“யோனா தீர்க்கதரிசி,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2021)
“யோனா தீர்க்கதரிசி,” பழைய ஏற்பாட்டு கதைகள்
யோனா 1–4
யோனா தீர்க்கதரிசி
கர்த்தருடைய இரக்கத்தை நம்ப கற்றுக்கொள்ளுதல்
யோனா ஒரு தீர்க்கதரிசி. நினிவேயில் உள்ள மக்கள் மனந்திரும்பாவிட்டால் அவர்களின் பட்டணம் அழிக்கப்படும் என்று எச்சரிக்கும்படி கர்த்தர் அவனிடம் சொன்னார்.
ஆனால் நினிவே மக்கள் இஸ்ரவேலருக்கு எதிரிகளாக இருந்தார்கள். யோனா அவர்களுக்கு பிரசங்கிக்க விரும்பவில்லை. எனவே அவன் நினிவேவிலிருந்து வெகு தொலைவில் பயணம் செய்ய ஒரு கப்பலில் ஏறினான்.
யோனா கப்பலில் இருந்தபோது, ஒரு பெரிய புயல் வந்தது. கப்பலில் இருந்த மனிதர்கள் தங்கள் உயிருக்கு பயந்தார்கள். அவர்களைக் காப்பாற்ற கர்த்தரிடம் ஜெபிக்கும்படி அவர்கள் யோனாவிடம் கேட்டார்கள்.
கர்த்தர் என்ன செய்ய வேண்டுமென்று அவனைக் கேட்டாரோ அதை விட்டு அவன் தப்பி ஓடினதால், கர்த்தர் புயலை அனுப்பினார் என யோனா அறிந்திருந்தான். யோனா கப்பலில் இருந்த மக்களைக் காப்பாற்ற விரும்பினான். அவர்கள் அவனை கடலில் தூக்கி எறிந்தால், புயல் நின்றுவிடும் என்று அவன் கூறினான்.
அவர்கள் யோனாவை கப்பலிலிருந்து தூக்கி எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை தரைக்கு ஓட்ட முயன்றனர், ஆனால் புயல் மிகப் பெரியதாயிருந்தது. கடைசியில், அவர்கள் யோனாவைக் கடலில் தூக்கி எறிந்தனர்.
புயல் நின்றது. ஆனால் பின்னர் யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது.
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் மீனின் வயிற்றுக்குள் இருந்தான். அந்த நேரத்தில், யோனா ஜெபித்து மனந்திரும்பினான். அவன் சரியானதைச் செய்து கர்த்தருக்குச் செவிகொடுக்க விரும்பினான். கர்த்தர் யோனாவின் ஜெபங்களைக் கேட்டு, மீன் யோனாவை உலர்ந்த நிலத்தில் துப்பும்படிச் செய்தார்.
நினிவே மக்களுக்கு பிரசங்கிக்கும்படி கர்த்தர் மீண்டும் யோனாவிடம் சொன்னார். இந்த முறை யோனா கீழ்ப்படிந்தான். அவன் நினிவேவுக்குச் சென்று மக்களை மனந்திரும்பும்படியும் அல்லது கர்த்தர் அவர்களுடைய பட்டணத்தை அழிப்பார் என்றும் சொன்னான். ராஜாவும் அவருடைய மக்களும் மனந்திரும்பினார்கள். கர்த்தர் அவர்களை மன்னித்தார், நினிவேவை அழிக்கவில்லை.
ஆனால் மக்கள் அழிக்கப்படவில்லை என்பதால் யோனா ஏமாற்றமடைந்தான். அவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று அவன் நினைக்கவில்லை.
யோனாவுக்கு ஒரு பாடம் கற்பிக்க, கர்த்தர் யோனாவை வெயிலில் இருந்து காக்க நிழலிட ஒரு செடியை வளர்த்தார். பின்னர் செடி பட்டுப்போனது, யோனா செடிக்காக வருத்தப்பட்டான்.
அவருடைய பிள்ளைகளைப்பற்றி கர்த்தர் யோனாவுக்கு ஒரு பாடம் கற்பித்தார். மக்கள் மனந்திரும்பாதபோது அவன் துக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மனந்திரும்பும்போது அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் யோனா கற்றுக்கொண்டான்.