பாகம் 85
நவம்பர் 27, 1832ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மிசௌரியிலுள்ள இன்டிபென்டன்ஸில் வாழ்ந்துகொண்டிருந்த வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸூக்கு தீர்க்கதரிசி எழுதிய கடிதத்தின் சாரம் இந்த பாகம். சீயோனில் குடியேறி, ஆனால் தங்கள் சுதந்தரங்களைப் பரிசுத்தம்பண்ண கட்டளையைப் பின்பற்றாத, அப்படியாக சபையில் அமைக்கப்பட்ட ஒழுங்கின்படி தங்கள் சுதந்தரங்களைப் பெறாத அந்த பரிசுத்தவான்களைப்பற்றிய கேள்விகளுக்கு அது பதிலளிக்கிறது.
1–5, பரிசுத்தமாக்கப்படுதல் மூலமாக சீயோனின் சுதந்தரங்கள் பெறப்படவேண்டும்; 6–12, திராணியும் பெலமுமுடைய ஒருவன் சீயோனில் அவர்களுடைய சுதந்தரத்தை பரிசுத்தவான்களுக்குக் கொடுப்பான்.
1 ஒரு வரலாற்றையும், சீயோனில் நடக்கிற சபையின் சகல காரியங்கள் மற்றும் சொத்துக்களை பரிசுத்தமாக்கிய யாவரின், ஆயரிடமிருந்து சட்டப்படி சுதந்தரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின்,
2 மற்றும் அவர்களுடைய வாழ்க்கையின் தன்மையையும், அவர்களின் விசுவாசத்தையும், செயல்களையும் தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு மதமாறுபாட்டில் ஈடுபட்ட மதமாறுபாட்டுக்காரர்களின் ஒரு பொதுவான பதிவேட்டையும் பராமரிப்பது கர்த்தரால் நியமிக்கப்பட்டவனான அவரது எழுத்தரின் கடமையாகும்.
3 அவருடைய நியாயப்பிரமாணத்திற்கு ஏற்புடையதான அவர் கொடுத்திருக்கிற, பழிவாங்குதலின் மற்றும் சுட்டெரித்தலின் நாளுக்கு எதிராக அவர்களை ஆயத்தப்படுத்த, அவர் தம்முடைய ஜனங்கள் தசமபாகம் கொடுக்கச் செய்து, பரிசுத்தமாக்கப்படுதலால் தங்களுடைய சுதந்தரத்தைப் பெறாதவர்கள், தேவனின் ஜனங்களுடன் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்யவேண்டுமென்பது, தேவனின் சித்தத்துக்கும் கட்டளைகளுக்கும் எதிரானது.
4 அவர்களுடைய வம்சவரலாறு பாதுகாக்கப்பட வேண்டுமென்பதும் அல்லது சபையின் எந்த பதிவேடுகளிலோ அல்லது வரலாற்றிலோ அது கண்டுபிடிக்கப்படுகிறதாக இருப்பதும் தேவனின் சித்தத்திற்கும் கட்டளைக்கும் விரோதமானது.
5 அவர்களின் பெயர்களோ, தகப்பன்மார்களின் பெயர்களோ, அல்லது பிள்ளைகளின் பெயர்களோ தேவனின் நியாயப்பிரமாணத்தின் புஸ்தகத்தில் காணப்படக்கூடாது என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
6 ஆம், முணுமுணுக்கிறதும், சகல காரியங்களினூடே ஊடுருவுவதுமான அமர்ந்த மெல்லிய சத்தம் இப்படியாக சொல்லுகிறது, வழக்கமாக அது வெளிப்படும்போது என்னுடைய எலும்புகளை அடிக்கடி அது அதிரச்செய்து, சொல்லுகிறதாவது:
7 அந்தப்படியே கர்த்தரும் தேவனுமாகிய நான், பராக்கிரமமும் பெலசாலியுமானவன் வல்லமையின் செங்கோலை ஒருவன் பிடித்திருப்பான், திரையாக ஒளியின் வஸ்திரந்தரிப்பான், அவனுடைய வாய் நித்திய வார்த்தைகளை பேசும், அவனுடைய உள்ளம் சத்தியத்தின் ஊற்றாயிருக்கும், தேவனுடைய ஆலயத்தை ஒழுங்குபடுத்தவும் மற்றும் காணப்படுகிற பெயர்களுடைய பரிசுத்தவான்களுக்கு, தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் புஸ்தகத்தில் பதிக்கப்பட்டுள்ள அவர்களின் தகப்பன்மார்கள் மற்றும் பிள்ளைகளின் பெயர்களுடையவர்களுக்கு சுதந்தரங்களை சீட்டுப்போடுதலால் ஏற்பாடு செய்யவும், அவனை அனுப்புவேன்;
8 தேவனால் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட அந்த மனுஷன், தேவனின் பெட்டகத்தை உறுதிப்படுத்த அவனுடைய கைகளை நீட்டும்போது, தடியைப்போன்ற ஆபத்தான மின்னலால் அடிக்கப்பட்ட ஒரு மரத்தைப்போல மரணத்தின் தடியால் விழுவான்.
9 ஞாபகப் புஸ்தகத்தில் எழுதப்படாதவர்கள் அனைவரும் அந்த நாளில் எந்த சுதந்தரத்தையும் காணமாட்டார்கள், ஆனால் அவர்கள் முறிக்கப்படுவார்கள், அழுகையும் பற்கடிப்புமுள்ள இடத்தில் அவிசுவாசிகளுக்கு மத்தியில் அவர்களுடைய பங்கு அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
10 இந்தக் காரியங்களை நானாகச் சொல்லவில்லை; ஆகவே கர்த்தர் சொல்லுகிறதைப்போல அவர் நிறைவேற்றுவார்.
11 நியாயப்பிரமாணத்தின் புஸ்தகத்தில் எழுதப்படாததாகக் காணப்படுகிற பெயர்களுடைய பிரதான ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள், அல்லது மதமாறுபாடுள்ளவர்களாகக் காணப்படுகிறவர்கள், அல்லது சபையிலிருந்து அறுப்புண்டுப் போனவர்கள், அப்படியே இளநிலை ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களும், அல்லது அங்கத்தினர்களும், மிக உன்னதத்திலிருக்கிறவரின் பரிசுத்தவான்களுக்கு மத்தியில் அந்த நாளில் ஒரு சுதந்தரத்தைக் காணமாட்டார்கள்;
12 ஆகவே, எஸ்றா இரண்டாவது அதிகாரம், அறுபத்தி ஒன்று மற்றும் அறுபத்தி இரண்டாவது வசனத்தில் எழுதப்பட்டதாகக் காணப்படுகிறபடி, ஆசாரியனின் பிள்ளைகளுக்கு செய்யப்படுவதைப்போலவே அவர்களுக்கும் செய்யப்படும்.