“இயேசு மக்களை சந்தித்தல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
இயேசு மக்களை சந்தித்தல்
அவரை நம்ப ஒவ்வொருவருக்கும் உதவுதல்
மக்களில் அநேகர் தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடுக்கவில்லை. ஆனால் தீர்க்கதரிசிகள் போதித்ததை சில மக்கள் நம்பினர். இந்த விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அறிகுறிகளுக்காக காத்திருந்தனர்.
இயேசு எருசலேமில் இறந்த பிறகு, அறிகுறிகள் தொடங்கின. அமெரிக்காவில், மூன்று மணி நேரம் புயல்கள், பூகம்பங்கள் மற்றும் தீ ஏற்பட்டன. நகரங்கள் அழிக்கப்பட்டன, அநேக மக்கள் இறந்தனர். பின்னர் மூன்று நாட்களுக்கு முழு இருள் சூழ்ந்தது.
இருள் அவ்வளவு அடர்த்தியாக இருந்ததால் மக்களால் சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. அவர்களால் நெருப்பு மூட்டவோ, விளக்குகளை ஏற்றவோ கூட முடியவில்லை.
இன்னும் உயிருடன் இருந்த பலர் மிகவும் சோகமாகவும் பயத்துடனும் இருந்தனர். அவர்கள் அழுது தாங்கள் முன்னதாகவே மனந்திரும்பவில்லையே என்று வருந்தினார்கள்.
திடீரென்று அவர்களுக்கு ஒரு குரல் கேட்டது. இயேசு தாமே அவர்களிடம் பேசினார். மனந்திரும்பிய ஒவ்வொருவரையும் குணமாக்குவதாக அவர் வாக்குறுதி அளித்தார். இயேசு அவர்களிடம், தாம் இறந்துவிட்டதாகவும், எல்லா ஜனங்களுக்கும் உதவி செய்வதற்காக உயிரோடு வந்திருப்பதாகவும் சொன்னார். மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, அழுவதை நிறுத்தினர். பல மணி நேரம் தேசத்தில் அமைதி நிலவியது.
இயேசு மீண்டும் பேசினார். மக்கள் தம்மைப் பின்பற்ற தீர்மானித்தால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார் என்று அவர் அவர்களிடம் கூறினார். இருள் விலகியது, பூமி அதிர்வதை நிறுத்தியது. மக்கள் மகிழ்ந்து இயேசுவைப் புகழ்ந்தார்கள்.
ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, உதாரத்துவஸ்தலத்தில் இருந்த ஆலயத்திற்கு அநேக மக்கள் வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய மரணத்தின் அறிகுறிகளைப் பற்றியும் பேசினார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, பரலோகத்திலிருந்து ஒரு அமைதியான குரலைக் கேட்டார்கள். முதலில் அவர்களுக்குப் புரியவில்லை. பிறகு மறுபடியும் கேட்டார்கள்.
மூன்றாந்தரம் அந்தச் சத்தத்தைக் கேட்டபோது வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். பரலோக பிதா தாமே பேசிக் கொண்டிருந்தார். அவர் தனது குமாரனைப் பார்க்கவும் அவருக்குச் செவிகொடுக்கவும் மக்களிடம் கூறினார். அப்போது வெள்ளை அங்கி அணிந்த ஒரு மனிதன் வானத்திலிருந்து இறங்கி வருவதை மக்கள் கண்டார்கள்.
அந்த மனிதர் மக்கள் நடுவில் நின்று, “நானே இயேசு கிறிஸ்து” என்றார். மக்கள் தரையில் விழுந்தனர். அனைவருக்காகவும் பாடுபட்டு மரித்தாக இயேசு அவர்களிடம் கூறினார். அவர் உலகத்தின் இரட்சகர் என்பதை அறியும்படியாக அவரது கைகள், கால்கள் மற்றும் விலாவில் உள்ள தழும்புகளைத் தொடும்படி அவர் மக்களை அழைத்தார்.
மக்கள் ஒவ்வொருவராக இயேசுவிடம் வந்தனர். அவருடைய கைகள், கால்கள் மற்றும் விலாவில் உள்ள தழும்புகளை அவர்கள் தங்கள் கண்களால் பார்த்தார்கள், தங்கள் கைகளால் உணர்ந்தார்கள். வரப்போகிறவர் என்று தீர்க்கதரிசிகள் சொன்னவர் அவரே என்பதை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். அவர் உலகத்தின் இரட்சகர் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மக்கள் இயேசுவின் பாதத்தில் விழுந்து அவரை வணங்கினார்கள்.