“சோரமியர்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
சோரமியர்
இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வளர்த்தல்
சோரமியர்கள் என்று அழைக்கப்பட்ட நேபிய மக்களின் ஒரு குழு தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை. இது தீர்க்கதரிசி ஆல்மாவை வருத்தப்பட வைத்தது. அவர்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழி தேவனுடைய வார்த்தையை அவர்களுக்குப் போதிப்பதே என்பதை அவன் அறிந்திருந்தான். அமுலேக்குடனும் மற்றவர்களுடனும் சென்று அவர்களுக்குப் போதித்தான்.
சோரமியர்கள் தேவனைப் பற்றி அறிந்திருந்தார்கள், ஆனால் அவரது போதனைகளை மாற்றியிருந்தனர். அவர்கள் சிலைகளை வழிபட்டனர். மற்ற மக்களை விட தாங்கள் சிறந்தவர்கள் என்று நினைத்தார்கள். பணம் இல்லாதவர்களிடமும் அவர்கள் இழிவாக நடந்து கொண்டனர்.
ஆல்மா 31:1, 8–12, 24–25; 32:2–3
சோரமியர்கள் தங்கள் சபைகளின் மையத்தில் நிற்க ஒரு உயர்ந்த இடத்தைக் கட்டியிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக அதன் மீது நின்று ஜெபித்தனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெபிப்பார்கள். ஜெபத்தில், தேவனுக்கு உடல் இல்லை என்றும், இயேசு கிறிஸ்து உண்மையானவர் அல்ல என்றும் அவர்கள் கூறினர். தேவன் காப்பாற்றும் ஒரே மக்கள் தாங்கள் மட்டும்தான் என்று அவர்கள் சொன்னார்கள்.
ஆல்மா சோரமிய மக்களை நேசித்தான், அவர்கள் தேவனையும் இயேசுவையும் பின்பற்றும்படி விரும்பினான். தனக்கும் தன்னுடன் வந்த மற்றவர்களுக்கும் சோரமியர்களுக்குப் போதிக்க உதவும்படி தேவனிடம் ஜெபித்தான். ஆல்மாவும் அவனோடிருந்தவர்களும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் சென்று தேவ வல்லமையால் போதித்தார்கள்.
சில சோரமியர்கள் சோகமாக இருந்தனர். நல்ல உடைகள் இல்லாததால் அவர்கள் சபைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தேவனை வழிபட விரும்பினர், ஆனால் அவர்கள் சபைகளுக்குள் செல்ல முடியாதபோது எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆல்மாவிடம் கேட்டார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் தேவன் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்று ஆல்மா அவர்களுக்குப் போதித்தான்.
மக்கள் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்று ஆல்மா சொன்னான். அவன் தேவனுடைய போதனைகளை ஒரு விதைக்கு ஒப்பிட்டான். தேவனுடைய போதனைகளை மக்கள் தங்கள் இருதயங்களில் விதைத்தால், அந்த விதை முளைத்து, தேவனுடைய போதனைகள் உண்மையானவை என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் தங்கள் விசுவாசத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு விசுவாசிக்கும் விருப்பம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்.
பின்பு அமுலேக் தன் பிள்ளைகளுக்கான தேவனுடைய திட்டத்தைப் பற்றி ஜனங்களுக்குப் போதித்தான். இயேசுவின் மூலம் அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட முடியும் என்று அவன் அவர்களிடம் சொன்னான். தேவனிடம் ஜெபிக்கவும் அவன் அவர்களுக்குக் போதித்தான், தேவன் அவர்களுக்கு உதவி செய்து பாதுகாப்பார் என்றும் சொன்னான்.
ஏழைகளாக இருந்த சோரமியர்களில் பலர் ஆல்மாவும் அமுலேக்கும் போதித்ததை நம்பினர். ஆனால் சோரமியர்களின் தலைவர்கள் கோபமடைந்தனர். அவர்கள் விசுவாசிகள் அனைவரையும் நகரத்தை விட்டு வெளியேற்றினர்.
விசுவாசிகள் அந்தி-நேபி-லேகியருடன் வாழச் சென்றனர். அந்தி-நேபி-லேகியர் அவர்களுக்கு உணவு, உடை மற்றும் நிலத்தைக் கொடுத்து அவர்களுக்கு ஊழியம் செய்தார்கள், அல்லது சேவை செய்தார்கள்.