பாகம் 64
செப்டம்பர் 11, 1831ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் சபையின் மூப்பர்களுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மிசௌரியில் அவரிருந்தபோது, அவரது தள்ளிவைக்கப்பட்டிருந்த, வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியை, மீண்டும் தொடங்க, ஒஹாயோவிலுள்ள ஹைரமுக்குப் போக தீர்க்கதரிசி ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அக்டோபரில் சீயோனுக்கு (மிசௌரிக்கு) பயணம் செய்யவேண்டுமென கட்டளையிடப்பட்ட சகோதரர்களின் குழு ஆயத்தம் செய்வதில் ஊக்கமாய் ஈடுபட்டிருந்தனர். சுறுசுறுப்பான இந்த நேரத்தில், இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டது.
1–11, பெரிய பாவம் அவர்களோடு தங்காதபடிக்கு, பரிசுத்தவான்கள் ஒருவரையொருவர் மன்னிக்க கட்டளையிடப்படுகிறார்கள்; 12–22, மனந்திரும்பாதவர்கள் சபைக்கு முன்பாகக் கொண்டுவரப்படவேண்டும்; 23–25, தசமபாகம் செலுத்தியவன், கர்த்தரின் வருகையின்போது, சுட்டெரிக்கப்படுவதில்லை; 26–32, கடனுக்கு எதிராக பரிசுத்தவான்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்; 33–36, கலகக்காரர்கள் சீயோனிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; 37–40, தேசங்களை சபை நியாயம் விசாரிக்கும்; 41–43, சீயோன் செழித்தோங்கும்.
1 இதோ, இப்படியாக உங்கள் கர்த்தராகிய தேவன் உங்களுக்குச் சொல்லுகிறார், என்னுடைய சபையின் மூப்பர்களே, நீங்கள் கேளுங்கள், உங்களைக்குறித்த என்னுடைய சித்தத்தை அறியுங்கள்.
2 ஏனெனில் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் உலகத்தை மேற்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். ஆகவே, நான் உங்கள்மேல் இரக்கமாயிருப்பேன்.
3 பாவஞ்செய்தவர்கள் உங்களுக்கு மத்தியிலிருக்கிறார்கள்; ஆனால் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், இந்த ஒருமுறை, என்னுடைய மகிமைக்காக, ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக உங்கள் பாவங்களை நான் உங்களுக்கு மன்னித்திருக்கிறேன்.
4 நான் உங்கள்மேல் இரக்கமாயிருப்பேன், ஏனெனில் ராஜ்யத்தை நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
5 நான் நியமித்த வழியாகிய, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் ஜீவித்திருக்கும்போது என்னுடைய நியமங்களுக்கு அவன் கீழ்ப்படிகிற அளவில், ராஜ்யத்தின் இரகசியங்களின் திறவுகோல்கள் அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
6 காரணமில்லாமல் அவனுக்கெதிரான சந்தர்ப்பங்களை நாடினவர்களிருக்கிறார்கள்;
7 ஆயினும், அவன் பாவஞ் செய்தான்; ஆனால் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனக்கு முன்பாக தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்புக் கேட்கிறவர்களுக்கும், மரணத்துக்கேதுவாக பாவஞ்செய்யாதவர்களுக்கும், கர்த்தராகிய நான் பாவங்களை மன்னிக்கிறேன்.
8 என்னுடைய சீஷர்களே, பூர்வ கால நாட்களில் ஒருவருக்கு எதிராக ஒருவர் சந்தர்ப்பம் தேடி, தங்கள் இருதயங்களில் ஒருவருக்கொருவர் மன்னிக்காதிருந்தார்கள்; இந்த தீங்கிற்காக அவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.
9 ஆகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் ஒருவரையொருவர் மன்னிக்கவேண்டும், ஏனெனில் தன்னுடைய சகோதரனுடைய தப்பிதங்களை மன்னிக்காதவன் கர்த்தருக்கு முன்பாக குற்றவாளியாக நிற்கிறான், ஏனெனில் அவனில் இன்னமும் பெரிய பாவமிருக்கிறது.
10 கர்த்தராகிய நான் மன்னிக்க வேண்டியவர்களை மன்னிப்பேன், ஆனால் நீங்கள் சகல மனுஷர்களையும் மன்னிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
11 எனக்கும் உங்களுக்கும் மத்தியில் தேவனே நியாயம் விசாரிப்பாராக, உங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக உங்களுக்கு பலன் கிடைப்பதாக என நீங்கள் உங்கள் இருதயங்களிலே சொல்லிக்கொள்ளவேண்டும்.
12 தன்னுடைய பாவங்களுக்காக மனந்திரும்பாதவனை, அவைகளை அறிக்கையிடாதவனை, நீங்கள் சபைக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும், கட்டளையின்படியோ வெளிப்படுத்தலின்படியோ வேதம் உங்களுக்குச் சொல்லுகிறபடி நீங்கள் அவனுக்குச் செய்யுங்கள்.
13 நீங்கள் மன்னிக்காததால் அல்ல, இரக்கமில்லாததால் அல்ல, ஆனால் நியாயப்பிரமாணத்தின்படியே நீங்கள் நியாயந்தீர்க்கப்படவும், உங்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுத்தவரை நீங்கள் நிந்திக்காதிருக்கவும், தேவன் மகிமைப்படுத்தப்படும்படியாக நீங்கள் இதைச் செய்யவேண்டும்,
14 மெய்யாகவே நான் சொல்லுகிறேன், இந்தக் காரணத்திற்காகவே இந்தக் காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
15 இதோ, கர்த்தராகிய நான், என்னுடைய ஊழியக்காரனாகிய எஸ்றா பூத்துடனும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஐசக் மோர்லியிடமும் நான் கோபமாயிருந்தேன், ஏனெனில் பிரமாணத்தையும், கட்டளைகளையும், அவர்கள் கைக்கொள்ளவில்லை;
16 அவர்கள் தீங்கை தங்கள் இருதயங்களிலே நாடினார்கள், கர்த்தராகிய நான் என்னுடைய ஆவியை எடுத்துக்கொண்டேன். தீங்கில்லாத காரியத்தில் தீங்கிற்காக அவர்கள் கடிந்து கொள்ளப்பட்டார்கள்; ஆயினும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஐசக் மோர்லியை நான் மன்னித்தேன்.
17 என்னுடைய ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ், இதோ, அவன் பாவஞ்செய்தான், சாத்தான் அவனுடைய ஆத்துமாவை அழிக்க வகைதேடுகிறான்; ஆனால் அவர்களுக்கு இந்தக் காரியங்கள் அறியப்படுத்தப்படும்போது, தீங்கிற்காக அவர்கள் மனந்திரும்பும்போது, அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
18 இப்பொழுது, மெய்யாகவே நான் சொல்லுகிறேன், ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட் அவனுடைய வியாபாரத்துக்கும் சீயோன் தேசத்தில் அவனுடைய சுயாதீனத்துக்கும் திரும்புவது என்னில் அவசியமாயிருக்கிறது;
19 அவர்கள் அழிந்துபோகாதபடிக்கு, அவன் கண்டதையும் கேட்டதையும், என்னுடைய சீஷர்களுக்கு அறியப்படுத்த வேண்டும். இந்தக் காரணத்திற்காகவே இந்தக் காரியங்களை நான் பேசினேன்.
20 மேலும் எனது ஊழியக்காரனாகிய ஐசக் மோர்லி, தன்னால் தாங்க முடிந்த அளவிற்கு மேலாக சோதிக்கப்படாமலும், நீங்கள் பாதிக்கப்படாதபடி தவறாக ஆலோசனை அளிக்கப்படாமலும் இருக்கும்படியாக அவனுடைய பண்ணை விற்கப்பட வேண்டுமென நான் கட்டளையிட்டேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ் அவனுடைய பண்ணையை விற்க, நான் விரும்பமாட்டேன், ஏனெனில் சிலரை பாதுகாக்க, துன்மார்க்கரை நான் கவிழ்த்துப்போடாமல், ஐந்து வருஷங்களுக்கு கர்த்தராகிய நான் கர்த்லாந்து தேசத்தில் ஒரு அரணிப்பான இடத்தை நிலைநிறுத்துவேன்.
22 அந்த நாளுக்குப் பின்னர், கர்த்தராகிய நான் சீயோன் தேசத்திற்கு திறந்த இருதயத்தோடு போகும் எவரையும் குற்றவாளியாக்கமாட்டேன்; ஏனெனில் கர்த்தராகிய எனக்கு மனுபுத்திரர்களின் இருதயங்கள் வேண்டும்.
23 இதோ, இப்பொழுது, மனுஷகுமாரன் வருமளவும் பகல்பொழுது எனப்படும், மெய்யாகவே இது ஒரு பலியின் நாளாகவும், என்னுடைய ஜனங்களுக்கு தசமபாகத்தின் நாளாகவுமிருக்கிறது, ஏனெனில் தசமபாகம் செலுத்துகிறவன் அவரது வருகையின் நாளில் சுட்டெரிக்கப்படமாட்டான்.
24 ஏனெனில் பகல்பொழுதுக்குப் பின்னர் சுட்டெரித்தல் வருகிறது, இது கர்த்தரைப்போல பேசுவதாகும், ஏனெனில் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், நாளை அகங்காரமுள்ள சகலரும், துன்மார்க்கம் செய்கிறவர்களும் தாளடியைப் போலிருப்பார்கள், நான் அவர்களை சுட்டெரிப்பேன், ஏனெனில் நான் சேனைகளின் கர்த்தராயிருக்கிறேன்; பாபிலோனிலிருக்கிற யாரையும் நான் தப்பிக்க விடுவதில்லை.
25 ஆகவே, நீங்கள் என்னை விசுவாசித்தால், இது பகல்பொழுதென அழைக்கப்படும்போது நீங்கள் பிரயாசப்படுவீர்கள்.
26 என்னுடைய ஊழியக்காரர்களாகிய, நீவல் கே. விட்னியும், சிட்னி கில்பர்ட்டும் இங்கே தங்களுடைய பண்டசாலையையும் தங்களுடைய ஆஸ்திகளையும் விற்கவேண்டுமென்பது தகாது; ஏனெனில் இந்த இடத்தில் தங்கியிருக்கிற சபையின் மீதியானவர்கள் சீயோன் தேசத்திற்கு போகும்வரை இது ஞானமாயிருக்காது.
27 இதோ, உங்களுடைய சத்துருக்களிடம் கடன்படுவது என்னுடைய நியாயப்பிரமாணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது அல்லது விலக்கப்பட்டிருக்கிறது;
28 ஆனால் இதோ, கர்த்தர் விரும்புகிறபோது அவர் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவருக்கு நன்மையாகத் தோன்றுகிறபோது செலுத்தலாமென்றும் எக்காலத்திலும் சொல்லப்படவில்லை.
29 ஆகவே, நீங்கள் பிரதிநிதிகளாயிருக்கும்போது, நீங்கள் கர்த்தரின் பணியிலிருக்கிறீர்கள்; கர்த்தரின் சித்தத்தின்படி நீங்கள் செய்கிறவை எதுவாயினும் அது கர்த்தரின் விவகாரம்.
30 இந்த கடைசி நாட்களில் அவருடைய பரிசுத்தவான்களுக்கு கொடுக்கவும், சீயோன் தேசத்திலே ஒரு சுதந்தரத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் உங்களை அவர் பணித்திருக்கிறார்.
31 இதோ, கர்த்தராகிய நான் உங்களுக்கு அறிவிக்கிறேன், அதை அவர்கள் பெறும்படியாக என்னுடைய வார்த்தைகள் நிச்சயமானவை, பொய்ப்பதில்லை.
32 ஆனால் அதனதன் காலத்தில் அனைத்தும் சம்பவிக்கவேண்டும்.
33 ஆகவே, நன்மை செய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்.
34 இதோ, இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்; மனம் பொருந்திச் செவிகொடுப்பவர்கள் இந்த கடைசி நாட்களில் சீயோன் தேசத்தின் நன்மையைப் புசிப்பார்கள்.
35 கலகக்காரர்கள் சீயோன் தேசத்திலிருந்து அறுப்புண்டு போவார்கள், வெளியே அனுப்பப்படுவார்கள், தேசத்தை சுதந்தரிக்கமாட்டார்கள்.
36 ஏனெனில், மெய்யாகவே நான் சொல்லுகிறேன், கலகக்காரர்கள் எப்பிராயீமின் இரத்த சம்பந்தமில்லாதவர்கள், ஆகவே அவர்கள் பிடிங்கி எறியப்படுவார்கள்.
37 இதோ, கர்த்தராகிய நான், ஒரு மலையின்மீது அல்லது ஒரு உயர்ந்த இடத்தில், தேசங்களை நியாயந்தீர்க்க நியாயாதிபதிகள் உட்கார்ந்திருப்பதைப்போல, இந்த கடைசி நாட்களில் என்னுடைய சபையை உண்டாக்கினேன்.
38 ஏனெனில், சீயோனைக் குறித்த சகல காரியங்களையும் சீயோனின் குடிகள் நியாயம் விசாரிப்பார்கள் என்பது சம்பவிக்கும்.
39 பொய்யர்களும் மாய்மாலக்காரர்களும் அவர்களால் கண்டுபிடிக்கப்படுவார்கள் மற்றும், அவர்கள் அப்போஸ்தலர்களோ, தீர்க்கதரிசிகளோ அல்லாதவர்கள் என அறியப்படுவார்கள்.
40 ஒரு நியாயாதிபதியாயிருக்கிற ஆயரும், அவருடைய ஆலோசகர்களும்கூட அவர்களுடைய உக்கிராணத்துவத்தில் அவர்கள் உண்மையில்லாதவர்களாய் இருந்தால் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவார்கள், மற்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக வைக்கப்படுவார்கள்.
41 ஏனெனில், இதோ, சீயோன் செழித்தோங்கும், கர்த்தரின் மகிமை அவள் மேலிருக்கும் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;
42 அவள் ஜனங்களுக்கு ஒரு கொடியாயிருப்பாள், வானத்தின் கீழேயுள்ள எல்லா தேசங்களிலிருந்தும் அவளிடத்தில் வருவார்கள்.
43 அவளினிமித்தம் பூமியின் எல்லா ஜாதிகளும் நடுங்கி, அவளுடைய கொடூரமானவர்களினிமித்தம் பயப்படும் நாள் வரும். கர்த்தர் இதைப் பேசினார். ஆமென்.