“நேபி தீர்க்கதரிசி” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
நேபி தீர்க்கதரிசி
கர்த்தரிடமிருந்து பெரும் வல்லமையைப் பெறுதல்
காதியாந்தன் திருடர்கள் என்று அழைக்கப்படும் ஒரு குழு சாரகெம்லா நகரத்தை ஆட்சி செய்தது. கெட்ட காரியங்களைச் செய்ய ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக அவர்கள் வாக்குக் கொடுத்தார்கள். பணத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக மக்களை கொள்ளையடித்தனர், துன்புறுத்தினர். பெரும்பாலான மக்கள் கொள்ளையர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்கள் பணக்காரர்களாக இருக்க விரும்பினர்.
தீர்க்கதரிசி நேபி சாரகெம்லாவில் வாழ்ந்தான். தேவனின் கட்டளைகளை மக்கள் பின்பற்றாததைக் குறித்து நேபி வருத்தப்பட்டதால் அவன் தேவனிடம் ஜெபித்தான். தேவன் தங்களுக்காகச் செய்த அனைத்தையும் நினைவுகூரும்படி நேபி மக்களைக் கேட்டான். ஆனால் அநேக மக்கள் கேட்கவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிவதைவிட பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அதிக அக்கறை காட்டினார்கள்.
கொள்ளையர்களைப் பற்றி நேபி மக்களை எச்சரித்தான். அவர்கள் மனந்திரும்ப வேண்டியிருக்கிறது என்று அவன் சொன்னான். நேபிய நியாயாதிபதிகளில் சிலர் கொள்ளையர்களோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் நேபி மீது கோபமடைந்து, அவன் பொய் சொல்கிறான் என்று சொன்னார்கள். மக்களும் நேபியின் மீது கோபமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு அநேக காரியங்களைச் சொல்லுகிறார் என்று நேபி சொன்னான். எல்லா தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி போதித்தார்கள் என்று நேபி அவர்களிடம் சொன்னான். மக்கள் மனந்திரும்பாவிட்டால் எருசலேம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசிகள் எச்சரித்ததாக அவன் கூறினான். எருசலேம் அழிக்கப்பட்டதை அவர்கள் நினைவுகூர அவன் உதவினான்.
அடுத்த நாள், நியாயாதிபதிகள் நேபியை சிக்கவைக்க கேள்விகளைக் கேட்டனர். அவர்கள் மத்தியில் இருந்த தீமையைப்பற்றி நேபி அவர்களிடம் சொன்னான். சிலர் நேபியை நம்பினார்கள், அவன் ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்தார்கள்.
மற்றவர்கள் நம்பவில்லை. அனைவரும் வாக்குவாதம் செய்து விட்டு கலைந்து சென்றனர். கர்த்தர் தனக்குப் போதித்ததைப் பற்றி நேபி நினைத்தான். மக்களின் மோசமான செயல்கள் நிமித்தமாக அவன் வருத்தப்பட்டான்.
கர்த்தர் நேபியிடம் பேசினார். நேபி மக்களுக்குப் போதித்ததற்காக அவர் மகிழ்ச்சியடைந்தார். நேபி எவ்வாறு கீழ்ப்படிதலுள்ளவனாக இருந்தானோ, அதனால் பூமியிலும் பரலோகத்திலுள்ளவைகளின் மீதும் கர்த்தர் அவனுக்கு விசேஷித்த வல்லமையைக் கொடுத்தார். மக்கள் மனந்திரும்ப உதவ மட்டுமே நேபி வல்லமையைப் பயன்படுத்துவான் என்று கர்த்தர் அறிந்திருந்தார்.
மக்களிடம் திரும்பிச் சென்று மனந்திரும்பும்படி அவர்களிடம் சொல்லுமாறு கர்த்தர் நேபியிடம் கூறினார். நேபி உடனே சென்றான். ஆனால் மக்கள் அவன் மேல் கோபமடைந்தனர், செவிகொடுக்கவும் இல்லை.
அவர்கள் நேபியை சிறையில் அடைக்க முயன்றனர். ஆனால் தேவனுடைய ஆவியானவர் நேபி தப்பிக்க உதவினார்.
நேபி தேவனுடைய வார்த்தையை போதித்துக் கொண்டே இருந்தான். அப்போதும் மக்கள் கேட்கவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யவும், சண்டையிடவும் தொடங்கினர். கொள்ளையர்கள் சண்டையை மேலும் மோசமாக்கினர். சீக்கிரத்தில், ஒவ்வொரு நகரத்திலும் போர்கள் நடைபெற்றன. அநேக மக்கள் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். நேபி சோகமாக இருந்தான். போர்களால் மக்கள் அழிக்கப்படுவதை அவன் விரும்பவில்லை
மக்கள் கர்த்தரை நினைத்து மனந்திரும்பும்படி ஒரு பெரிய பஞ்சத்தை உண்டாக்கும்படி நேபி தேவனிடம் கேட்டான். பல ஆண்டுகளாக மழை இல்லை. நிலம் வறண்டிருந்தது, பயிர்கள் வளர முடியவில்லை. மக்கள் பசியாயிருந்தார்கள். அவர்கள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு கர்த்தரை நினைக்க ஆரம்பித்தார்கள். மக்கள் மனந்திருந்தினர், கொள்ளையர்களை விரட்டினர்.
கர்த்தரிடம் ஜெபிக்கும்படி மக்கள் நேபியிடம் கேட்டார்கள். அவர்கள் மனந்திரும்பியதையும், கொள்ளையர்கள் போய்விட்டதையும் நேபி கண்டான். அவன் கர்த்தரிடம் மழையை அனுப்பும்படி கேட்டான். நேபியின் ஜெபத்திற்குக் கர்த்தர் பதிலளித்தார். மழை வந்தது, பயிர்கள் வளர ஆரம்பித்தன. மக்கள் தேவனுக்கு நன்றி சொன்னார்கள். நேபி ஒரு தீர்க்கதரிசி என்றும், தேவனிடமிருந்து மிகுந்த வல்லமை பெற்றிருந்தான் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.