“சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும்
கடினமான காலங்களில் கர்த்தர் மீது விசுவாசம்
அம்மோனிகா நகரில் ஆல்மாவும் அமுலேக்கும் சுவிசேஷத்தைப் போதித்தார்கள். சிலர் கர்த்தரை நம்பி மனந்திரும்பினார்கள். ஆனால் பலர் ஆல்மா மற்றும் அமுலேக் மீது கோபமடைந்து அவர்களை அழிக்க விரும்பினர். கோபமடைந்த மக்கள் ஆல்மாவையும் அமுலேக்கையும் கட்டிப்போட்டு அந்த இருவரையும் நகரின் தலைமை நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர்.
தலைமை நீதிபதி தனது மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்று நம்பவில்லை. மக்கள் ஆல்மா மற்றும் அமுலேக் மீது கோபமடைந்தனர். ஆல்மாவும் அமுலேக்கும் போதித்ததை நம்பியவர்களை நகரத்தை விட்டு வெளியேறச் செய்தார்கள். பின்னர் கர்த்தரை நம்பிய பெண்களையும் குழந்தைகளையும் தீயில் போட்டனர்.
வலியில் மக்களைக் கண்டு அமுலேக் மிகவும் வருத்தப்பட்டான். தேவனின் வல்லமையைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்றும்படி அவன் ஆல்மாவிடம் கேட்டான். ஆனால் தேவனின் ஆவி தன்னை அனுமதிக்காது என்று ஆல்மா கூறினான். பெண்களும் குழந்தைகளும் கர்த்தருடன் இருப்பார்கள் என்று அமுலேக்கிடம் கூறினான். அவர்களைக் கொன்றவர்களைக் கர்த்தர் நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்காததால் தலைமை நீதிபதி ஆல்மாவையும் அமுலேக்கையும் கேலி செய்தான். அவன் ஆல்மாவையும் அமுலேக்கையும் சிறைக்கு அனுப்பினான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைமை நீதிபதி தனது பொய்யான ஆசாரியர்களுடன் சிறைக்குச் சென்றான். அவர்கள் பல கேள்விகள் கேட்டார்கள். ஆனால் ஆல்மாவும் அமுலேக்கும் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை.
தலைமை நீதிபதியும் அவனுடைய ஆசாரியர்களும் ஆல்மாவுக்கும் அமுலேக்கிற்கும் தீமை செய்தார்கள். அவர்கள் ஆல்மாவிற்கும் அமுலேக்கிற்கும் உணவு அல்லது தண்ணீர் கொடுக்கவில்லை. ஆல்மாவும் அமுலேக்கும் கற்பித்ததை அவர்கள் கேலி செய்தனர்.
ஆல்மாவும் அமுலேக்கும் பல நாட்கள் அவதிப்பட்டனர். தலைமை நீதிபதி மீண்டும் தனது ஆசாரியர்களுடன் வந்தான். அவன் ஆல்மா மற்றும் அமுலேக்கிடம் தேவனின் வல்லமை இருந்தால், அவர்கள் கட்டியிருந்த கயிறுகளை அறுக்க வேண்டும் என்று கூறினான். அப்போது அவன் அவர்களை நம்புவான்.
ஆல்மாவும் அமுலேக்கும் தேவனின் வல்லமையை உணர்ந்தனர். அவர்கள் எழுந்து நின்றார்கள். ஆல்மா கர்த்தர் மீது நம்பிக்கை கொண்டிருந்தான், கயிறுகளை அறுக்கும் வல்லமையைக் கேட்டான்.
ஆல்மாவும் அமுலேக்கும் கயிறுகளை அறுத்தனர். தலைமை நீதிபதியும் அவனுடைய ஆசாரியர்களும் பயந்தார்கள். அவர்கள் ஓட முயன்றனர், ஆனால் பின்னர் தரை நடுங்கத் தொடங்கியது.
சிறைச்சாலையின் சுவர்கள் தலைமை நீதிபதி மற்றும் அவனது ஆசாரியர்கள் மீது விழுந்தன, அவர்கள் இறந்தனர். ஆனால் கர்த்தர் ஆல்மாவையும் அமுலேக்கையும் பாதுகாப்பாக வைத்திருந்தார். சத்தம் கேட்டு மக்கள் ஓடி வந்து என்ன நடக்கிறது என்று பார்த்தனர். ஆல்மாவும் அமுலேக்கும் மட்டும் சிறையிலிருந்து வெளியேறினர். அல்மாவையும் அமுலேக்கையும் கண்டு மக்கள் மிகவும் பயந்து ஓடினர்.