“தலைவன் மரோனியும், பகோரனும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
தலைவன் மரோனியும், பகோரனும்
தேவனிடமிருந்து பெலன்
நேபியர்களும் லாமானியர்களும் போரில் ஈடுபட்டனர். மரோனி நேபிய படைகளின் தலைவனாக இருந்தான். நேபிய தலைவர்கள் போதுமான வீரர்களையோ உணவையோ அனுப்பவில்லை. மரோனி கோபமடைந்து நேபியர்களின் தலைவனான பகோரனுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
அவனது கடிதத்தில், ஏன் உதவி அனுப்பவில்லை என்று மரோனி பகோரனிடம் கேட்டான். பகோரன் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறான் என்று மரோனி நினைத்தான். மரோனி தனது மக்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினான்.
படைகளுக்கு உதவி கிடைக்கவில்லை என்று பகோரன் வருத்தப்பட்டான். அவன் மரோனிக்கு உதவ விரும்பினான், ஆனால் அவனால் முடியவில்லை. நேபியர்களில் சிலர் அவனுக்கு எதிராக சண்டையிட்டனர்.
அந்த நேபியர்கள் ராஜ மனுஷர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென அதிகாரம் பெற்று மக்களை ஆட்சி செய்ய விரும்பினர். அவர்கள் பகோரனிடமிருந்து அரசாங்கத்தை பிடுங்கிக் கொண்டனர்.
அவர்களுக்கு அவன் உதவ முடியும்படிக்கு பகோரன் நேபியரை தொடர்ந்து வழிநடத்த விரும்பினான். மரோனியைப் போலவே, நேபியர்கள் தேவனைப் பின்பற்றி தங்கள் சுதந்திரத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று அவன் விரும்பினான். அவர்கள் யாருடனும் சண்டையிட வேண்டியதில்லை என்று அவன் விரும்பினான். ஆனால் தனது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுமானால் அவன் சண்டையிடவும் விருப்பமுள்ளவனாக இருந்தான்.
பகோரன் நேபியர்களிடம் அவர்களின் குடும்பங்கள், அவர்களின் சுதந்திரம் மற்றும் தேவனை வணங்குவதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாக்க சண்டையிட தனக்கு உதவுமாறு கேட்டான். சரியானதற்காக அவர்கள் சண்டையிட தெரிந்துகொள்ளும்போது தேவனுடைய ஆவியானவர் அவர்களோடு இருப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். பல நேபியர்கள் தங்கள் நாட்டைக் காக்க பகோரனுக்கு உதவ வந்தனர்.
பகோரன் மரோனிக்கு ஒரு கடிதம் எழுதினான். அவன் மரோனி மீது கோபமாயிருக்கவில்லை நடந்துகொண்டிருந்த அனைத்தையும் அவன் மரோனியிடம் கூறினான். ராஜமனுஷரை எதிர்த்துச் சண்டையிட தனக்கு உதவுமாறு அவன் மரோனியைக் கேட்டுக்கொண்டான். அவர்கள் தேவனைப் பின்பற்றினால் பயப்படத் தேவையில்லை என்று பகோரன் அறிந்திருந்தான். தேவன் அவர்களைப் பாதுகாத்து உதவி செய்வார்.
பகோரனின் விசுவாசத்தினிமித்தம் மரோனி நம்பிக்கையால் நிரப்பப்பட்டான். ஆனால் சில நேபியர்கள் தங்கள் சொந்த மக்களோடு சண்டையிட்டு தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது. மரோனி ஒரு படையை அழைத்துக்கொண்டு பகோரனுக்கு உதவச் சென்றான். அவன் சென்ற இடமெல்லாம் சுதந்திரக்கொடியை உயர்த்திப் பிடித்தான். ஆயிரக்கணக்கான நேபியர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க சண்டையிட முடிவு செய்தனர்.
மரோனியும் பகோரனும் தங்கள் படைகளைக் கொண்டு ராஜ மனுஷரை தோற்கடித்தனர். பகோரன் மீண்டும் நேபியர்களின் தலைவனானான். மரோனி நேபிய படைகளுக்கு உதவ பல மனிதர்களை அனுப்பினான். படைகளுக்கு உணவையும் அனுப்பினான். இப்போது நேபியர்கள் ஒன்றிணைந்ததால், அவர்கள் பல போர்களில் வெற்றி பெற்றனர். அவர்கள் பல நேபிய நகரங்களை லாமானியரிடமிருந்து மீட்டனர்.