“சாமுவேல் தீர்க்கதரிசி,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
சாமுவேல் தீர்க்கதரிசி
இயேசுவின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றி போதித்தல்
சாமுவேல் என்ற லாமானிய தீர்க்கதரிசி சாரகெம்லாவில் உள்ள நேபியர்களுக்குப் போதிக்கச் சென்றான். அவன் மனந்திரும்புதலைப் பற்றி போதித்தான். நேபியர்கள் செவிகொடுக்கவில்லை, அவனை நகரத்திற்கு வெளியே தள்ளினர்.
சாமுவேல் தன் மக்களிடம் திரும்பிச் செல்லவிருந்தான். ஆனால் கர்த்தர் அவனை நேபியர்களுக்கு போதிக்கத் திரும்பும்படி கூறினார்
கர்த்தர் சாமுவேலிடம் என்ன சொல்ல வேண்டும் என்று அவனிடம் சொன்னார். சாமுவேல் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான் அவன் சாரகெம்லாவுக்குத் திரும்பினான். ஆனால் நேபியர்கள் அவனை நகரத்திற்குள் அனுமதிக்கவில்லை.
சாமுவேல் நகரின் மதில் மேல் ஏறினான். கர்த்தர் தன் இருதயத்தில் வைத்த காரியங்களைச் சொன்னான். மக்கள் கெட்ட காரியங்களைச் செய்வதால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தான். மனந்திரும்புதலும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும் இருந்தால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றான். இன்னும் ஐந்து வருடங்களில் தேவ குமாரனாகிய இயேசு பிறப்பார் என்றான்.
ஏலமன் 13:4–11; 14: 2, 8, 12–18
இயேசு பிறப்பிற்கான அறிகுறிகள் இருக்கும் என்று சாமுவேல் கூறினான். அறிகுறிகளைத் தேடும்படி அவன் மக்களிடம் கூறினான். ஒரு இருளே இல்லாத இரவு ஒரு அறிகுறியாயிருக்கும். ஒரு புதிய நட்சத்திரம் மற்றும் பல அற்புதமான விஷயங்கள் வானத்தில் தோன்றும் என்பது மற்ற அறிகுறிகளாகும்.
மக்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சாமுவேல் விரும்பினான். இயேசு மரித்து உயிர்த்தெழுவதால், மனந்திரும்பும் பட்சத்தில் எல்லா மக்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவன் சொன்னான்.
இயேசுவின் மரணத்திற்கான அறிகுறிகள் இருக்கும் என்று சாமுவேல் கூறினான். சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ மக்கள் பார்க்க முடியாது. மூன்று நாட்களுக்கு வெளிச்சம் இருக்காது.
இடியும் மின்னலும் இருக்கும். பூகம்பங்கள் வரும், நகரங்கள் அழிக்கப்படும்.
ஒரு சில மக்கள் சாமுவேலை நம்பினர், ஆனால் பல நேபியர்கள் அவன் மீது கோபமடைந்தனர். அவன் மீது கற்களை வீசி அம்புகளை எய்தனர். மதில் மேல் நின்றபோது சாமுவேலை கர்த்தர் பாதுகாத்தார். கற்கள் மற்றும் அம்புகள் எதனாலும் அவனைத் தாக்க முடியவில்லை.
சாமுவேலை யாராலும் அடிக்க முடியாதபோது, இன்னும் பலர் அவனுடைய வார்த்தைகளை நம்பினார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இன்னும் கோபமாக இருந்தனர். சாமுவேலை பிடித்து கட்டி வைக்க முயன்றனர். சாமுவேல் தப்பித்து வீட்டுக்குச் சென்றான். அவன் தனது மக்களுக்கு தொடர்ந்து போதித்தான்.
சாமுவேலை நம்பிய நேபியர்கள் மனந்திரும்பி நேபி தீர்க்கதரிசியால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள் மற்றும் சாமுவேல் அவர்களிடம் சொன்ன இயேசு பிறப்பின் அறிகுறிகளைக் கண்டார்கள்.