“எகிப்தின் வாதைகள்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“எகிப்தின் வாதைகள்,” பழைய ஏற்பாட்டு கதைகள்
யாத்திராகமம் 4–5; 7–12
எகிப்தின் வாதைகள்
கர்த்தருக்கு எதிரான பார்வோனின் தேர்ந்தெடுப்புகள்
மோசே கர்த்தரை நம்பி எகிப்துக்குத் திரும்பினான். மோசேயும் அவனுடைய சகோதரனான ஆரோனும் பார்வோனிடம் சென்று இஸ்ரவேலரை விடுவித்து எகிப்தை விட்டு வெளியேற அனுமதிக்கும்படி அவனிடம் கேட்டார்கள். பார்வோன் கோபமடைந்து மறுத்துவிட்டான். இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினான்.
யாத்திராகமம் 4: 10–16; 5: 1–18
பார்வோன் கர்த்தருக்கு செவிசாய்க்காததால், எகிப்தியர்கள் பயங்கரமான வாதைகளால் சபிக்கப்பட்டார்கள். முதலில், எகிப்தில் உள்ள நீர் அனைத்தும் இரத்தமாக மாறியது. இஸ்ரவேலரை விடுவிக்கும்படி மோசே மீண்டும் பார்வோனிடம் கேட்டான், ஆனால் பார்வோன் முடியாது என்று கூறினான்.
அடுத்து, கர்த்தர் தவளைகளை எகிப்துக்கு அனுப்பினார். அவை எல்லா இடங்களிலும் இருந்தன. தவளைகள் போய்விட்டால் இஸ்ரவேலரை விடுவிப்பதாக பார்வோன் கூறினான். கர்த்தர் தவளைகளை வெளியேறச் செய்தார், ஆனால் பார்வோன் இஸ்ரவேலரை விடவில்லை. பின்னர் கர்த்தர் பேன் மற்றும் ஈக்களை அனுப்பினார்.
அடுத்து, எகிப்தியர்களின் பண்ணை விலங்குகள் அனைத்தும் இறந்தன, ஆனால் இஸ்ரவேலரின் விலங்குகள் எதுவும் இறக்கவில்லை. பின்னர் எகிப்தியர்களின் உடலில் வலிமிக்க புண்கள் ஏற்பட்டன.
ஆலங்கட்டி மற்றும் நெருப்புடன் ஒரு பெரிய புயலும் எகிப்துக்கு வந்தது. இது பயங்கர அழிவை ஏற்படுத்தியது.
பார்வோன் இன்னும் இஸ்ரவேலரை விடவில்லை. கர்த்தர் வெட்டுக்கிளிகளை அனுப்பினார், அவை எல்லா மக்களின் உணவையும் சாப்பிட்டன.
பின்னர் மூன்று நாட்கள் இருள் இருந்தது. பல வாதைகளின் போது, வாதைகள் நிறுத்தப்பட்டால் இஸ்ரவேலரை விடுவிப்பதாக பார்வோன் உறுதியளித்தான், ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் பொய் சொன்னான்.
ஒன்பது வெவ்வேறு வாதைகளுக்குப் பிறகு, பார்வோன் இன்னும் இஸ்ரவேலரை விடவில்லை. மற்றொரு பயங்கரமான வாதை வரும் என்று கர்த்தர் மோசேயிடம் சொன்னார். இஸ்ரவேலர்கள் தங்கள் சுதந்திரத்திற்காகக் காத்திருந்தபோது கர்த்தர் வழிநடத்திப் பாதுகாத்தார்.