வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78


பாகம் 78

மார்ச் 1, 1832ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். அந்த நாளில் சபை விவகாரத்தைப்பற்றி விவாதிக்க தீர்க்கதரிசியும் பிற தலைவர்களும் கூடினார்கள். மிசௌரிக்கு பயணம் செய்யவும், ஒரு நிறுவனத்தை உருவாக்குவதால் சபையின் வர்த்தகக் காரியங்களை ஸ்தாபிக்கவும் வெளியீட்டு பணிகளைச் செய்யவும் தீர்க்கதரிசி, சிட்னி ரிக்டன் மற்றும் நீவல் கே. விட்னிக்கு முதலாவதாக இந்த வெளிப்படுத்தல் அறிவுறுத்தியது. அந்த நிறுவனம் இந்த முயற்சிகளையும், சீயோனை ஸ்தாபிப்பதற்காக நிதிகளை சேகரிப்தையும், தரித்திரர்களின் பலன்களையும் கண்காணிக்கும். ஏப்ரல் 1832ல் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஐக்கிய நிறுவனம் என அறியப்பட்டு 1834ல் கலைக்கப்பட்டது. (பாகம் 82 பார்க்கவும்). அதைக் கலைத்து சில நாட்களுக்குப் பின்பு ஜோசப் ஸ்மித்தின் வழிகாட்டுதலின் கீழ் வெளிப்படுத்தலில் வாக்கியத்தில் “தரித்திரருக்கான பண்டசாலையின் விவகாரங்கள்” என்பது “வர்த்தகம் மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள்” என மாற்றியமைக்கப்பட்டு “ஒழுங்கு முறை” என்ற வார்த்தை “நிறுவனம்” என மாற்றியமைக்கப்பட்டது.

1–4, பரிசுத்தவான்கள் ஒரு பண்டசாலையை அமைக்கவும், ஸ்தாபிக்கவும் வேண்டும்; 5–12, விவேகத்துடன் தங்கள் சொத்துக்களை பயன்படுத்துவது இரட்சிப்புக்கு நடத்தும்; 13–14, பூமியின் அதிகாரங்களிலிருந்து சபை சுதந்தரமாயிருக்கவேண்டும்; 15–16, மிகாவேல் (ஆதாம்) பரிசுத்தரின் (கிறிஸ்து) கீழ் பணிபுரிகிறான்; 17–22, விசுவாசமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் சகலவற்றையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

1 இப்படியாக சொல்லி, ஜோசப் ஸ்மித் இளையவரிடம் கர்த்தர் பேசினார், என்னுடைய சபையில் பிரதான ஆசாரியத்துவத்திற்கு நியமனம் செய்யப்பட்ட, கூடியிருக்கிறவர்களே நான் சொல்லுகிறதைக் கேளுங்கள் என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்;

2 எனக்கு முன்பாக நீங்கள் சமர்ப்பித்த அந்த காரியத்தில் இரட்சிப்பு உங்களுடையதாயிருக்கும்படிக்கு, உன்னதத்திலிருந்து உங்களை நியமனம் செய்த, ஞானமான வார்த்தைகளை உங்களுடைய காதுகளில் பேசுகிற அவருடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள், என கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

3 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நேரம் வந்தது, இப்பொழுது சமீபித்திருக்கிறது; இதோ, இந்த இடத்திலும் சீயோன் தேசத்திலும் என்னுடைய ஜனங்களாகிய சிறுமைப்பட்டோருக்கான பண்டசாலையின் காரியங்களை ஸ்தாபிப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் என்னுடைய ஜனங்களுக்கு ஒரு அமைப்பு இருக்கவேண்டுமென்பது அவசியமாயிருக்கிறது.

4 மனுஷனின் இரட்சிப்பிற்காகவும் பரலோகத்திலிருக்கும் உங்களுடைய பிதாவின் மகிமைக்காகவும் நீங்கள் ஒப்புக்கொடுத்த நோக்கத்தை முன்னேற்ற என்னுடைய சபைக்காக ஒரு நிரந்தர, நித்திய மற்றும் ஒழுங்கான நிர்வாகத்திற்காகவும்;

5 பரலோக காரியங்களின் கட்டுக்களில் நீங்கள் சமமாயிருக்கவும், ஆம், பரலோக காரியங்களைப் பெறுவதற்காக பூலோகத்துக்குரிய காரியங்களுக்காகவும்.

6 ஏனெனில் பூலோகத்துக்குரிய காரியங்களில் நீங்கள் சமமாயிருக்கவில்லையெனில் பரலோகக் காரியங்களைப் பெறுவதில் நீங்கள் சமமாயிருக்கமுடியாது;

7 ஏனெனில் சிலஸ்டியல் உலகத்தில் ஒரு இடத்தை நான் உங்களுக்குக் கொடுக்க நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட, உங்களிடமிருந்து எதிர்பார்க்கிற காரியங்களை செய்ய நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்தவேண்டும்.

8 இப்பொழுது, மெய்யாகவே கர்த்தர் சொல்லுகிறார், இந்த முறைமையில் ஒன்று சேர்ந்திருக்கிற உங்களால் என்னுடைய மகிமைக்காக சகல காரியங்களும் செய்யப்படவேண்டும் என்பது அவசியமாயிருக்கிறது;

9 அல்லது, வேறு வார்த்தைகளில் எனில், என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னியும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனும், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனும், சீயோனிலுள்ள பரிசுத்தவான்களோடு ஒரு ஆலோசனையில் அமரவேண்டும்;

10 இல்லையெனில், அவர்கள் குருடாக்கப்பட்டு, அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட காரியங்களை புரிந்து கொள்ளாதிருக்கும்படிக்கு, சத்தியத்திலிருந்து அவர்களுடைய இருதயங்களை திருப்ப சாத்தான் வகைதேடுகிறான்.

11 ஆகவே, மீறமுடியாத ஒரு நிபந்தனையால் அல்லது நித்திய உடன்படிக்கையால் ஆயத்தப்படவும் உங்களை ஒழுங்குபடுத்தவும் நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

12 அதை மீறுகிறவன் அவனுடைய அலுவலையும், சபையில் தன் நிலையையும் இழந்துபோய் மீட்பின் நாள் வரை சாத்தானின் தாக்குதலுக்கு ஒப்படைக்கப்படுவான்.

13 இதோ, இதன்படி உங்களை நான் ஆயத்தம் செய்கிற இதுதான் ஆயத்தம், நான் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை நீங்கள் நிறைவேற்றத்தக்கதாக நான் உங்களுக்கு அஸ்திவாரத்தையும் முன்மாதிரியையும் கொடுக்கிறேன்.

14 என்னுடைய நன்மையின் மூலமாக, உங்கள்மேல் இறங்குகிற உபத்திரவத்தை தாங்கமுடியாமல், சிலஸ்டியல் உலகத்திற்கு கீழே பிற சகல ஜந்துக்களுக்கும் மேலாக சபை தனியாக நிற்கும்;

15 உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற கிரீடத்திற்கு நீங்கள் வரும்படிக்கு, அநேக ராஜ்யங்களை அரசாள வைக்கப்பட்டீர்கள் என சீயோனின் பரிசுத்தரான, ஆதாம்-ஓந்தி-ஆமானின் அஸ்திவாரத்தை உண்டாக்கினவரான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;

16 மிகாவேலை உங்களுடைய அதிபதியாக நியமித்து, அவனுடைய பாதங்களை நிலைவரப்படுத்தி, அவனை உயரத்திலே வைத்து, நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமில்லாதவரான பரிசுத்தரின் ஆலோசனையின் வழிகாட்டுதலின் கீழ் இரட்சிப்பின் திறவுகோல்களை அவனுக்குக் கொடுத்தவர் யார்.

17 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் சிறுபிள்ளைகள், பிதா தன்னுடைய சொந்தக் கைகளில் எவ்வளவு ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார் மற்றும் உங்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிறார் என்று இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை;

18 இப்பொழுது உங்களால் சகல காரியங்களையும் தாங்க முடியவில்லை; ஆயினும் திடன் கொள்ளுங்கள் ஏனெனில் நான் உங்களை வழிநடத்துவேன். ராஜ்யம் உங்களுடையது, அதிலுள்ள ஆசீர்வாதங்கள் உங்களுடையது, நித்தியத்தின் ஐஸ்வரியம் உங்களுடையது.

19 நன்றியறிதலோடு சகல காரியங்களையும் ஏற்றுக்கொள்கிறவன் மகிமைப்படுத்தப்படுவான்; இந்த பூமியின் காரியங்கள் அவனுக்கு ஒரு நூறு மடங்காக, ஆம், அதிகமாகக் கூடக்கொடுக்கப்படும்.

20 ஆகவே, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட காரியங்களைச் செய்யுங்கள் என உங்கள் மீட்பரும், உங்களை அவர் எடுத்துக்கொள்ளும் முன்னே சகல காரியங்களையும் ஆயத்தப்படுத்தியிருக்கிற குமாரனான ஆமான் சொல்லுகிறார்;

21 ஏனெனில் நீங்களே முதற்பேறானவரின் சபை, அவர் உங்களை மேகத்திற்கு மேலே எடுத்து ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுடைய பங்கை நியமிப்பார்.

22 ஒரு விசுவாசமுள்ளவனும் ஞானமுள்ள உக்கிராணக்காரனுமானவன் சகல காரியங்களையும் சுதந்தரித்துக்கொள்வான், ஆமென்.