்து கொள்ளுவார்கள்.
5 ஆனால், நீங்கள் வந்த இடத்திலிருந்து உங்கள் பயணத்தைப்பற்றி மெய்யாகவே நான் உங்களிடத்தில் பேசுகிறேன். உங்களுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி ஒரு படகு செய்யப்படுவதாக அல்லது வாங்கப்படுவதாக, அது எனக்கு ஒரு பொருட்டில்லை, செயின்ட் லூயிஸ் என்றழைக்கப்படுகிற இடத்திற்கு சீக்கிரத்திலேயே உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
6 அங்கிருந்து எனது ஊழியக்காரர்களாகிய சிட்னி ரிக்டனும், ஜோசப் ஸ்மித் இளையவனும், ஆலிவர் கௌட்ரியும் சின்சின்னாட்டிக்கு பயணத்தை மேற்கொள்வார்களாக;
7 இந்த இடத்தில் அவர்கள் தங்கள் குரலை உயர்த்துவார்களாக, அவர்கள் மேல் பரிசுத்த கைகளை உயர்த்தி கோபமில்லாமல் அல்லது சந்தேகமில்லாமல் உரத்த குரலில் எனது வார்த்தையை அறிவிப்பார்களாக. நான் உங்களை பரிசுத்தமாக்கமுடிவதால், உங்களுடைய பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன.
8 இருவர் இருவராக மீதியானவர்கள் தங்கள் பயணத்தை செயின்ட் லூயிஸிலிருந்து மேற்கொண்டு, அவர்கள் வந்த இடத்திலிருந்து அவர்கள் சபைகளுக்கு திரும்பவரும்வரை துன்மார்க்கரின் சபைகளுக்கு மத்தியில் அவசரப்படாமல் வார்த்தையை பிரசங்கிப்பார்களாக.
9 இவை அனைத்தும் சபைகளின் நன்மைக்காகவே; ஏனெனில் இந்த காரியத்திற்காகவே நான் அவர்களை அனுப்பினேன்.
10 எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ், நான் அவனுக்குக் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை, திரும்பிவரும்படி கட்டளையிடப்பட்ட எனது மூப்பர்களுக்குக் கொடுப்பானாக;
11 முடிந்தவன், பிரதிநிதியின் மூலமாக அதைத் திரும்பக் கொடுப்பானாக; முடியாதவன் கொடுக்கத் தேவையில்லை.
12 இப்பொழுது இந்த தேசத்திற்கு வரவிருக்கிற மீதியானவர்களைப்பற்றி நான் பேசுகிறேன்.
13 இதோ, துன்மார்க்கரின் சபைகளுக்கு மத்தியில் என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர்கள் அனுப்பப்பட்டார்கள்; ஆகவே இப்படியாக நான் அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தேன், உங்கள் நேரத்தை சோம்பேறியாக கழிக்காதிருப்பீர்களாக, உங்களின் தாலந்தை அறியப்படாதவாறு புதைக்காதிருப்பீர்களாக.
14 சீயோன் தேசத்திற்கு நீங்கள் வந்து, எனது வார்த்தையை பிரசங்கித்த பின்னர், அவசரப்படாமல், கோபத்திலோ அல்லது சண்டையிலோ அல்லாமல் துன்மார்க்கரின் சபைகளுக்கு மத்தியில் எனது வார்த்தையை பிரசங்கித்துக் கொண்டு நீங்கள் சீக்கிரத்திலேயே திரும்பி வருவீர்களாக.
15 உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக, நீங்கள் அவர்களுக்கு கோபம் உண்டாக்காதபடிக்கு, அவர்களின் முன்பாக அல்லாது, இரகசியமாக, உங்கள் கால்களில் படிந்த தூசை உதறிப் போடுங்கள், நியாயத்தீர்ப்பின் நாளில் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாக உங்கள் கால்களை கழுவுங்கள்.
16 இதோ, உங்களுக்கும் உங்களை அனுப்பியவரின் சித்தத்திற்கும் இது போதுமானதாயிருக்கிறது.
17 எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனின் வாயால் சிட்னி ரிக்டன் மற்றும் ஆலிவர் கௌட்ரியைக் குறித்து அது அறியப்படுத்தப்படும். இப்போதிலிருந்து மீதியானவர்களுக்கும்கூட, அப்படியே ஆகக்கடவது. ஆமென்.